| Profession | பேராசிரியர் |
|---|
பெரம்பலூர் சோம சுந்தரம் – மீனாம்பாள் தம்பதியருக்கு 14.04.1933 அன்று பிறந்தார்.
பி.ஏ., (பொருளியல்), பி.டி. (ஆங்கிலமும் சமூகவியலும்), எம்.ஏ. (தமிழ்),
மெய்ப்பொருளியலில் ‘வள்ளலாரின் சமுதாய ஆன்மிகக் கொள்கைகள்’ என்ற தலைப்பில் ஆய்வு செய்து
முனைவர் பட்டம் பெற்றார்.
திருச்சிக்கு அருகிலுள்ள இருங்களூர் தூய தரங்கை ஆசிரியர் பயிற்சிப்பள்ளி,
இலப்பைக்குடிகாடு மாவட்ட மன்ற உயர்நிலைப் பள்ளி என பத்து ஆண்டுகள் பள்ளி ஆசிரியராகவும்,
திருச்சி தேசியக் கல்லூரியில் பத்து ஆண்டுகள் பேராசிரியராகவும், பத்து ஆண்டுகள்
திருச்சி உருமு தன லட்சுமி கல்லூரி முதல்வராகவும் பணியாற்றினார். பாரதிதாசன்
பல்கலைக்கழகத்தில் பாடத்திட்டக் குழு தலைவராகவும், ஆட்சிக்குழு உறுப்பினராகவும்
பணியாற்றினார்.
தனது 30-ஆவது வயதில் தனபாக்கியம் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். அது சாதி
மறுப்புத் திருமணமாகவும், பெற்றோர்களின் ஒப்புதலுடனும் நடைபெற்ற தமிழ்வழித்
திருமணமாகும். இத்தம்பதியருக்கு சித்திரா என்றொரு மகள்.
தெய்வீகத் தேன்துளிகள், திருக்குறள் சிந்தனை முழக்கம்,கம்பர்+வள்ளலார்=ஆன்மிகம் கண்டறியாதன
கண்டேன், இயற்கைக் காதலர் எங்கள் வள்ளுவர், அவர்கள் அப்படி! நீங்கள் எப்படி?, செவ்வந்திப்
புராணம் உரை, கம்பன் வழியில் கடவுளைத் துதிப்போம், பாதை பழசு பயணம் புதுசு, பார்வை
மாறினால் பயணம் மாறும், அழைக்கிறது அமெரிக்கா, கனிகள் இங்கே! விதைகள் எங்கே? ஆகிய 14
நூல்களை எழுதியுள்ளார்.
கொழும்பு, மலேசியா, சிங்கப்பூர், பிரான்சு, அமெரிக்கா, சுவிட்சர்லாந்து, இலண்டன்,
குவைத் ஆகிய நாடுகளுக்கு பல முறை பயணம் செய்து தமிழ் நிகழ்ச்சிகளில்
பங்கேற்றிருக்கிறார்.
திருவாரூர் சிந்தனையாளர் பேரவையின் ‘சிந்தனைப் பேரொளி’, குன்றக்குடி அடிகளாரின்
‘நாவுக்கரசர்’, தமிழ்நாடு அரசின் ‘கலைமாமணி’, வெட்டுவாணம் அறுபத்து மூவர் சபையின்
‘நற்றமிழ்வேள்’, இலங்கைக் கம்பன் கழகத்தின் ‘கம்ப நாவலர்’, கோவை நன்னெறிக் கழகத்தின்
‘தமிழ்நெறிச் செம்மல்’ ஆகிய பட்டங்களையும், ராஜா சர் அண்ணாமலைச் செட்டியார் 107-ஆவது
பிறந்தநாள் விருது, மதுரைத் தமிழிசைச் சங்கத்தின் விருது, பொள்ளாச்சி இசை இலக்கிய மன்ற
விருது, மதுரைக் கம்பன் கழகத்தின் ‘சடையப்ப வள்ளல்’ விருது, இலங்கை இந்து பரிபாலன சபை
விருது, சேலம் தமிழ்ச் சங்க விருது, ராசிபுரம் கம்பன் கழகத்தின் ‘பைந்தமிழ் பேரொளி’,
மால்கம் ஆதிசேஷையா விருது, திருச்சி நகைச்சுவை மன்றத்தின் ‘இயற்றமிழ் வித்தகர்’,
நாமக்கல் கம்பன் கழகத்தின் ‘கம்பர் விருது’ ஆகிய விருதுகளையும் பரிசுகளையும்
பெற்றுள்ளார்.