அருணாசலக்கவிராயர்

அருணாசலக்கவிராயர்

Profession கவிஞர்

Biography

தஞ்சை மாவட்டம், தில்லையாடியில் நல்லதம்பி பிள்ளை -வெள்ளையம்மாள் தம்பதியருக்கு 1712-இல்
பிறந்தார்.

கல்வியை உரிய பருவத்தில் பயின்றார். 12 வயதான போது பெற்றோரை இழந்தார். அதன் பின்பு
அவரது தாய்மாமாவின் அரவணைப்பில் வளர்ந்தார்.

தருமபுரிஆதீனத்தில் தமிழ்க் கிரந்தங்களும், ஆகம சாஸ்திரங்களும் படித்ததுடன் சம்ஸ்கிருத
மொழியையும் சேர்த்துக் கற்றார். தமிழ் இலக்கிய, இலக்கணம் மற்றும் சமய நூல்களிலும் புலமை
பெற்றார். சைவ மடத்தில் வளர்ந்ததோடு மட்டுமின்றி, தென் மொழிகளிலும் சிறந்து விளங்கினார்.

மேலும், சைவ சீலர்களாக விளங்கிய தம்பிரான்கள் பலரிடம் தமிழ் இலக்கண, இலக்கியங்கள், தமிழ்ச்
சாத்திரங்கள், சமயக் கல்வி, சைவ திருமுறைகள், வடமொழி ஆகியவற்றைக் கற்றுச் சிறந்து
விளங்கினார்.

தமது 18-வது வயதிற்குள் வடமொழியையும், தமிழிலுள்ள நூல்களையும் கற்றுத் தேர்ச்சி
பெற்றார். வடமொழி, தமிழ், தெலுங்கு ஆகிய மும்மொழிகளிலும் வல்லவர் கவிராயர்.

மும்மூர்த்திகள் என போற்றப்படும் தியாகராச சுவாமிகள், முத்துசுவாமி தீட்சிதர், சியாமா
சாஸ்திரிகள் ஆகியோருக்கு ஆதி மும்மூர்த்திகளுள் ஒருவரான இவர்,தமிழில் கீர்த்தனைகள்
உருவாக்கிய முன்னோடிகளான மூவரில் ஒருவர் ஆவார். நம் தமிழ் இசை அறிஞர்களால் போற்றப்படும்
தகுதி படைத்தவர். இளமையிலேயே கவி பாடும் புலமைமிக்கவர். பாடல்களை இசையுடன் சொற்
பொழிவாற்றும் திறமை பெற்றவர்.

தலையில் தாழ்வடமும், இடையில் தூய வெள்ளாடையும் பூண்டு, திருநீற்றுப்பூச்சு முதலியவற்றைப்
பொருந்தியவராய் சைவ பண்டாரக் கோலத்துடன் திகழ்ந்தார்.

இவர் சைவரான போதிலும் வைணவக் கடவுளான திருமாலின் அவதாரமான இராம அவதாரத்தை
விளக்கும் முகமாக 60-ஆவது வயதில் ‘இராம நாடக கீர்த்தனை’யை மிக அழகாக 40 பல்வேறு
இராகங்களைப் பயன்படுத்தி புதுமையான முறையில் இயற்றியுள்ளார். இராம காதையை நாடகமாகச்
செய்ய முயன்றதில் இருந்து இவருடைய புத்தாக்கச் சிந்தனை வெளிப்படுகிறது.

சீர்காழித் தலப்புராணம் என்பதில் சிவபெரு மான் எழுந்தருளி இருக்கும் சீர்காழிப் பதியின்
பன்னிரண்டு பெயர்களையும் கூறி, அப்பெயர் தோன்றுவதற்கான காரணங்களையும், அதற்கான
விளக்கங்களையும் கொடுத்து சிறப்பு செய்துள்ளார்.

தம் 30-ஆம் வயதில் திருமணம் செய்து கொண்டார். சீர்காழியிலேயே பல்லாண்டுகள் மனைவி,
மக்களோடு வாழ்ந்து கி.பி.1779-இல் தமது 67-வது வயதில் இறைவனடி சேர்ந்தார்.

சாதி மத பேதமின்றி, இலக்கியப் பணியாக நாடகம், புராணம், அந்தாதி, கோவை, பள்ளு,
பிள்ளைத்தமிழ் என பாரபட்சமின்றிப் பல்துறை வல்லுநராக பல நூல்களைப் படைத்துள்ளார்.