| Profession | எழுத்தாளர் |
|---|
அதிராம்பட்டினத்தில் முகம்மது மீராசாகிபு – ஜொகரா தம்பதியருக்கு 04.08.1940-இல்
பிறந்தார். இவரது 4-ஆம் வயதில் இவரது தந்தை இறைவனடி சேர்ந்தார். இறைபக்தி மிகுந்த
தாயாரின் அரவணைப்பில் வளர்ந்தார்.
ஆதிரையிலுள்ள ஆரம்பப் பாடசாலையிலும், காதிர் முகைதீன் உயர்நிலைப் பள்ளி யிலும் பள்ளிக்
கல்வியை முடித்தார். காதிர் முகைதீன் கல்லூரியில் பி.ஏ., சரித்திரம் பட்டம் பெற்றார்.
(இடையில் உத்திர பிரதேசத்திலுள்ள அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் ‘பயோகெமிஸ்ட்ரி’
ஓராண்டே படித்தார்.) காதிர் முகைதீன் கல்லூரியில் தமிழ்த் துறையில் பணியாற்றிய ‘தமிழ்க்
கடல்’ அப்துல் கபூரிடம் தமிழ்க் கற்றார். கவிதைகள், கட்டுரைகள், பேச்சுப் போட்டிகளில்
பங்கேற்று பரிசுகள் பெற்றார். சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் பி.எட்., பட்டம்
பெற்றார்.
1964-65 இல் மன்னார்குடி – சோழபாண்டி உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றினார்.
1970-இல் திருவையாறு சட்டமன்ற வேட்பாளராகப் பரிணமித்தார். அதன்பின் தாஹா தலைமை
ஆசிரியராகப் பொறுப்பேற்று திறம்பட இருபது ஆண்டுகள் பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்றார்.
‘கைரியத் பதிப்பகம்’ தொடங்கி, 20க்கும் மேற்பட்ட உரைநடை, கவிதை நூல்களை
வெளியிட்டுள்ளார். இறைப்புகழ் பாடும் ஏழு நூல்கள், நபி புகழ் பாடும் எட்டு நூல்கள்,
இறைநேசர்கள் புகழ் பாடும் பதினோரு நூல்கள், கலிஃபாக்கள் புகழ் பாடும் நான்கு நூல்கள்,
உரைநடை நூல்கள் ஏழு, இதர நூல்கள் இருபது என ஐம்பத்தேழு நூல்களை எழுதியுள்ளார். இவரது
நூல்களை ஆய்வு செய்து பலர் முனைவர், இளமுனைவர் பட்டங்களைப் பெற்றுள்ளனர்.
‘இஸ்லாமிய இலக்கியக் கழக’த்தின் துணைத் தலைவராக பொறுப்பேற்று 15 மாநாடுகளை
நடத்தியுள்ளார். தமிழ்நாட்டின் முக்கிய எழுத்தாளர்கள் பங்கேற்றனர். 1980-இல் அதிராம
பட்டினத்தில் தன் தந்தையின் முயற்சியினால் கட்டப்பட்டிருக்கும் மஆதினுல் ஹனாத்தி இஸ்லாமியச்
சங்கத்தில் மார்க்கப் பணியைத் தொடங்கினார்.
பள்ளிகளில் நூற்றுக்கணக்கான சொற்பொழிவுகள், கல்லூரிகளில் கவியரங்கங்கள், அருகாமை
ஊர்களிலுள்ள பள்ளிவாசல்களில் மார்க்க சொற்பொழிவு, பள்ளிவாசல் திறப்பு விழா, நபிகள்
நாயகம் பிறந்தநாள் விழா, மார்க்க கல்லூரிகள் பட்டமளிப்பு விழா ஆகிய வற்றில்
உரையாற்றுகிறார்.
மலேசிய பள்ளிவாசலில் 12 நாள்கள் தொடர்சொற் பொழிவு நிகழ்த் தினார். திருச்சி, காரைக்கால்
வானொலியில் கவிதைகளும் உரைகளும் நிகழ்த்துகிறார். பாரதி தாசன், பாரதியார் பல்கலைக்
கழகங்களில் உரையும், ஆய்வுக் கட்டுரையும் வழங்கியுள்ளார்.
அருட்கவி, ஆஷிக்கேரசூல், ஆன்மீகக் கவிஞர், கவிதைச் செம்மல், சவ்வாது புலவர் விருது,
தா.காசிம் விருது, தமிழ் இலக்கிய மாமணி விருது, தமிழ்மாமணி விருது, இலக்கியச்
சுடர், கலை இலக்கிய மேம்பாட்டு உலகப் பேரவை விருது, முரசொலி மாறன் விருது உள்ளிட்ட
பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளார்.