அ.க.நவநீதகிருஷ்ணன்

அ.க.நவநீதகிருஷ்ணன்

Profession அறிஞர்

Biography

திருநெல்வேலி, அம்பாசமுத்திர ஊர்க்காடு கிராமத்தில் ஜமீன்புலவர் அங்கப்ப பிள்ளை –
மகாலெட்சுமி தம்பதியருக்கு 15.06.1921 அன்று பிறந்தார்.

அ.க.நவநீதகிருஷ்ணன், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் புலவர் பட்டம் பெற்று, திண்டுக்கல் புனித
சூசையப்பர் உயர்நிலைப் பள்ளி யில் தமிழாசிரியராகச் சில ஆண்டுகள் பணியாற்றியபின்
இராசபாளையம் பள்ளியிலும், திருநெல்வேலி மந்திரமூர்த்தி உயர்நிலைப் பள்ளியிலும்,
நெல்லையிலுள்ள மதுரை திரவியம் தாயுமானவர் இந்துக் கலாசாலைப் பள்ளியிலும் ஆசிரியராகப்
பணியாற்றினார்.

1944-இல் இவருக்கும் பிச்சம்மாளுக்கும் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஐந்து மகன்கள்,
மூன்று மகள்கள்.

டாக்டர் உ.வே.சா.விடம் பயின்ற இவர், மறை மலை அடிகளார், ஔவை துரைசாமிப் பிள்ளை,
மு.வரதராசனார், வ.சுப.மாணிக்கனார், கி.ஆ.பெ. விசுவநாதம் போன்ற தமிழறிஞர் களிடமும்,
சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழக அதிபர் வ.சுப்பையா பிள்ளை, தவத்திரு குன்றக்குடி
அடிகளார், கணபதி முதலியார் ஆகியோருடனும் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தார். வில்லிசை
வேந்தர் கலைமாமணி சுப்பு ஆறுமுகம் இவரது மாணவர்.

பாடநூல்கள், வரலாற்று நூல்கள், சொற் பொழிவு நூல்கள், பிற நூல்கள் என 25-க்கும் மேற்பட்ட
நூல்களை எழுதியுள்ளார். வில்லி சையின் மீது மிகுந்த ஈடுபாடு கொண்டு, தமிழ் வளர்ந்த
கதை, திருவள்ளுவர் கதை, கண்ணகி கதை, ஔவையார் கதை, பத்துப் பாட்டின்பம், சிவஞான
முனிவர் வரலாறு, மெய்கண்டார் வரலாறு, திருஞான சம்பந்தர் வரலாறு, மாணிக்கவாசகர்
வரலாறு என ஒன்பது வில்லிசைப் பாடல்களை எழுதியுள்ளார். இவற்றில் முதல் நான்கு பாடல்கள்
மட்டுமே புத்தக வடிவம் பெற்றுள்ளன.

இவரது தமிழ்ப்பணியைப் பாராட்டி தருமபுரம் மகா சந்நிதானம் சுப்பிரமணிய தேசிய
பரமாச்சாரிய சுவாமிகள் இவருக்கு ‘செஞ்சாற் புலவர்’ எனும் பட்டம் வழங்கி சிறப்பித்தார்.
மதுரை திருஞான சம்பந்தர் ஆதினம் திருப்பெருந்துறை சோமசுந்தர பரமாச்சாரிய சுவாமிகள்
‘தமிழ்க் கொண்டல்’ எனும் பட்டம் வழங்கி கௌரவித்தார். நெல்லை திருவள்ளுவர் கழகம் இவரது
திருக்குறள் பணியைப் பாராட்டி ‘திருக்குறள் மணி’ எனும் பட்டத்தை வழங்கியது. இவரது
தமிழ்ப் பணியை பேராசிரியர் க.அன்பழகனாரும், சமயப் பணியை தவத்திரு குன்றக்குடி
அடிகளாரும் பாராட்டியுள்ளனர்.

14.4.1967 அன்று நடைபெற்ற கைத்தறிப் பொருட்காட்சியில் ‘தமிழும் சைவமும்’ குறித்து
உரையாற்றிக் கொண்டிருந்தபோது மேடை யிலேயே அவரது இன்னுயிர் பிரிந்தது.