| Profession | எழுத்தாளர் |
|---|
தஞ்சாவூர் மாவட்டம், வலங்கைமானில் 31.01.1921-இல் பிறந்தார். சிறு வயதிலேயே தாயை
இழந்தார். தபால் அதிகாரியாகப் பல இடங்களில் பணியாற்றிய தந்தை கந்தாடை நாராயண
சுவாமியுடன் வசித்தார்.
க.நா.சு.வின் தந்தையாருக்கு ஆங்கில இலக்கியங்களில் ஆர்வம் இருந்தமையால் தன் மகனிடம் இரவு
வேளையில் டிக்கன்ஸ், ஜேன் ஆஸ்டின், ஹார்டி ஆகியோரது நூல்களை உரக்கப் படிக்கச் சொல்லிக்
கேட்கும் வழக்கம் இருந்தது. அதுவே க.நா.சு.வுக்கு ஆங்கில இலக்கியத்தில் ஆரம்பத்திலேயே
ஈடுபாடு ஏற்பட காரண மாயிற்று.
திருவாரூர் உயர்நிலைப் பள்ளியில் கல்வியைப் பயின்று, அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் பி.ஏ.
பட்டம் பெற்றார்.
1928-34 காலகட்டத்தில் ஆங்கிலக் கட்டுரைகள் எழுதத் தொடங்கினார். இவரது ‘வரவேற்பு’ எனும்
முதல்கதை ‘கலைமகள்’ இதழில் வெளிவந்தது. 1936 நவம்பர் ‘மணிக்கொடி’ இதழில் ‘ரங்கம்’ என்ற
கதையை எழுதினார். அதன் பிறகு சூறாவளி, சந்திரோதயம், தேனீ போன்ற இதழ்களில் எழுதினார்.
“பி.எஸ்.ராமையாவின் ‘வார்ப் படம்’ என்ற சிறுகதையைப் படித்தபின் தமிழில் எனக்கும் எழுத
வேண்டும் என்ற எண்ணம் உண்டாயிற்று” என்கிறார். ஐம்பதுகளில் சரஸ்வதி, எழுத்து, இலக்கிய
வட்டம் போன்ற இதழ்களில் எழுதினார்.
இலக்கியத்தரம் வாய்ந்த படைப்புகளாகத் தான் கண்டவற்றைத் தொடர்ந்து வாசகப் பார்வைக்குக்
கொண்டுவந்தார். தமிழ் இலக்கிப் படைப்பை உலகத் தரத்தில் மதிப்பீடு செய்ய வழி வகுத்தார்.
இன்று இலக்கிய விமர்சனம் ஒரு துறையாக வளர்வதற்குக் காரணம் இவருடைய விமர்சனக்
கட்டுரைகளே. தமிழ் விமர்சனங்களுள் முதன்மையானவர் க.நா.சுப்பிரமணியம்.
க.நா.சு.வின் முதல் புதுக்கவிதை 1930இல் வெளிவந்தது. அவருடைய கவிதைகள் ‘மயன்
கவிதைகள்’ , ‘க.நா.சு. கவிதைகள்’ என இரு தொகுப்புகளாக வெளிவந்துள்ளன. மேலும்,
இருபத்தெட்டு புதினங்கள், ஆறு சிறுகதைத் தொகுதிகள், இருபத்தெட்டு ஆய்வுக் கட்டுரைத்
தொகுதிகள், முப்பது தமிழாக்க நூல்கள், ஏழு நாடக நூல்கள், எட்டு ஆங்கில நூல்கள் ஆகியவை
வெளிவந்துள்ளன.
ஞானரதம், முன்றில் ஆகிய இதழ்களில் சிறப்பாசிரியராகவும் பணியாற்றினார்.
1986-இல் ‘இலக்கியத்துக்கு ஒரு இயக்கம்’ எனும் நூலுக்காக ‘சாகித்ய அகாதெமி’ விருதுப்
பெற்றார். குமரன் ஆசான் விருது, கேரள, தமிழ் அரசுகளின் பரிசுகள் ஆகியனவும்
பெற்றுள்ளார்.
தஞ்சாவூர், சிதம்பரம், சென்னை, கொல்கத்தா, பெங்களூர், மைசூர், திருவனந்தபுரம்,
புதுச்சேரி ஆகிய நகரங்களில் வாழ்ந்த க.நா.சு., இலக்கிய வாதியாக இந்தியாவின் பல
பகுதிகளுக்கும், உலக நாடுகளுக்கும் பயணித்தார். புதுதில்லியில் தனது ஒரே மகளின்
இல்லத்தில் 16.12.1988 அன்று காலமானார். 2006 இல் இவரது நூல்கள் நாட்டுடைமை
ஆக்கப்பட்டன.