பேராசிரியர் கி.நாச்சிமுத்து

பேராசிரியர் கி.நாச்சிமுத்து

Profession அறிஞர்

Biography

கோவை கொடுவாய் கிராமத்தில் ஏழை விவசாயக் குடும்பத்தைச் சார்ந்த கிருஷ்ணசாமி – நாகம்மாள்
தம்பதியருக்கு 24.08.1947 அன்று பிறந்தார்.

நான்காம் வகுப்பு வரை திண்ணைப் பள்ளியில் கல்வி பயின்று, பொங்கலூரிலுள்ள அரசு உயர்நிலைப்
பள்ளியில், பள்ளிக் கல்வியை முடித்தார். கோவை பூ.சு.கோ. கலைக்கல்லூரியில் புகமுக
வகுப்பும், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் பட்டமும், கேரளப் பல்கலைக்கழகத்தில்
முதுகலைப் பட்டமும் பெற்றார்.

1975-இல் கிருஷ்ணவேணி அம்மையாரைத் திருமணம் செய்துகொண்டார். இவர் களுக்கு கன்னியா,
நித்தியா என இரு மகள்கள்.

மொழியியல் அறிஞரான கி.நா., தமிழ், மலையாளம், ஆங்கிலம், இந்தி, சமஸ்கிருதம், ஜெர்மன்,
போலிஷ் எனப் பன்மொழிப் புலமை பெற்றவர்.

கேரளா பல்கலைக்கழகத் தமிழ்த் துறையில் 1973-இல் விரிவுரையாளராகப் பணியில் சேர்ந்தார்.
1982-88 இல் இணைப் பேராசிரியராகவும், 1998-2007 இல் பேராசிரியராகவும்,
தமிழ்த்துறைத் தலைவராகவும், 2001-05 இல் கீழை கலைப்புல முதன்மையராகவும், 2000-02 இல்
கேரள பல்கலைக்கழகப் பேரவை உறுப்பினராகவும், 2007-13 இல் ஜவஹர்லால் பல்கலைக்கழகத்தில்
இந்திய மொழியியல் பள்ளியின் தலைவராகவும் பணியாற்றியுள்ளார். தற்போது 2013 முதல்
திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத் தமிழ்த் துறைத் தலைவராகப் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்.

பல்வேறு நிறுவனங்களில் ஆயுள் உறுப்பின ராகவும் செயலாற்றுகிறார்.

இலங்கை, ஜெர்மன், பெல்ஜியம், நெதர்லாந்து, பிரான்ஸ், ஸ்வீடன், போலந்து போன்ற நாடு களுக்குப்
பயணம் மேற்கொண்டு கல்வி தொடர் பான, ஆய்வு தொடர்பான பணிகளைச் செய்துள்ளார்.

கி.நா., மொழியியல், இலக்கியம், இலக்கணம் போன்றவற்றில் மட்டுமல்லாது தற்கால
இலக்கியத்திலும் ஆர்வம் கொண்டிருப்பவர். நகுலன், மாதவன், நீல.பத்மநாபன் போன்ற
எழுத்தாளர்களுடன் உறவு வைத்துக் கொண்டிருந்தார்.

இவர் ‘கரையேற்றுங் கருத்துகள்’, ‘இலக்கண ஆராய்ச்சிக் கட்டுரைகள்’, ‘தொல்காப்பியக்
கட்டுரைகள்’, ‘தமிழ் தந்த சான்றோர்கள்’, ‘உலகம் தேடும் தமிழ்’, ‘கல்வெட்டுகளும்
சுவடிகளும்’, ‘நாராயணகுருவும் சமூக நீதியும்’, ‘உ.வே.சா இலக்கணப் படைப்புகள்’,
‘தமிழ் இடப்பெயர்வு’, ‘சோழன் பூர்வ பட்டம் கூறும் கொங்கு நாட்டு ஊர்ப்பெயர்கள்’ என பத்து
நூல்களை எழுதியுள்ளார்.

புதுவை சங்கரதாஸ் இயல் இசை நாடக மனறத்தின் ‘மனோன்மணியம்’ விருது (2004),
திருவனந்தபுரம் தமிழ்ச் சங்கத்தின் மகாகவி உள்ளூர் பரமேஷ்வரர்’ விருது (2005), மணற்
கேணி இரவிகுமாரின் ‘நிகரி அல்லது சமத்துவப் போராசிரியர்’ விருது ஆகியவற்றை வழங்கப்
பெற்றுள்ளார்.