| Profession | எழுத்தாளர் |
|---|
மயிலம் நல்ஆமூரில் கோவிந்தசாமிக் கவுண்டர்- தனலட்சுமி தம்பதி யருக்குத் 26.3.1947-இல்
பிறந்தார்.
நல்லாமூர், மயிலம் பள்ளிகளில் கல்வியைப் முடித்து, மயிலம் சிவஞான பாலய சுவாமிகள்
தமிழ்க் கல்லூரியில் வித்துவான் பட்டம் பெற்றார். தமிழ் இலக்கியத்தில் இளங்கலை (பி.ஏ.)
பட்டம் பெற்றார்.
1969-இல்சென்னை கோபாலபுரம் அரசு உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராகப் பணியில்
சேர்ந்தார். பிறகு வேடந்தாங்கல் பள்ளியிலும், நங்கைநல்லூர் அரசு உயர் நிலைப் பள்ளியிலும்
பணியாற்றினார்.
1974-இல் இவருக்கும் அம்சவேணி அம்மையாருக்கும் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு பெ.
மயிலவேலன், பெ.வனிதாமணி, பெ.ஜோதிப்ரியா என மூன்று குழந்தைகள்.
அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பி.எட். பட்டம் பெற்றார். பச்சையப்பன் கல்லூரியில் பேரா.
குருவிக்கரம்பை சண்முகம் அவர்களின் வழிகாட்டுதலில் மாலை நேரக் கல்லூரியில் பயின்று இளம்
முனைவர் (எம்ஃபில்) பட்டம் பெற்றார். பின்னர் அவருடைய வழிகாட்டுதலிலேயே ‘திண்டிவனம்
வட்டார நாட்டுப்புறப் பாடல்கள்’ என்னும் தலைப்பில் ஆய்வு செய்து முனைவர் (பிஎச்.டி.) பட்டம்
பெற்றார்.
1975-இல் நங்கைநல்லூர் பள்ளியில் பணியாற்றிய காலத்திலேயே சாரணர் இயக்கத்தில் இணைந்து
பணியாற்றினார். 1979-இல் புது தில்லிக்கு சாரண மாணவர்களையும் அழைத்து சென்று
குடியரசுத் தலைவர் நீலம் சஞ்சீவி ரெட்டியிடம் வாழ்த்து பெறச் செய்தார்.
தனது மனைவியின் பெயரில் ‘அம்சா ஆப்செட் பிரிண்டர்ஸ்’ அச்சகத்தை நிறுவினார். தனது மகளின்
பெயரில் ‘வனிதா பதிப்பகம்’ தொடங்கினார். தனது மகன் பெ.மயில வேலனைப்
பதிப்பாசிரியராகப் பொறுப்பு வகிக்கச் செய்து தமது நூல்கள் அனைத்தையும் மற்றவர்களின்
நூல்களையும் இப்பதிப்பகம் மூலமாகவே வெளியிடுகிறார்.
2004-இல் ‘தமிழகக் கல்வி ஆராய்ச்சி வளர்ச்சி நிறுவன’த்தைத் தொடங்கி அதன் இயக்குநராகச்
செயல்படுகிறார். ஒவ்வோர் ஆண்டும் தலை சிறந்த 50 ஆசிரியர்களைத் தேர்ந்தெடுத்து ‘தமிழக
நல்லாசிரியர்’ விருது வழங்கி வருகிறார்.
இதுவரை உரை நூல்கள்-5, நாட்டுப்புறவியல் – 5, சாரணர் இயக்கம் தொடர்பானவை- 11 ,
கல்வி – 7, இலக்கணம்- 9, சுயமுன்னேற்றம்- 2, வரலாறு-5, சிறுவர் இலக்கியம்-3, பக்தி –
2, அகராதி-1, மது விழிப்புணர்வு-1, கட்டுரைகள் – 3 ஆகிய நூல்களை எழுதி
வெளியிட்டுள்ளார். 9 நூல்களை பதிப்பித்துள்ளார்.
தமிழக அரசின் டாக்டர் இராதாகிருஷ்ணன் விருது உள்ளிட்ட ஏராளமான விருதுகளையும்
பரிசுகளையும் பெற்றுள்ளார்.