| Profession | அறிஞர் |
|---|
சேலம் செக்கடிப்பட்டி சிற்றூரில் வீ.உண்ணாமலை (என்கிற) மித்ரா 1945-இல் பிறந்தார்.
தமது பள்ளிக் கல்வியையும், இளங்கலைப் பட்டத்தையும் சேலத்தில்பயின்றார். சென்னை மாநிலக்
கல்லூரியில் முதுகலை பட்டமும், சிதம்பரம் அண்ணா மலை பல்கலைக் கழகத்தில் ‘முடியரசனின்
பூங்கொடி’ என்ற தலைப்பில் இளமுனைவர் பட்டமும், ‘புதுக் கவிதையில் சமுதாயம்’ என்ற
தலைப்பில் முனைவர் பட்டமும், ‘ஜப்பானிய – தமிழக ஹைக் கூக்கள் ஒப்பீடு’ என்ற தலைப்பில்
ஆய்வு செய்து தமிழகத்திலேயே முதுமுனைவர் பட்டம் பெற்ற முதல் பெண்மணி என்ற சிறப்பைப்
பெற்றார். மேலும், இளநிலை வடமொழி பட்டயம், இந்தி மொழிப் பட்டயம், கல்வெட்டியல் சான்றிதழ்
ஆகியனவும் பெற்றுள்ளார்.
இவர் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழியல் துறையில் பேராசிரியராக 33 ஆண்டுகள்
பணியாற்றியுள்ளார். மேலும், அண்ணாமலைப் பல்கலைக் கழகத் தமிழியல் துறையிலேயே தமது சொந்த
முயற்சியாலும், பொருட் செலவினாலும் படைப்பிலக்கிய இருக்கையை உருவாக்கி இன்று
வரையிலும் அதன் வருகைதரு பேராசிரியராக பணியாற்றுகிறார்.
இவரது வழிகாட்டுதலில் முனைவர் பட்டம் பெற்றவர்களில் பலர் பேராசிரியர்களாகவும், துறைத்
தலைவர்களாகவும் பணியாற்றுகின்றனர்.
இவர் புதுக்கவிதை நூல்கள்- 4, ஹைக்கூ நூல்கள்-5, மொழிபெயர்ப்புகள்-3, உரைநடை-30 என
40-க்கும் மேற்பட்ட நூல்களைப் படைத் துள்ளார்.
இவருடைய ‘ஹைகூ கவிதைகள்’, ‘தாகம் தீரா வானம்பாடிகள்’, ‘புதுக்கவிதைகளில சமுதாயம்’,
‘குடையில் கேட்ட பேச்சு’, ‘நிரந்தர நிழல்கள்’, ‘மௌனம் சுமக்கும் வானம்’ போன்ற நூல்கள்
தியாகராஜா கல்லூரி, புதுவைப் பல்கலைக் கழகம், சாரதா கல்லூரி, பாரதியார் பல்கலைக்
கழகம், அண்ணாமலைப் பல்கலைக் கழகம், ஏ.வி.சி. கல்லூரி, மனோன்மணியம் சுந்தரனார்
பல்கலைக்கழகம், பராசக்தி மகளிர் கல்லூரி தமிழிலக்கிய உயராய்வு மையம், அரசினர் கல்லூரி
கும்பகோணம் போன்ற கல்லூரிகளிலும், பல்கலைக்கழகங்களிலும் பாட நூல்களாக இடம்பெற்றுள்ளன.
மேலும், இளமுனைவர், முனைவர் பட்டத்திற்காக பல மாணவர்கள் இவரது படைப்புகளை ஆய்வு செய்து
வருகின்றனர்.
இலங்கை, சென்னை, திருச்சி, பாண்டிச்சேரி வானொலி நிலையங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளை
இவர் வழங்கியுள்ளார்.
‘இளம் சாதனையாளர் விருது’ கல்வியல் வல்லுநர் விருது, வெற்றிப் பெண்மணி, கவிதாயிணி,
ஹைக்கூ ஆய்வறிஞர் சிறப்பு விருது, சக்தி விருது உட்பட ஏராளமான விருதுகளைப்
பெற்றுள்ளார்.