புதுவை சந்திரஹரி

புதுவை சந்திரஹரி

Profession அறிஞர்

Biography

கும்பகோணத்தில் டி.கே.நடராஜ ராவ் – என். தனலட்சுமிபாய் தம்பதியருக்கு 22.09.1946
அன்று பிறந்தார். இயற்பெயர்: என்.ஹரிதாஸ்.

பள்ளிக் கல்வியை கும்பகோணத்திலும், புதுச்சேரியிலும் முடித்தார். பி.எஸ்ஸி. (தாவரவியல்)
பட்டத்தை சென்னைப் பல்கலைக்கழகத் திலும், மைசூரிலுள்ள பி.எட். பட்டத்தையும், எம்.ஏ.
தத்துவத்தை ஆந்திராவிலுள்ள வெங்கடேஸ்வரா பல்கலைக்கழகத்திலும், எம்.எட்.பட்டத்தை ஹிமாச்சல
பிரதேச பல்கலைக்கழகத்திலும் பெற்றார்.

1972-இல் இவருக்கும் வேலூர் சந்திரகாந்திக்கும் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு
ஈஸ்வரதாஸ், ஆனந்தலட்சுமி, விஷ்ணுதாஸ் என மூன்று பிள்ளைகள். தற்போது புதுவையிலேயே
வசித்து வருகின்றனர்.

மனைவியின் பெயரை இணைத்து ‘சந்திரஹரி’ எனும் புனைபெயரில் எழுதத் தொடங்கினார்.

1970-இல் குருசுகுப்பம் அரசு உயர்நிலைப் பள்ளியில் அறிவியல் ஆசிரியராக பணியில்
சேர்ந்தார். 1979 முதல் புதுவை கலவைக் கல்லூரி அரசு மேல்நிலைப் பள்ளியில் தத்துவ
ஆசிரியராகவும், 1989 முதல் அதே பள்ளியில் துணை முதல்வராகவும், 1998 முதல்
வில்லியனூர் விவேகானந்தர் அரசு மேல்நிலைப் பள்ளியில் துணை முதல்வராகவும், 2000 முதல்
என்.மே.சி. அரசு மேல்நிலைப் பள்ளியில் முதல்வராகவும், 2004 முதல்காலாப்பட்டு அரசு
மேல்நிலைப் பள்ளியில் முதல்வராகவும் 2005, 2006 ஆண்டுகளில் ‘அனைவருக்கும் கல்வி
இயக்க’த்தில் மாநில திட்ட இயக்குநராகவும் அடுத்தடுத்து பணியாற்றியுள்ளார். 1996-இல்
நல்லாசிரியர் விருதைப் பெற்றார்.

புதுவை சந்திரஹரி 7 சிறுகதைத் தொகுதிகள், 4 கவிதை நூல்கள் 2, நாவல்கள் 2, சிறுவர்
நூல்கள் என 16 நூல்களை எழுதியுள்ளார்.

இவருடைய ‘விளாம்பழ ஓடு’, ‘மேடுகள் பள்ளங்கள்’ ஆகிய இரு சிறுகதைத் தொகுதி களும்,
அயல் மகரந்தம் எனும் புதினமும் புதுவை அரசின் கம்பன் விருதைப் பெற்றுள்ளன. ‘காதலடி நீ
எனக்கு’ எனும் புதினம் தமிழ் எழுத் தாளர் கழக இலக்கியப் பரிசை பெற்றது. புதுவை
எழுத்தாளர் சங்கம் – மனித உரிமை ஆய்வு மற்றும் உயர்வுறுதல் சங்கம் – மக்கள் காப்புரிமை
மாத இதழ் இணைந்து நடத்திய புதினப் போட்டியில் இவரது ‘அயல் மகரந்தம்’ பரிசைப் பெற்றது.

இவரது சிறுகதைகளும், கவிதைகளும் கிட்டத்தட்ட தமிழில் வெளிவரும் அனைத்து முக்கிய
பத்திரிகைகள் நடத்தும் போட்டிகளிலும் கலந்து கொண்டு பரிசுகளைக் குவித்துள்ளன. அத்துடன்
இலக்கியச் சிந்தனை பரிசையும் பெற்றுள்ளன. அழகப்பா பல்கலைக் கழகத்தில் இவரது சிறுகதைகள்
எம்.ஃபில் படிப்பிற்காக ஆய்வு செய்யப்பட்டுள்ளன. இவரது ‘புதுச் செருப்பு’ சிறுகதை
‘வலி’ எனும் திரைப் படமாக இயக்குநர் விஜயசேகரால் எடுக்கப்பட்டுள்ளது.