| Profession | எழுத்தாளர் |
|---|
இரா.இராஜசேகரனார் லால்குடியில் ‘திருக்குறள்வேள்’ ஜி. வரதராஜன் பிள்ளை- தர்மாம்பாள்
தம்பியருக்கு 15.05.1942 அன்று பிறந்தார். இவரது தந்தை திருக்குறள், திருவாசகம்,
திரு மந்திரம் ஆகிய நூல்களுக்கு உரை எழுதிய தமிழறிஞர்.
இராஜசேகரன், 1953-இல் மேலையூர் இராமலிங்கம் -கௌரி அம்மாள் தம்பதியருக்கு சுவீகாரப்
புதல்வரானார்.
திருச்சி பிஷப் ஹீபர் பள்ளியிலும், மயிலாடுதுறை முனி சிபல் உயர்நிலைப் பள்ளியிலும்
பள்ளிக் கல்வியைப் பயின்றார். தூய வளனார் கல்லூரியில் 1961-இல் இளநிலை கணிதம் பட்டம்
பெற்றார். 1963-இல் சென்னை சட்டக் கல்லூரியில் பி.எல். பட்டம் பெற்று புகழ் பெற்ற
வழக்கறிஞராகப் பணியாற்றினார்.
1991-இல் தருமையாதீனம் மாலைநேரக் கல்லூரியில் கற்று ‘சித்தாந்த கலாநிதி’ பட்டம்
பெற்றார். 1992 முதல் கோபாலய்யர், சித்தாகாடு திருநாவுக்கரசு ஆகியோர் மூலமாக
பழந்தமிழ் நூற்களைக் கற்றுத் தேர்ந்தார்.
இராஜசேகரனாருக்கும், திருவிசைநல்லூர் நடராஜம் பிள்ளை மகள் ஜீவாவுக்கும் திருமணம்
நடைபெற்றது. இத்தம்பதியினருக்கு இராம. சொக்கலிங்கம், சீனிவாசன், கௌரிப்பிரியா,
தேவிபாரதி என நான்கு குழந்தைகள்.
இராஜசேகரனார், பூம்புகாரில் கண்ணகிக்குக் கோட்டம் அமைத்து திருக்குட நீராட்டு
நிகழ்த்தியதுடன் ஆண்டுதோறும் ‘கண்ணகி விழா’ நடத்தி அறிஞர் பெருமக்களை அழைத்து
சொற்பொழிவு நிகழ்த்தச் செய்வது இவரது சிறப்புக்குரிய செயல்களில் ஒன்றாகும்.
இவர் ‘சைவப் பெருவெளியில் காலம்’, ‘என்றுமுள சைவம்’, ‘ஊரெல்லாம் சிவமணம்’, ‘சொற்றமிழ்
சூடுவார்’, ‘சைவத் தோரணங்கள்’, ‘ஒன்றே குலம்’, ‘நால்வர் வாழ்வும் வாக்கும்’, ‘வாழ் வியல்
சைவம்’, ‘பெரியபுராணம் வாழ்க்கை இலக் கியம்’, ‘இன்ப காவியம்’, ‘இன்பமே எந்நாளும்
துன்பமில்லை’, ‘சிவஞான போதம் உரை’, ‘ஆசாரிய ஹிருதயம்’, ‘விஷ்ணுபுரம் ஒரு பார்வை’
ஆகிய பதினான்கு நூல்களை எழுதி யுள்ளார். ‘அப்பர் அருட்செய்தி’, ‘தத்துவமும் பக்தியும்’,
‘திருமந்திர நெறி’, ‘சிந்தனைச் சிலம்பு’, ‘தமிழ் நாவல் : 50 பார்வைகள்’, ‘அறிவின்
அறிவு’, ‘உழவாரம்’, ‘ஒரு சிலம்பு மூன்று தமிழ்’, ‘சிலம்பு’ என ஒன்பது நூல்களை
பதிப்பித்துள்ளார்.
தமிழை வளர்க்க ஒரு ‘தெய்வத் தமிழ் மன்றம்’, ஆன்மிகத் தொண்டாற்ற ‘உழவாரம்’, தமிழ் பண்பாட்டை
பறைசாற்ற ‘பத்தினிக் கோட்டம்’, ‘எதிர் கால இளைய சமுதாயத்தைச் செதுக்க ‘விழித்திரு’
இயக்கம் என இவரின் சமூகத் தொண்டுகளின் பட்டியல் நீள்கிறது.
இத்தகைய சமூகத் தொண்டுகளுக்காக ‘செந்தமிழ்ப் புரவலர்’, ‘இரு சமய அறிஞர்’, ‘மாறன் மனம்
கண்ட மெய்ம்மதிக்கூடல், ‘வைணவ வரலாற்றுச் செம்மல்’, ‘சிலம்பின் காவலர்’, ‘பக்தர் சீர்
பரவுவார்’, ‘சேக்கிழார் விருது’, ‘ஆன்மிக வரலாற்று எழுத்தாளர்’, ‘வாழ்நாள்
சாதனையாளர்’ ஆகிய விருதுகளை பல்வேறு சமூக இலக்கிய அமைப்புகள் வழங்கப் பெற்றுள்ளார்.