சிந்தனைச்சித்தர் சிவானந்தர்

சிந்தனைச்சித்தர் சிவானந்தர்

Profession சமயம்

Biography

நெல்லை, பத்தமடையில் வெங்கு ஐயர்-பார்வதியம்மாள் தம்பதியருக்கு 08.09.1887 அன்று
பிறந்தார். இயற்பெயர் குப்புசாமி. தந்தை எட்டையபுரம் சமஸ்தானத்தில் வருமான வரித்துறை
அதிகாரி.

திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி யில் 1905-இல் இண்டர்மீடியட் தேர்வில் தேர்ச்சி அடைந்து, தஞ்சை
மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் பயின்றார். படிக்கின்ற காலத்திலேயே அறுவை சிகிச்சை
அறைக்குள், பெரிய மருத்துவர்கள் தங்களுக்கு உதவி மருத்துவராக குப்புசாமியை
ஏற்குமளவுக்குத் திறமை பெற்றிருந்தார்.

மாணவப் பருவத்திலேயே ‘அம்புரோஷியா’ (அமிர்தம்) என்ற இதழைத் தொடங்கினார். அவரது
மருத்துவம் சார்ந்த கட்டுரைகளுடன் வேறு பல மருத்துவக் கட்டுரைகளையும் அதில்
வெளியிட்டார். ஆங்கில இதழானாலும் சில மருத்துவக் குறிப்புகளை தமிழிலேயே
வெளியிட்டார். பிரசித்திப் பெற்ற டாக்டர் ஐயங்கார் நட்பின் உதவியில் மலேசியா சென்றார்.
1913-இல் அம்புரோஷிமா நிறுத்தப்பட்டது.

சிங்கப்பூரில் ராபின்ஸன் மருத்துவமனையை நிர்வகிக்கும் பொறுப்பை 150 டாலர் சம்பளத்துடன்
ஏற்றுக்கொண்டு திறம்பட பணியாற்றினார். இசையின் மீதுள்ள காதலால் ஹார்மோனியம்
கற்றுக்கொண்டார்.

வருவாய் பெருகியது, தானங்களும் பெருக ஆரம்பித்தது. ‘ஜோஹார் பஹரு’வில் அவரைத்
தெரியாதவர்களே இல்லை எனும் நிலை உண்டாது.

அவரது உள்ளத்தில் ஓர் அகப்புரட்சி ஏற்பட் டது. தனக்குள் இருக்கும் பரம்பொருளை உணர்ந்து
கொண்டார். தியானம், மௌனம், எளிமை, தவம் என தன் வாழ்க்கையை மாற்றியமைக்க முடிவு செய்து
இந்தியா திரும்பினார். காசியில் இறங்கி கங்கையில் நீராடி காசி விஸ்வநாதர் ஆலயத்தில்
நெடுநேரம் தியானம் செய்தார். ஏதோ இனம் புரியாத ஓர் உணர்வு தம்முள் பொங்கி பரவுவதை
உணர்ந்தார். பூனா சென்று இறைவனின் திருக்கரங்களில் தம்மை முழுமையாக ஒப்படைத்துக்கொண்டார்.
சுவாமி விஸ்வானந்தர் இவரை ‘உலகை உய்விக்க வந்தவர்’ என்பதை உணர்ந்து, உடனே சன்யாச தீட்சை
வழங்கி ‘சுவாமி சிவானந்தர்’ என பெயரையும் அனுக்கிரகித்தார். இமயமலை அடி வாரத்தில்
கங்கைக் கரையோரம் அமர்ந்தார்.

செய்வினைகளை விரட்டினார், பல்வேறு அற்புதங்களை நிகழ்த்தினார். நூல்கள் எழுதினார்.
1963-இல் உடல்நிலையைப் பொருட்படுத்தாமல் தமது நூல்கள் மற்றும் அச்சுப் பக்கங்களை சரி
பார்த்தார். தமது அமுதமொழிகளை ஒலிநாடாவில் பதிவு செய்தார். ஜூலை 10 அன்று
படுக்கையில் படுத்திருந்த குருதேவர் தாம் தாயாகக் கருதிப் போற்றும் கங்கையைத் தரிசிக்க
விரும்பினார். படுக்கை மாற்றியமைக்கப்பட்டது. கங்கையை ரசித்துக்கொண்டிருந்தார். ஜூலை
14-இல் கங்கை நீரை வரவழைத்து மடமடவெனக் குடித்து இறைஜோதியுடன் கலந்தார்.