| Profession | எழுத்தாளர் |
|---|
சிவகங்கை காரைக்குடி அனந்தராமன் -சோபனா தம்பதியர்க்கு 27.02.1949 அன்று பிறந்தார்.
1964-இல் காரைக்குடி மீனாட்சி உயர்நிலைப் பள்ளியில் படிக்கும் காலத்திலேயே கதைகள் எழுதத்
தொடங்கி விட்டார். பள்ளத்தூர் சீதாலட்சுமி ஆச்சி மகளிர் கல்லூரியில் 1965-இல்
பி.யு.சி.யும், 1968-இல் இளநிலை வேதியியல் பட்டமும், 1970-இல் காரைக்குடி அழகப்பா
கல்லூரியில் தமிழ் முதுகலை பட்டமும் பெற்று அதே ஆண்டு பாத்திமா கல்லூரியில் தமிழ்
விரிவிரையாளராகப் பணியில் சேர்ந்தார். அப்போது அவருக்கு வயது 21. இரண்டு ஆண்டுகள்
தொடர்ச்சியாகவும், மூன்று ஆண்டுகள் அவ்வப்போதும் பணியாற்றினார். 1975-இல் பணிநிரந்தரம்
ஆனார். 2002-இல் துணை முதல்வர் ஆனார். 2006-இல் விருப்ப ஓய்வு பெற்றார்.
1972-இல் பேரா. நடராசன் அவர்களுடன் இவருக்குத் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு
1973-இல் ஒரு பெண் குழந்தை பிறந்தது.
1979-இல் இவரது முதல் சிறுகதை ‘ஓர் உயிர் விலை போகிறது’ அமரர் கல்கி நினைவு
சிறுகதைப் போட்டியில் முதல் பரிசு பெற்றது. 1985-இல் ‘பருவங்கள் மாறும்’ எனும் இவரது
முதல் சிறுகதைத் தொகுப்பு வெளியாயிற்று. ‘புதிய பிரவேசங்கள்’ (1994), ‘தடை
ஓட்டங்கள்’ (2001), ‘தேவந்தி’ (2011) ஆகிய சிறுகதை தொகுதிகளும், ‘விடுதலைக்கு முன்
தமிழ் நாவல்களில் பெண்கள்’, ‘பெண் இலக்கியம் வாசிப்பு’ (2001), ‘இலக்கிய இலக்குகள்’
(2004), ‘தமிழ் இலக்கிய வெளியில் பெண்மொழியும் பெண்ணும்’ (2006) ஆகிய கட்டுரைத்
தொகுதிகளும், ‘யாதுமாகி’ என்றொரு நாவலும் ஒரு படைப்பாளியாக இவர் தமிழ் இலக்கிய
உலகுக்கு அளித்தவை. ஒரு மொழிபெயர்ப்பாளராக பியோதர் தஸ்தயெவ்ஸ்யின் ‘குற்றமும்
தண்டனையும்’ (2007), ‘இடியட்’ (2010), ‘அசடன்’ (2010) ஆகிய மூன்று நூல்களையும்
தமிழுலகுக்குத் தந்திருக்கிறார். ‘அசடன்’ மொழிபெயர்ப்புக்காக 2013-இல் நல்லி – திசை
எட்டும் வழங்கிய ‘பாஷாபூஷண்’ விருதையும், அதே ஆண்டு எஸ்.ஆர்.எம்.பல்கலைக் கழக
துணைவேந்தர் வழங்கிய ‘ஜி.யூ.போப்’ விருதையும் பெற்றுள்ளார்.
இவரது பெண்ணியச் சமூகப் பணிகளுக்காக ‘ஸ்த்ரீ ரத்னா விருது’ (2002), ‘சிறந்த பெண்மணி
விருது'(2004), ‘கனடா தமிழ் இலக்கியத் தோட்ட விருது’ (2012) ஆகியவற்றைப்
பெற்றுள்ளார்.
மதுரை காமராசர் பல்கலைக் கழகம், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம், அன்னை தெரசா
மகளிர் பல்கலைக்கழகம், காந்தி கிராம கிராமியப் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் அறக்கட்டளை
சொற்பொழிவுகளையும், வானொலியில் 150-க்கும் மேற்பட்ட சொற் பொழிவுகளையும்
நிகழ்த்தியுள்ளார்.
இப்போதும் பல்வேறு வார, மாத இதழ்களில் இவரது சிறுகதைகள் வெளி வந்துகொண்டிருக் கின்றன.
வலைப்பூவிலும் தனது இலக்கியப் பயணத்தைத் நன்முறையில் தொடர்ந்து கொண்டிருக்கிறார்.