| Profession | அறிஞர் |
|---|
சென்னை மாநகருக்கு அருகிலுள்ள அல்லிக்குழியில் வசித்த கிருஷ்ணசாமி முதலியார் –
சிவக்கியானம்மாள் இணையருக்கு 15.7.1902 அன்று பிறந்தார்.
அ.கி.ப. 1921-இல் பள்ளி இறுதி வகுப்பில் தேர்ச்சி பெற்ற பின் 1925-இல் சென்னைப்
பச்சையப்பன் கல்லூரியில் இடைநிலைக் கல்வியையும், இளங்கலைப் படிப்பைச் சென்னைப் பல்கலைக்
கழகத்திலும் பயின்றார். பின்னர் 1929-இல் தனியாக முதுகலையில் தமிழ் இலக்கியமும்
தென்னிந்திய வரலாறும் எடுத்து படித்து முதல் வகுப்பில் தேர்ச்சிபெற்றார். மேலும் 1931-இல்
சிதம்பரத்தில் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் சேர்ந்து படித்தார்.
1931-இல் தாம் படித்த பள்ளியிலேயே தமிழாசிரியராகப் பணியைத் தொடங்கினார். தலைமைத்
தமிழ் ஆசிரியராகவும் பதவி உயர்வு பெற்று அதே பள்ளியில் ஏறக்குறைய இருபத்து மூன்றரை
ஆண்டுகள் பணியாற்றிய பின் 1950-இல் மதுரை தியாகராசர் கல்லூரியில் தமிழ் விரிவுரையாளர்
ஆனார். தனது 65-ஆவது வயது வரை அப்பணியில் இருந்தார்.
அ.கி.ப. பள்ளி இறுதி வகுப்புப் படிக்கும் போதே கணேசம்மாள் அவர்களை 01.06.1921இல்
திருமணம் செய்துகொண்டார். இத்தம்பதியருக்கு அ.ப.சோமசுந்தரம் என்றொரு மகன் உள்ளார்.
15.01.1962-இல் மதுரை திருவள்ளுவர் கழகம் இவரது மணி விழாவைக் கொண்டாடியது.
1925-இல் சென்னை புரசைவாக்கத்தில் ‘தென்னிந்தியத் தமிழ்க் கல்விக் கழக’த்தை நிறுவினார்.
இதன் மூலம் ஏழு ஆண்டுகள் இலக்கிய வகுப்புகள் நடைபெற்றன.
கவிதைத் தொகுதி, சிறுவர்பாடல், வாழ்க்கை வரலாறு, ஆய்வுகள் என பதினைந்து நூல்களை
எழுதினார்.
மதுரையிலிருந்து வெளிவந்த ‘தமிழ்நாடு’ நாள் இதழில் அ.கி.ப.வின் பங்களிப்பு
குறிப்பிடும்படியானது. அவரது முக்கியமான நூல்களான ‘நல்ல தமிழ் எழுத வேண்டுமா?’,
‘மதுரை நாயக்கர் வரலாறு’ போன்றவை இந்நாளிதழின் ஞாயிறு மலரில் எழுதிய
தொடர்கட்டுரைகளே ஆகும்.
அ.கி.ப. ஏராளமான தமிழ்த் திருமணங்களை நடத்தி வைத்தார்.
இவரது தமிழ்ப் பணியைப் பாராட்டி அவரது மணிவிழாவில் மதுரை எழுத்தாளர் மன்றத்தினர்
‘பைந்தமிழ்ப் பாவலர்’ எனும் பட்டத்தை வழங்கினர். தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம்
தொடங்கப்பட்டபோது தமிழக அரசு இவருக்கு ‘திரு.வி.க.விருது’ வழங்கிச் சிறப்பித்தது.
இவரின் ‘எங்கள் தோட்டம்’ நூலுக்காக நடுவண் அரசின் பரிசு கிடைத்தது. தமிழக அரசின்
திருக்குறள் நெறி மையம் ‘திருக்குறள் நெறித் தோன்றல்’ என்னும் பட்டம் வழங்கி சிறப்பித்தது.
கல்வியாளர், பேராசிரியர், பேச்சாளர், இதழியலாளர், கவிஞர், வரலாற்றாசிரியர்,
திறனாய்வாளர், தன்முன்னேற்ற நூலாசிரியர், தமிழ்த்தொண்டர் என பன்முக ஆற்றல் கொண்ட அ.கி.ப.
1986-ஆம் ஆண்டு காலமானார்.