| Profession | பேராசிரியர் |
|---|
1933 சித்திரை 5-ஆம் நாள் கோலாலம்பூரில் கைலாசபதி பிறந்தார். இவரது தந்தை
கனகசபாபதி, அங்கு வடவரைஞராகப் பணிபுரிந்தார்.
கோலாலம்பூர், விக்டோரியா இன்ஸ்டிடிட்யூட்டில் ஆரம்பக் கல்வி பயின்ற கைலாசபதி, இரண்டாம்
உலக யுத்த முடிவில் தாயார் தில்லைநாயகியுடன் தமது சொந்த ஊரான யாழ்ப்பாணம்,
இடைக்காடுக்கு வந்து சேர்ந்தார்.
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் விடுதியில் தங்கி இடைநிலைக் கல்வி பயின்றார். கல்லூரி
காலத்திலேயே ‘இந்து சாதனம்’, ‘தமிழ்மணி’, ‘சுரபி’ மற்றும் கல்லூரி இலக்கிய மன்ற
இதழ்களிலும் சமயம், இலக்கியம் சார்ந்த கட்டுரைகள் எழுதினார்.
பின்னர், றோயல் கல்லூரியில் பயின்றார். இக்காலத்தில் அவரது வாசிப்பு விரிவானது. அதன்
விளைவாக கவிதைகள், சிறுகதைகள், நாடகங்கள் எழுதினார். சேக்ஸ்பியரின் நாடகத்தை
வானொலிக்கெனத் தமிழாக்கி ஒரு தொடராக ஒலிபரப்புச் செய்தார். புதுமைப்பித்தனின்
‘கபாடபுர’த்தை வானொலி நாடகமாக்கினார்.
1957-61 காலப்பகுதியில் ஓப்சேவரில் பணியாற்றினார், பின்னர் ‘தினகரன்’ இதழில்
ஆசிரியரானார். 1960-இல் கல்கத்தாவில் நடைபெற்ற அகில இந்திய தமிழ் எழுத்தாளர்
மாநாட்டிற்கு இ.மு.எ.ச. பிரதிநிதியாகவும், தினகரன் ஆசிரியராகவும் பங்கேற்று ‘தேசிய
இலக்கியக் கோட்பாட்டுடன் இலங்கைத் தமிழ் இலக்கிய வளர்ச்சி’ பற்றி எடுத்துரைத்தார்.
1966-இல் ‘தமிழ் வீரநிலைக் கவிதை’ எனும் தலைப்பில் ஆய்வுசெய்து, பர்மிங்காம்
பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார். ஆங்கிலத்திலான இக்கட்டுரை தமிழில் நூலாக
வெளிவந்துள்ளது.
கைலாசபதி தனது சொந்தப் பெயரிலும், புனைப்பெயர்களிலும் நூல்களும் கட்டுரைகளுமாக 238
ஆக்கங்களை வெளியிட்டுள்ளார்.
இவர் நேரடி அரசியலில் ஈடுபடாவிட்டாலும், கம்யூனிஸ்ட் கட்சியின் ஆதரவாளர். கட்சித்
தோழர்களுடன் நெருங்கிப் பழகினார். அரசியல் விடயங்களை அலசி ஆராய்ந்தார், விவாதித்தார்.
உலக அரசியலையும் தொடர்ந்து அவதானித்து வந்தார்.
1961-இல் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் உதவி விரிவுரையாளர் பணியை ஏற்றார். இக்காலத்தில்
தனது மாமன் மகள் சர்வமங்களத்தை மணந்தார். இவர்களுக்கு பவித்திரா, சுமங்கலா என இரு
மகள்கள்.
1963-இல்புலமைப் பரிசில் பெற்று பர்மிங்காம் பல்கலைக்கழகம் சென்றார். 1974-இல்
வித்தியாலங்கார வளாகத்தில் இந்து நாகரிகத் துறைத் தலைவரானார். அதே ஆண்டு யாழ்ப்பாணம்
பல்கலைக் கழகத் தலைவரானார். 1978-இல் யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தின்
கலைப்பீடாதிபதியானார்.
1982 நவம்பரில் அவருக்கு இரத்தப் புற்று நோய்க்கான சிகிச்சை வழங்கப்பெற்றது. டிசம்பர்
6-இல் தனது 49-ஆவது வயதில் கைலாசபதி நம்மை விட்டுப் பிரிந்தார்.