அ.கா.பெருமாள்

அ.கா.பெருமாள்

Profession எழுத்தாளர்

Biography

கன்னியாகுமரி பறக்கை கிராமத்தில், அழகம்பெருமாள் – பகவதியம்மா தம்பதியருக்கு
1947-இல்பிறந்தார். இயற்பெயர்: காக்கும்பெருமாள். (தந்தையார் மலையாள ஆசிரியராக
பணியாற்றி, பின்னர் நீதிமன்றத்தில் மலையாள ஆவணங்களை மொழிபெயர்க்கும் பணியைச் செய்தார்).

நாகர்கோவில் இந்து கல்லூரியில் தமிழ் இலக்கியத்தில் பி.ஏ. பட்டமும், கேரளா, பாலக்காடு
சித்தர் கல்லூரியில் எம்.ஏ. பட்டமும் பெற்றார். சித்தர் கல்லூரியில் தமிழ்த்துறைத் தலைவராக
இருந்த (எழுத்தாளர் ஹெப்சிபாவின் கணவர்) ஜேசுதாஸ் பாடம் நடத்திய முறையும், கல்லூரிக்கு
எம்.டி.வாசுதேவன் நாயர், சச்சி தானந்தன் போன்ற புகழ் பெற்ற எழுத்தாளர்களின் வருகையும்,
கலந்துரையாடலும் தமிழ், மலையாள இலக்கியங்கள் மீதான ஈடுபாட்டை உண்டாக்கின. நாகர்கோயிலில்
சுந்தர ராமசாமி யுடனான சந்திப்பு, அவர் நடத்திய ‘காகங்கள்’ மாதக் கூட்ட நிகழ்வுகள்,
விவாதங்கள் இவரை தீவிர வாசகராக்கின.

இக்காலகட்டத்தில் ஆரல்வாய்மொழியில் உள்ள அறிஞர் அண்ணா கல்லூரியில் தமிழ்த் துறை
விரிவுரையாளராகப் பணியில் சேர்ந்தார். பேராசிரியர் நா.வானமாமலை இவரை நாட்டுப்புற
ஆய்வைச் செய்யுமாறு வழிகாட்டினார். விளைவாக, 1978 முதல் 2014 வரை 18 நூல்களை
எழுதியுள்ளார்.

இவரது ‘ஆய்வுக் கட்டுரை’ நூல் கேரளப் பல்கலைக் கழகம், கோழிக்கோடு பல்கலைக் கழகம்,
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகம், திருச்சி பெரியார் அரசு தன்னாட்சி கல்லூரி
ஆகியவற்றில் பாடத்திட்டத்தில் வைக்கப்பட்டிருந்தது.

‘நாட்டாரியல் ஆய்வு வழிகாட்டி’ தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகம், பாளையங்கோட்டை தூய
சவேரியார் கல்லூரி ஆகியவற்றிலும், ‘தமிழ் இலக்கிய வரலாறு’ மனோன்மணியம் சுந்தரனார்
பல்கலைக் கழகத்திலும், ‘பொன்னிறத்தாள்கதை’ புதுதில்லி பல்கலைக் கழகத்திலும் பாட நூலாக
இருந்தன.

தமிழக அரசு தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலுக்கான விருதை 2002-இல்
‘தென்னிந்தியாவில் தோல்பாவைக் கூத்து’ நூலும், 2003-இல் ‘தென்குமரியின் கதை’ நூலும்
பெற்றுள்ளன.

இதுவரை 250-க்கும் மேற்பட்ட கருத்தரங்குகளில் கலந்துகொண்டு ஆய்வுக் கட்டுரைகளை
வழங்கியுள்ளார். பல்கலைக்கழக மான்யக் குழு, தமிழ் வளர்ச்சித் துறை, செம்மொழி தமிழாய்வு
மத்திய நிறுவனம், திருப்பதி பல்கலைக்கழகம், தமிழ் வளர்ச்சித் துறை ஆகியவற்றின் நிதி
உதவி யுடன் ஆய்வு மேற்கொண்டு ஆய்வு அறிக்கைகள் வெளியிட்டுள்ளார்.

இவரின் ஆய்வுப் பணியினைப் பாராட்டி கன்னியாகுமரி மாவட்ட தமிழ் எழுத்தாளர் சங்கம் ‘ஆய்வுச்
செம்மல்’ (2005), தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் ‘மக்கள் வரலாற்று ஆய்வாளர்’
(2006), நாகர்கோயில் செந்தமிழ் அருள்நெறிப் பேரவை ‘நாட்டார் வழக் காற்றியல் ஆய்வர்’ ஆகிய
விருதுகளை வழங்கிச் சிறப்பித்துள்ளன.