அரு. அப்பாசாமி

அரு. அப்பாசாமி

Profession ஆராய்ச்சியாளர்

Biography

புதுச்சேரியில் வசித்த அருணாச்சலம் – பச்சையம்மாள் தம்பதியருக்கு 15.6.1932 அன்று
புலவர் அரு.அப்பாசாமி பிறந்தார்.

பாகூர் மையப் பள்ளியில் தொடக்கக் கல்வியைப் பயின்ற இவர் 1949-இல் தமிழ்த் தேர்விலும்,
1950-இல் பிரெஞ்சுத் தேர்விலும் தேர்ச்சி பெற்று ‘செர்த்திபிக்கா’ சான்றிதழைப் பெற்றார்.

1963-இல் உள்துறை மின்துறைப் பிரிவு அலுவலகப் பணியில் தினக் கூலிக்கு சேர்ந்தார்.
1973-இல் பணி நிரந்தரம் செய்யப்பட்டு காரைக்காலுக்கு மாற்றலானார்.

இவருக்கு சிறு வயதிலேயே இயல்பாக கல்வெட்டு ஆய்வில் ஆர்வம் ஏற்பட்டிருந்தது. 1978-இல்
இவர் எழுதிய ‘திரு மாணிகுழி ஆளுடையார்’ எனும் கட்டுரை ‘தினமணிச் சுடர்’ இதழில்
வெளிவந்தது.

இவ்விதழில் இவரது கட்டுரைகள் தொடர்ந்து வெளிவந்தன. 1978 தொடங்கி புதுச்சேரி
வானொலியில் அவ்வப்போது உரைகளை நிகழ்த்திக் கொண்டிருந்தார்.

1983-இல் புதுச்சேரி பிரஞ்சு ஆய்வு நிறுவனத்தின் தமிழ் மொழித் துறையில் துணை
ஆய்வாளராகப் பணியில் சேர்ந்தார். இங்கு அச்சுப் பணிகளுக்கு ஏற்றவாறு படியெடுக்கும்
பணியிலும், மெய்ப்புத் திருத்துதல், குறிப்பு எழுதுதல் போன்ற பணிகளுடன் தமிழ் இலக்கண
அகராதி தொகுப்புப் பணியிலும் ஈடுபட்டார். 1993-இல் தனது 60ஆவது வயதில் பணி நிறைவு
பெற்றார்.

1997-இல் வெளிவந்த இவரது ‘புதுவை மண்ணில் இராசராசன் கண்ட கலைக்கோயில்’ என்ற முதல்
நூலுக்கு புதுவை அரசு கலை பண்பாட்டுத் துறையின் ‘தொல்காப்பிய விருது’ கிடைக்கப்
பெற்றார். 2002-இல் பல்வேறு கருத் தரங்குகளில் இவர் வாசித்தளித்த 14 கட்டுரைகளின்
தொகுப்பாக இரண்டாவது நூலும் வெளி வந்தது. அடுத்ததாக, 2010-இல் ‘திருவாமாத்தூர்
திருத்தலம் வரலாறும் பண்பாடும்’ என்ற நூலை வெளியிட்டார்.

புதுச்சேரி தமிழ் வளர்ச்சி நடவடிக்கைக் குழுவின் உறுப்பினரான இவர் புதுதில்லி தமிழ்ச்
சங்கத்தின் சார்பில் தமிழ் மைய ஆட்சிமொழி, செவ்வியல் மொழி மாநாட்டில் (29 – 30.4.2000)
கலந்து கொண்டர்.

இவருக்கு விழுப்புரம் இலக்கிய அணி ‘வரலாற்றுச் சிற்பி’ எனும் பட்டத்தை வழங்கியுள்ளது.
பாகூர் எமே ஆங்கிலப் பள்ளி, அண்ணா இளைஞர் நற்பணி மன்றம், முற்போக்கு எழுத்தாளர் சங்கம்
ஆகிய அமைப்புகளும் விருதுகள் வழங்கி சிறப்பித்துள்ளன.

கல்வெட்டுகள் குறித்து ஆய்வு செய்துவரும் எம்ஃபில், பிஎச்.டி. பட்ட ஆய்வாளர்களுக்குக்
கல்வெட்டுகள் தொடர்பான நூல்களையும் கருத்துகளையும் வழங்குவதுடன் அவர்களுடன் சம்பந்தப்பட்ட
இடங்களுக்குச் சென்றும் உதவி வருகிறார்.

இவருக்கு நான்கு மகள்கள், மூன்று மகன்கள். இவர்கள் நன்கு படித்து நல்ல பணியில் உள்ளனர்.
இதனால் ஒரு நிறைவான வாழ்க் கையை வாழ்ந்து வருவதாகக் கூறுகிறார்.