வ.நஞ்சுண்டான்

வ.நஞ்சுண்டான்

Profession எழுத்தாளர்

Biography

நாமக்கல் பரமத்திவேலூர் அனிச்சம் பாளையம் எனும் கிராமத்தில் வருணதேவன்- பழனியம்மாள்
தம்பதியருக்கு 15.06.1948 அன்று பிறந்தார்.

நன்செய் இடையாறு தொடக்கப் பள்ளியில் கல்வியையும், வேலூர் கண்டர் உயர்நிலைப் பள்ளியில்
கல்வியையும் பயின்றார். அவ்வாறு பயிலும்போது, ஆசிரியர்களைப் பார்த்து அவர்களைப் போல
தாமும் ஆசிரியராக வேண்டும் எனும் விருப்பம் ஏற்பட்டு, அரசு ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில்
ஆசிரியர் பயிற்சிப் பெற்றார்.

கரூர் மாவட்டத்தில் உள்ள புதுக்கநல்லி துவக்கப்பள்ளி ஆசிரியராக 1970-இல் பணி யாற்றத்
தொடங்கிய இவர், 1972-இல் புன்னம் பசுபதி ஓராசிரியர் பள்ளியிலும், 1976 – 1989இல்
ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியிலும், 1989-1990இல் நாமக்கல் மாவட்டத்திலுள்ள
பாண்டமங்கலம் பள்ளியிலும், 1991- 1999இல் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியிலும்
ஆசிரியராகப் பணியாற்றி, 1999-இல் திடுமல் ஊராட்சி ஒன்றியப் பள்ளியில்
தலைமையாசிரியராகப் பணி நிறைவு பெற்றார்.

இவரது துணைவியார்: கலாவதி. விஜய், செந்தில்குமரன், சுரேஷ் குமார் என மூன்று மகன்கள்.

இவர் ‘குழலை விஞ்சும் மழலை’, ‘நெஞ்சில் நிறைந்த பிஞ்சுகள்’, ‘உலா வரும் நிலா’, ‘உலகை
மாற்றுவோம்’, ‘மழலைப் பூக்கள்’, ‘பொய்யா விளக்கு’ எனும் ஏழு குழந்தைப் பாடல் தொகுதி
களையும், ‘உதிரம் சிந்தும் ஊதாப்பூக்கள்’ எனும் ஒரு கவிதைத் தொகுதியையும், ‘அம்மன் அடி
பணிவோம்’ எனும் ஒரு வழிபாட்டு நூலையும், ‘இலக்கியப் பெட்டகம்’, ‘பெண்ணே உனக்குச்
சீதனம்’, ‘விடுகதைகள்’ ஆகிய மூன்று கட்டுரைத் தொகுதிகளையும், ‘அறிவுப்பேழை’, ‘சிந்தை
மகிழும் விந்தைகள்’, ‘உலகிலேயே’, ‘அறிவியல் விருந்து’ ஆகிய நான்கு பொது அறிவு நூல்
களையும், ‘இரத்தினமாலை’, ‘ஒளிவிளக்கு’ எனும் இரு வாழ்க்கை வரலாற்று நூல்களையும்
இயற்றி யுள்ளார்.

‘குழலை விஞ்சும் மழலை’ நூலுக்காக அழ.வள்ளியப்பா விருது (1997), திருப்பூர் தமிழ்ச்
சங்கம் நடத்திய குழந்தை இலக்கியப் போட்டி யில் பரிசு, நாணய கண்காட்சிகள் நடத்தியதால்
‘நாணய நஞ்சுண்டான்’ பட்டம், அமெரிக்கக் கலை கலாச்சார மையத்தின் ‘கௌரவ டாக்டர் பட்டம்’,
ராஜ் தொலைக்காட்சியின் ‘சிறந்த மனிதர்’ விருது, தமிழ்நாடு அரசின் ‘டாக்டர்
இராதாகிருஷ்ணன் விருது’ ஆகியவற்றை பெற்றுள்ளார். தமிழ்நாடு அரசுப் பாட நூலில் இரண்டாம்
வகுப்பில் இவரது ‘சிட்டே சிட்டே பறந்து வா’ என்ற பாடல் இடம்பெற்றுள்ளது.

குழந்தைகளுக்காகவே இலக்கியப் பணிபுரிந்து குழந்தை இலக்கியத் துறையை வளர்த்த நஞ்சுண்டான்
13.04.2014 அன்று இயற்கை எய்தினார். இவரது வாழ்வும், இலக்கியப் பணியும் குழந்தைகளுக்கு
வழிகாட்டிகளாக உள்ளன.