| Profession | எழுத்தாளர் |
|---|
திருவண்ணாமலை வந்தவாசி அருகிலுள்ள ‘மேல்நர்மா’ கிராமத்தில் 1948 பிப்ரவரியில்
பிறந்தார்.
சிறுவயதிலேயே பாட்டிக்கு கதைப் புத்தகங்களைப் படித்துச் சொல்லும் பழக்கம் இருந்தது.
சென்னையில் இவர்கள் எழுத்தாளர் அகிலன் வீட்டுக்கு அருகில் குடியிருந்தனர். அதனால் அவரது
வீட்டுக்கு அடிக்கடி சென்று, அகிலன் கதைககள் எழுத எடுத்துக் கொள்ளும் முயற்சிகள்,
எத்தனங்கள் ஆகியவற்றை அருகிலிருந்து உன்னிப்பாகக் கவனித்தார்.
16-வது வயதில் கவிதைகள், சிறுகதைகள் எழுதத் தொடங்கினார். அவை ‘கணையாழி’,
‘கசடதபற’, ‘ஞானரதம்’, ‘தீபம்’ போன்ற இதழ்களில் வெளி வந்தன. ‘ஆனந்த விகடன்’ மூலமாக
பெரிய பத்திரிகைகளுக்கு எழுத வந்தார்.
தனது தாய்மாமன் பொறியாளர் வெங்கட்ரங்கனை வாழ்க்கைத் துணையாக ஏற்றார்.
1972இல் ‘ஆனந்தவிகடன்’, ‘குமுதம்’, ‘கல்கி’, ‘கலைமகள்’, ‘அமுதசுரபி’, ‘இதயம்
பேசுகிறது’, ‘குங்குமம்’, தேவி உட்பட அனைத்து முன்னணி இதழ்களிலும் எழுதினார்.
எழுத்தாளர்கள் கண்களில் புகைப்படக் கருவி இருப்பதாகவும், அவர்கள் அனைத்தையும் படம்
பிடித்து மற்றவர்களுக்கு படைப்பதில் வல்ல வர்கள் என்றும் கூறுவதுண்டு. அந்த வகையில்
எழுத்தாளர் இந்துமதி அதிக சமூக உணர்வும், அக்கறையும் நிறைந்தவர் என்பதை அவரது
படைப்புகள் வெளிப்படுத்துகின்றன.
1970- 90களில் இருந்த சமூகத்தை நம் கண் முன் நிறுத்தியுள்ளார். சமூக மாற்றத்தினால்
குடும்பங்களில் ஏற்பட்ட ருசிகரமான மாற்றங் களை, நிகழ்வுகளை கதாபாத்திரங்கள் வழியாக
பதிவு செய்திருக்கிறார். உண்மை நிலவரங்களையும், சில முரண்களையும் சொல்லத் தயங்கவில்லை.
மனித நேயத்தை அடிப்படையாகக் கொண்டு கதைகளைப் புனைந்துள்ளார்.
கற்பனையாக இல்லாமல் தான் சந்தித்த, பார்த்த, அக்கம் பக்கத்துச் சம்பவங்களை, மனதைத் தொட்ட
சமூக உணர்வுகளை, முக்கிய நிகழ்வுகளை, வாழ்க்கை மதிப்புகளை கதைகளாகப் படைத்துள்ளார்.
நயமான சொல்லாற்றல், எளிமையான நடையால் எழுத்துலகில் தனித்த முத்திரையைப் பதித்துள்ளார்.
‘குருத்து’, ‘மனிதன்’ (இரு சிறுகதைத் தொகுதி கள்), ‘பூமிக்கு வந்த சூரியன்கள்’
(கட்டுரைத் தொகுப்பு) உட்பட 72 புத்தகங்கள் வெளிவந் துள்ளன. ‘கருப்பு ரோஜா’ என்ற
படத்திற்கு வசனம் எழுதியுள்ளார். ‘கங்காயமுனா சரஸ்வதி’, ‘சுந்தரவனம்’, ‘நீ நான் அவன்’
ஆகிய தொலைக் காட்சித் தொடர்களையும் எழுதியுள்ளார்.
இவரது ‘தரையில் இறங்கும் விமானங்கள்’ எஸ்.ஐ.இ.டி. கல்லூரியில் துணைப் பாடமாக
வைக்கப்பட்டுள்ளது. ‘குருத்து’, ‘தண்டனை’ போன்ற சிறுகதைகளும் துணைப் பாடத்திட்டத்தில்
சேர்க்கப்பட்டவையே. மலையாளம், கன்னடம், தெலுங்கு ஆகிய மொழி களில் இவரது படைப்புகள்
மொழிபெயர்க்கப் பட்டுள்ளன.
இவர் சென்னையில் வாழ்ந்து வருகிறார்