அய்க்கண்

அய்க்கண்

Profession எழுத்தாளர்

Biography

சிவகங்கை காரைக்குடி கோட்டையூரில் வசித்த முத்தையா அம்பலம் -அழகம்மை தம்பதியருக்கு
01.09.1935 அன்று பிறந்தார். இயற்பெயர் நாராயணன்.

காரைக்குடி அழகப்பா கல்லூரியில் பி.ஏ. பட்டம் பெற்று, புதுக்கோட்டை அரசு உயர்நிலைப்
பள்ளியிலும், காரைக்குடி நகர்மன்ற உயர்நிலைப் பள்ளியிலும் ஆசிரியராகப் பணியாற்றினார்.
சென்னைப் பல்கலைக் கழகத்தில் எம்.ஏ. பட்டம் பெற்று, திருப்பத்தூர் ஆறுமுகம் சீதையம்மாள்
கல்லூரியில் தமிழ்த்துறை டியூட்டர் வேலையில் சேர்ந்தார். பிறகு உதவிப் பேராசிரியர்,
பேராசிரியர், தமிழ்த் துறைத் தலைவர் எனப் படிப்படியாக உயர்ந்து 28 வருடங்கள் பணியாற்றி
பணி நிறைவு பெற்றார்.

1956-இல் அய்க்கண்ணுக்கு வசந்தாவுடன் திருமணம் நடைபெற்றது. சில மாதங்களில் ஆனந்த விகடன்
இதழில் இவரது ‘வள்ளியின் திருமணம்’ சிறுகதை வெளியாயிற்று. பல்வேறு இதழ்களிலும்
தொடர்ந்து எழுதினார். இவரது எழுத்துகள் 32 சிறுகதைத் தொகுதிகள், 17 புதினங்கள், 4
வரலாற்று புதினங்கள், 10 நாடகங்கள், 5 கட்டுரைத் தொகுதிகள், 3 பயண நூல்கள், 2 வாழ்க்கை
வரலாற்று நூல்கள் என 73 நூல்களாக வெளியாகியுள்ளன.

கோலாலம்பூர் உலகத் தமிழ்மறை மாநாடு நடத்திய உலக எழுத்தாளர்களிடையிலான சிறுகதைப்
போட்டி, பிரான்ஸ் நாட்டின் தமிழ்ச் சங்கம் நடத்திய உலக அளவிலான சிறுகதைப் போட்டி,
உத்திரபிரதேச அரசின் இந்தி சமஸ்தான் நடத்திய தென் மாநிலங்களுக்கான சிறுகதைப் போட்டி,
அனைத்திந்திய வானொலி நடத்திய நாடகப் போட்டி, ஹைதராபாத்தின் ‘சௌத் சென்ட்ரல் ரயில்வே’யின்
லலித்கலா நிலையம் நடத்திய நாடகப் போட்டி அனைத்திலும் இவரது படைப்புகள் முதல்
பரிசுகளைப் பெற்றன. தமிழக அரசின் முதல் பரிசுகளை மூன்று முறை ‘ஏணி’
நாடகத்திற்காகவும், ‘பிற்பகல்’, ‘சக்தி’ எனும் கதைகளுக்காகவும் பெற்றுள்ளார். ராஜா சர்.
அண்ணாமலை செட்டியார் விருதையும் பொற்கிழியையும் பெற்றார்.

இவரது நூல்கள் சென்னை, மதுரை, கோவை, திருச்சி பல்கலைக் கழகங்களிலும், சில தன்னாட்சிக்
கல்லூரிகளிலும், சிங்கப்பூர் பள்ளி, கல்லூரிகளிலும், தமிழக அரசின் 12-ஆம் வகுப்பு
துணைப்பாடத்திலும் பாடமாக இடம் பெற்றுள்ளன. இவரது கதைகள் ஆங்கிலம், இந்தி, வங்காளம்,
மலையாளம், கன்னடம், தெலுங்கு, ஒரியா ஆகிய மொழிகளில் வெளிவந்துள்ளன.

இவருக்கு அமெரிக்கா நிறுவனம் டாக்டர் பட்டம் வழங்கி சிறப்பித்தது. குன்றக்குடி
அடிகளாரின் ‘நற்கதை நம்பி’, காஞ்சி செயேந்திரரின் ‘இலக்கிய பரிசு’, அழகப்பா பல்கலைக்
கழகத்தின் ‘இலக்கியச் செல்வர்’, முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரத்தின் ‘எழுத்து வேந்தர்’ போன்ற
பல பட்டங்களை வழங்கப்பெற்றார்.

இவர் 11.4.2020 அன்று காலமானார்.