| Profession | எழுத்தாளர் |
|---|
சிவகங்கை இளையான்குடியைச் சார்ந்த கீழாயூர் என்ற கிராமத்தில் வசித்த செய்யது ஆலம்
-இபுராகீம் பீவி தம்பதியருக்கு 11.09.1947 அன்று பிறந்தார்.
இவரது தந்தை மலேசியா -கோலாலம்பூரில் மளிகைக் கடை நடத்தி வந்தார். தாயார் தமிழ்நாட்டில்
இல்லத்தரசியாக தமது எட்டுக் குழந்தைகளையும் வளர்த்து வந்தார்.
தொடக்கக்கல்வியை சொந்த ஊரில் படித்தவர், 12-ஆம் வயதில் மலாயா சென்று அங்கு சில ஆண்டுகள்
படித்து, மீண்டும் தமிழகம் திரும்பி திருச்சி ஜமால் முகம்மது கல்லூரியில் இளங்கலை ஆங்கில
இலக்கியம் படித்தார். இரண்டாம் ஆண்டு படிக்கும்போது மறுபடியும் மலாயா சென்றுவிட்டார்.
அங்கு தமிழ் இலக்கண, இலக்கியங்களை சுயமுயற்சியில் கற்றுக் கொண்டார். ‘தேர்வுகள் எழுதி
‘ஏ’ மதிப்பெண்களைப் பெற்றார்.
1975-இல், தனது 28-ஆம் அகவையில் ஹலிமா-வைத் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு
நூர்சமீமா என்றொரு மகள்.
சீனி தனது 20-ஆம் வயதில் கோலாலம்பூரில் உள்ள ஒரு கப்பல் நிறுவனத்தில் வேலைக்குச்
சேர்ந்து, சரக்குப் பொருட்களைச் சேகரிப்பவராகப் பணியாற்றினார். 24-ஆம் வயதில் ‘மரைக்
காண்’ என்ற புத்தக வெளியீடு மற்றும் விற்பனை நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தார்.
27-ஆம் வயதில் (1974) கடார மாநிலம், அலோர் ஸ்டாரில் தாமே ஒரு புத்தக நிறுவனத்தைத்
தொடங்கி நடத்தினார். தொழில் சிக்கலால் ஆறு ஆண்டுகளுக்குப் பின் ஒரு மளிகைக் கடையைத்
திறந்தார். மூன்று ஆண்டுகளுக்குப் பின் சிங்கையில் ஒரு நாணயம் மாற்று நிறுவனத்தில்
வேலைக்குச் சேர்ந்தார். 1997-இல் ‘உங்கள் குரல்’ என்றொரு மாத இதழைத் தொடங்கினார். அதன்
மூலமாக தமது தமிழ்ப் பணியைத் தொடங்கினார்.
‘தேன்கூடு’ – இவரது கவிதைத் தொகுதி. இந்நூல் மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின்
டான்ஸ்ரீ மாணிக்கவாசகம் பரிசைப் பெற்றது. மேலும், இரண்டு இலக்கண நூல்கள், ஓர் இலக்கியத்
தேர்வு வழிகாட்டி ஆகியவற்றையும் எழுதியுள்ளார். ‘உங்கள் குரல்’, ‘கவிதைப் பூங்கொத்து’
ஆகியவை இவரது தொகுப்பு நூல்கள். இவரது நூல்களை நால்வர் ஆய்வு செய்து பட்டம்
பெற்றுள்ளனர்.
செம்மொழி மாநாடு (2010), சிங்கப்பூர்த் தேசியக் கல்விக் கழகத்தின் கருத்தரங்கு
ஆகியவற்றில் ஆய்வுக் கட்டுரைகள் வழங்கியுள்ளார். ‘உங்கள் குரல்’ இதழில் பல்வேறு கட்டுரைகளை
எழுதினார்.
‘இறையருட் கவிஞர்’ (2007), ‘தொல்காப்பிய ஞாயிறு’ (2007), ‘இலக்கியச் சுடர்’ (2014)
ஆகிய விருதுகளைப் பெற்றார்.
07.08.2014 அன்று மாரடைப்பால் காலமான இவருக்கு மலேசியா வடக்கு முதல் தெற்கு வரை பல
இரங்கற் கூட்டங்கள் நடைபெற்றன.