| Profession | அறிஞர் |
|---|
கோவையில் கிருஷ்ணசாமி – மாரியம்மாள் இணையருக்கு 01.07.1935-இல் பிறந்தார். இயற்பெயர்
கி.பழனிச்சாமி. தந்தையார் பங்கீட்டுக் கடை நடத்தினார்.
கோவை அரசு கல்லூரியில் இன்டர்மீடியட் படித்தார். அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் பி.ஓ.எல்.
முதல் தர மாணவராகத் தேர்ச்சி பெற்று அண்ணாமலைச் செட்டியாரின் நினைவுப் பரிசைப் பெற்றார்.
வகுப்பறையில் இருந்த நேரத்தைவிட நூலகத்தில் இருந்த நேரமே அதிகம். சென்னைப் பல்கலைக்
கழகத்தில் எம்.ஏ. பட்டத்தையும், அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் பி.எட். பட்டத்தையும் பெற்று,
செங்கோட்டையார் நினைவு உயர் நிலைப் பள்ளியில் உடற்பயிற்சி ஆசிரியையாக இருந்த
இந்திராணியை காதல் திருமணம் செய்து கொண்டார். பாரி வள்ளல், மாதவன் என இரண்டு ஆண்
குழந்தைகள்.
1988-இல் சர்க்கரை நோயினால் பார்வையை இழந்தார். 30 ஆண்டு கால தமிழாசிரியர்
பணியிலிருந்து விருப்ப ஓய்வு பெற்றார்.
1960-ன் தொடக்கத்தில், பள்ளியில் பணியாற்றிய காலத்திலேயே மார்க்சிய இயக்கத்தோடு தொடர்பு
ஏற்பட்டது. கலை இலக்கியப் பெரு மன்றத் தோழர்கள் ஜீவா, தொ.மு.சி.ரகுநாதன், ஆர்.கே.
கண்ணன், ஜெயகாந்தன், வானமாமலை போன்றவர்களின் சிந்தனைகளால் ஈர்க்கப்பட் டார். 1967-இல்
‘புதிய தலைமுறை’ என்றொரு மார்க்சிய இதழை நண்பர்களுடன் இணைந்து தொடங்கினார்.
என்.எஸ்.நாகராசன், எஸ்.வி.ராஜதுரை போன்றோருடன் நெருக்கமாக இருந்து மார்க்சியச்
சிந்தனையை மேம்படுத்திக் கொண்டார்.
‘பரிமாணம்’ (1978- 96), ‘நிகழ்’ (1983- 1996) ‘தமிழ்நேயம்’ (1998- 2012) ஆகிய
இதழ்களை நண்பர்கள் துணையுடன் நடத்தினார்.
இவருக்கு உறுதுணையாக இருந்த மனைவியின் இறப்புக்குப் பிறகும் உதவியாளர் உதவியுடன்
தமது பணியைத் தொடர்ந்தார்.
கோவை ஞானி தொடக்கத்தில் கவிதைகள் எழுதினார். அவை ‘மல்லிகை’, ‘தொலைவி லிருந்து’,
‘கல்லும் முள்ளும் கவிதைகளும்’ ஆகிய மூன்று தொகுதிகளாக வெளிவந்துள்ளன. 35 ஆய்வு
நூல்களையும், 16 தொகுப்பு நூல்களையும், 5 கட்டுரை நூல்களையும் வெளியிட்டுள்ளார். பெண்
எழுத்தாளர்களின் சிறுகதைகள் 11 தொகுப்புகளாக இவரது தொகுப்பில் வெளிவந்துள்ளன.
இவரது தமிழ்ப் பணிக்காக ‘விளக்கு’ பரிசு (1998), கனடா ‘இயல்’ விருது (2010),
எஸ்.ஆர்.எம். பல்கலைக் கழகத்தின் ‘பரிதி மாற் கலைஞர்’ விருது (2013) ஆகிய விருதுகளைப்
பெற்றுள்ளார். 27.7.2020அன்று காலமானார்.