இமையம் எழுத்தாளார்

இமையம் எழுத்தாளார்

Profession அறிஞர்

Biography

கடலூர் திட்டக்குடி மேல் ஆதனூர் கிராமத்தில் வெங்கட்டன் – சின்னம்மாள் தம்பதியருக்கு
10.03.1964 இல் பிறந்தார். இயற்பெயர்: வெ.அண்ணாமலை.

ஆதனூர், கழுதூர், சேப்பாக்கம் ஆகிய ஊர்களிலுள்ள பள்ளிகளில் பள்ளிக் கல்வியை முடித்த
இமையம், திருச்சி அரசு பெரியார் கலைக் கல்லூரியில் இளங்கலை அறிவியல் பட்டத்தையும்,
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் ஆங்கிலத்திலும், தமிழிலும் முதுகலைப் பட்டங்களையும்
பெற்றார்.

தற்போது கடலூர் மாவட்டம், விருத்தாசலம் வட்டம், இலங்கியனூரில் உள்ள அரசு ஆதிதிராவிடர்
நடுநிலைப் பள்ளியில் ஆசிரியராகப் பணி புரிகிறார்.

காதல் திருமணம் செய்துகொண்டார். துணைவி: புஷ்பவல்லி. மகன்கள்: கதிரவன், தமிழ்ச்செல்வன்.

உழைக்கும் மக்களின் அவலநிலையை அம்மக் களின் மொழிநடையில் எல்லோருக்கும் புரியும் வகையில்
தம் கருத்துகளைப் படைப்புகளின் வழியில் எடுத்துக் காட்டுகிறார்.

இவரது முதல் படைப்பு ‘கோவேறு கழுதைகள்’ புதினம். முதல் சிறுகதைத் தொகுப்பு
‘மண்பாரம்’.

தீராநதி, அம்ருதா, காலச்சுவடு, உயிர் எழுத்து, தலித், உன்னதம், உயிர்மை, இந்தியாடுடே,
சண்டே இந்தியன் போன்ற இதழ்களில் தொடர்ந்து எழுதிக்கொண்டிருக்கிறார்.

இதுவரை ‘கோவேறு கழுதைகள்’, ‘ஆறுமுகம்’, ‘செடல்’ எனும் மூன்று புதினங்களும், ‘மண்
பாரம்’, ‘வீடியோ மாரியம்மன்’, ‘பெத்தவன்’, ‘கொலைச்சேவல்’, ‘சாவுச்சோறு’ ஆகிய ஐந்து
சிறுகதைத் தொகுதிகளும் வெளிவந்துள்ளன.

‘கோவேறு கழுதைகள்’ புதினம் 2001-இல் பதிப்பகத்தாரால் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு
வெளியிடப்பட்டுள்ளது. இப்புதினம் 2009-இல் கன்னடத்திலும் வெளிவந்துள்ளது.

‘ஆறுமுகம்’ எனும் புதினம், கதா நிறுவனத்தினால் அதே பெயரில் ஆங்கிலத்தில் 2006-இல்
வெளியிடப்பட்டது.

இமையம் தனது படைப்புகளுக்காக ‘அக்னி அக்ஷரா விருது’ (1994), ‘தமிழ்நாடு முற்போக்கு
எழுத்தாளர் சங்க விருது’ (1994), ‘அமுதன் அடிகள் இலக்கிய விருது’ (1998),
‘திருப்பூர் தமிழ்ச் சங்க விருது’ (1999), ‘நெய்வேலி பழுப்பு நிலக்கரிக் கழக விருது’
(2000), ‘இந்திய அரசின் பண்பாட்டு அமைச்சகம் இளநிலை ஆய்வு விருது’ (2000-2002),
‘தமிழக அரசின் தமிழ்த் தென்றல் திரு.வி.க. விருது’ (2010) ஆகிய விருதுகளைப்
பெற்றுள்ளார்.