ச.கல்யாணராமன்

ச.கல்யாணராமன்

Profession அறிஞர்

Biography

தஞ்சை மாவட்டம், பந்தநல்லூரில் சக்கரபாணி -இராசம்மாள் தம்பதியரின் மூத்த மகனாக பிறந்தார்.
இவருக்கு தம்பிகள் ஐவர், தங்கை ஒருவர்.

குத்தாலம் உயர்நிலைப் பள்ளியில் படிக்கும் காலத்திலேயே கதைகள் எழுதவும், அதைப்
பத்திரிகைகளுக்கு தபாலில் அனுப்பி வைக்கவும் தொடங்கி விட்டார். தபாலில் ஸ்டாம்ப்
ஒட்டாததால் பல முறை தண்டம் கட்டி, ஒரு முறை ஆசிரியரிடம் அடியும் வாங்கியிருக்கிறார்.

கும்பகோணம் அரசு கலைக் கல்லூரியில் இன்டர்மீடியட் (வரலாறு) படித்தார். கல்லூரி நூலகத்தில்
இருந்த ஏராளமான நூல்களைப் படித்தார். பிறகு சொந்த ஊரில் நூலகம் வந்தது. இவரது தந்தை
ஊராட்சி மன்ற உறுப்பினராக இருந்தார். ஆகவே புத்தம் புதிய புத்தகங்களை ஆர்வமாக இரவும்
பகலும் படித்தார்.

இன்டர்மீடியட் படித்த காலத்திலேயே சிறு கதைகள் எழுதத் தொடங்கினார். அரு.ராம நாதன்
நடத்திய ‘காதல்’ இதழில் இவரது சிறு கதைகள் தொடர்ந்து வெளிவந்தன. ‘உமா’ திங்க ளிதழ்
மாணவர் சிறுகதைப் போட்டி ஒன்றை நடத்தியது. அதில் இவரது சிறுகதைக்கு பரிசாக ரூ.75
கிடைத்தது. அதன்பின் நிறைய கதைகளை பல்வேறு இதழ்களில் எழுதினார்.

1959-இல் நெய்வேலி நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தார். தஞ்சாவூர் சோதியைத் திருமணம்
செய்து கொண்டார். தி.மு.க. தலைவர்களில் ஒருவரான மதியழகன் தலைமையில் திருமணம்.

துணைவிக்குத் தமது ஊரில் ஓராசிரியர் பள்ளியில் வேலை கிடைத்தது. ஆகவே, போதுமான
வருமானம் கிடைத்த சூழலில் ‘இன்பத்துள் இன்பம்’ எனும் நாடக நூலை எழுதி டாக்டர் மு.வ.
முன்னுரையுடன் தானே வெளியிட்டார். இந்நூல் தமிழக அரசின் பரிசைப் பெற்றது.

அடுத்து, சிறுகதைகளைத் தொகுத்து ‘சூடினர் இட்ட பூ’ எனும் நூலாக எழுத்தாளர் அகிலன்
முன்னுரையுடன் வெளியிட்டார்.

இதுவரை 11 நாடக நூல்களையும், 10 சிறு கதைத் தொகுதிகளையும், 9 புதினங்களையும், 12
சிறுவர் நூல்களையும், 6 கட்டுரைத் தொகுதி களையும் வெளியிட்டுள்ளார்.

எழுத்தாளர் ச.கலியாணராமன் படைப்புகள் அனைத்தும் அவரது சமகால சமுதாயத்தின் பதிவுகளாக
உள்ளன. கற்பனைக்கு முக்கியத் துவம் கொடுக்காமல், வாழ்வியல் உண்மைகளை, சமுதாயத்தில்
புரையோடி இருக்கும் வறுமையின் துயரத்தை, மூடநம்பிக்கைகளை, சாதியக் கொடுமைகளை பதிவு
செய்திருக்கிறார். சில படைப்புகள் காதல் பற்றியவை. கல்விச் சிந்தனை களையும்
விதைத்துள்ளார்.

பொதுவாக இவரது படைப்புகள் மனதிற்கு அமைதியையும், நல்லெண்ணத்தையும் தருபவை.