| Profession | எழுத்தாளர் |
|---|
சாத்தூர் செல்லையா – சீனி வாசகத்தாய் தம்பதியருக்கு 25.10.1937 அன்று பிறந்தார்.
இவருக்குப் பெற்றோர் இட்ட பெயர் சந்திர சேகரன்(என்கிற) சங்கரலிங்கம்.
சாத்தூரில் பள்ளிக் கல்வியை முடித்த இவர், கல்லூரிப் படிப்பைசென்னை இலயோலா கல்லூரியில்
தொடங்கினார். உலகின் பெரும்பாலான நாடுகளுக்குச் சென்று 100-க்கும் மேற்பட்ட மொழிகளை
அறிந்தார். “உலக நாகரிகங்கள் அனைத்தும் தமிழன் படைத்தவையே” என்று நிரூபித்து
வருகின்றவர் என்ற போற்றுதலுக்கு உரிமையுடைய சாத்தூர் சேகரரின் பல்மொழிப் பயிற்சிக்கான
விதை இலயோலா கல்லூரியில் விதைக்கப்பட்டது எனலாம். இக்காலகட்டத்தில் 20-க்கும் மேற்பட்ட
மொழிகளை கற்றுத் தேர்ந்திருக்கிறார்.
மைசூர் பல்கலைக் கழகத்தில் எம்.ஏ. (ஆங்கிலம்), எம்.ஏ., (வரலாறு), எம்ஃபில் (வரலாறு),
எம்.ஏ. (பொருளாதாரம்), எம்.ஏ. (மொழியியல்), மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தில் எம்.ஏ.
(அரசியல்) ஆகிய பட்டங்களைப் பெற்றுள்ளார்.
மொழியியல் அறிஞராக, கவிஞராக, புதின ஆசிரியராக, பேச்சுக் கலையின் வல்லுநராகப் பல
பரிமாணங்களைக் கொண்டுள்ள சாத்தூர் சேகரன் 100-க்கு மேற்பட்ட தமிழ் நூல்களையும், 100-க்கு
மேற்பட்ட ஆங்கில நூல்களையும் எழுதியுள்ளார்.
மொழியுணர்வை மொழி வெறியாக மாற்றாமல், வரலாற்று உண்மைகளைப் பதிவு செய்யும் நோக்கில்
நூறு மொழிகளில் ஆழமாகவும் மற்றுமொரு முந்நூறு மொழிகளில் அகலமாகவும் கடந்த முப்பது
ஆண்டுகளாக மொழியியல் பற்றி ஆய்வு நடத்திவரும் சாத்தூர் சேகரர் உலக மொழிகளை ஒப்பீடு
செய்ய ‘சாத்தூர் சேகரனின் மொழியியல் விதிகள்’-ஐ உருவாக்கியவர்.
மொழியியலில்மட்டுமல்ல;இலக்கிய உலகிலும் கால் பதித்துள்ளார். சேந்தமங்கலக்கோட்டை,
புதுமைப்பெண், தாய்நாடு, காளிதாசினி, கரையில் ஒரு மீன், கடல் என் காதலி ஆகிய ஆறு
புதினங்களையும், பனிமனிதன் எனும் ஒரு சிறுகதைத் தொகுதியையும், ஏன் வேண்டாம் துன்பத்
திராவிடம்?, சொந்த நாட்டில் தமிழன் அகதியா?, தமிழன் பரம்பரை ஆண்டியா?, ஏ தாழ்ந்த
தமிழகமே!, சின்ன நூலா நம்மைச் சிறை பிடிப்பது?, தமிழ்த் தேசியம் ஆகிய தமிழ்த் தேசியம்
பற்றிய ஆறு நூல்களை எழுதியுள்ளார். ந.சி.க.வின் ஐந்து ஆய்வு நூல்களையும், ஏ.ஜி.
மணியினுடைய ஐந்து சிறுவர் நூல்களையும், மொழி ஞாயிறு தேவநேய பாவாணரின் இரண்டு
நூல்களையும் பதிப்பித்துள்ளார்.
குமரி கண்ட மாநாடு, சிந்துவெளி மாநாடு, திராவிட மொழி மாநாடு, இந்திய மொழிகள்
மாநாடு, உலகப் பண்பாடு தமிழ்ப் பண்பாடே மாநாடு, உலக மொழிகளின் மாநாடு ஆகிய
மாநாடுகளையும், உலகின் முதல் மொழி முதல் மாந்தர் மொழி கருத்தரங்கையும் நடத்தியுள்ளார்.