ஆ.மாதவன்

ஆ.மாதவன்

Profession எழுத்தாளர்

Biography

திருவனந்தபுரம் ஆவுடை நாயகம் – செல்லம்மாள் தம்பதியருக்கு 1934இல் பிறந்தார்.

1966-இல் கொட்டாரம் சூரியகுமாரியுடன் திருமணம். இவர்களுக்கு கலைச்செல்வி, மலர்செல்வி,
கோவிந்தராஜன் என மூன்று பிள்ளைகள்.

கேரளத்தில் மலையாள மொழியிலேயே தொடக்கக் கல்வியைப் பயின்றார். குடும்ப வறுமை காரணமாக
பள்ளிப் படிப்பை மட்டுமே கற்றார். அண்ணன் தொடங்கிய கடையில் உதவி செய்தார். பின்னர் ஒரு
பாத்திரக் கடை வைத்தார்.

தமிழ், மலையாள இலக்கியங்களை ஒருசேரப் படித்தார். அதன் விளைவாக, மலையாளத்தில் வெளிவந்த
விக்டர் ஹியூகோவின் ‘கழுமரம்’ கதையை தமிழில் சென்னையிலிருந்து வெளிவந்த ‘சிறுகதை’
எனும் மாத இதழில் தொடர்கதையாக எழுதினார். இப்படி ஒரு மொழி பெயர்ப்பாளராகத் தான் தமிழ்
இலக்கிய உலகுக்குள் நுழைந்தார். ‘திராவிடன்’, ‘தென்றல்’, ‘முல்லை’, ‘தாமரை’, ‘தீபம்’
ஆகிய இதழ்களில் இவரது மொழிபெயர்ப்புகள் பிரசுரமாகின.

திருவனந்தபுரத்தில் வசிக்கிற தமிழர்களின் வாழ்வியல் சிக்கல்களையும், நம்பிக்கைகளையும்
அவர்களுடைய மொழிநடையிலேயே எதார்த் தமாக எழுதினார். ‘புனலும் மணலும்’, ‘கிருஷ்ணப்
பருந்து’, ‘தூவானம்’ ஆகியவை இவரது புதினங்கள். ‘நான்காவது காதல்’ ‘கடைத் தெருக்
கதைகள்’, ‘மோகபல்லவி’, ‘காமினி மூலம்’, ‘ஆனைச்சந்தம்’, ‘அ.மாதவன் கதைகள்’,
‘முத்துக்கள் பத்து’, ‘பெயரில்லாத கதை’ ஆகியவை இவரது சிறுகதை நூல்கள். ‘இலக்கியச்
சுவடுகள்’ இவரது கட்டுரை நூல்.

மணல் அள்ளும் தொழிலாளர்கள் எதிர் கொள்ளும் பிரச்சினைகள், சமூகத்தில் பெண் களின் நிலை,
அவர்கள் எதிர்கொள்ளும் பிரச் சனைகள் தமிழ், மலையாள இலக்கியவாதிகள் பற்றிய மதிப்பீடுகள்
ஆகியவற்றை நாவல்களில் பதிவு செய்தார்.

1965 காலகட்டத்தில் ‘கதிர்’ எனும் இதழைத் தொடங்கி அதன் ஆசிரியராகவும், பின்னர் ‘கேரளத்
தமிழ்’ இதழின் ஆசிரியராகவும், ‘தாமரை’ கேரள சிறப்பிதழின் பொறுப்பாளராக வும்,
1981-இல் ‘தீபம்’ இதழின் ஆசிரியர் குழுவிலும் பணியாற்றினார். 2002 முதல் ஐந்தாண்டு
காலம் சாகித்ய அகாடமி தமிழ் மொழித் தேர்வுக் குழுவில் உறுப்பினராகவும் செயற்பட்டார்.

1994-இல் திருப்பூர் தமிழ்ச் சங்கத்தின் முதல் பரிசு, 2002-இல் திருவனந்தபுரம் தமிழ்ச்
சங்கத் தின் ‘பரமேஸ்வர ஐயர்’ நினைவுப்பரிசு, ‘ஜய பேரிகை’ இதழின் சிறந்த சிறுகதைக்கான
முதல் பரிசு, 2009-இல் தமிழக அரசின் ‘கலைமாமணி’ விருது, 2010-இல்கோவை
‘விஷ்ணுபுரம்’ இலக்கிய அமைப்பின் ரூ.50,000 பரிசு ஆகியவற்றை தனது சொந்த
படைப்புகளுக்காகவும், மொழிபெயர்ப்பு களுக்காகவும் பெற்றார். இவர், 5.1.2021 அன்று தனது
87-ஆவது அகவையில் திருவனந்தபுரத்தில் காலமானார்.