த.அகரமுதல்வன்

த.அகரமுதல்வன்

Profession அறிஞர்

Biography

பூம்புகார் ஆலங்காடு கிராம கோவிந்தசாமி – வைரக்கண்ணம்மா தம்பதியருக்கு 15.01.1944
அன்று பிறந்தார். இவர் பிறந்த மறுநாளே தாயார் இறந்தார். அதனால், குழந்தைப்பேறு இல்லாத
அவரது பெரியப்பா நடேசனும் அவரது துணைவி வைரத்தம்மாளும் இவரை திருவெண்காட்டிற்கு
தூக்கி வந்து, தங்கள் குல தெய்வமான ‘அகோரமூர்த்தி’ எனும் பெயர் சூட்டி வளர்த்தனர்.

ஐந்து வயதில் உள்ளூர் தொடக்கப் பள்ளியில் சேர்ந்து ஐந்தாம் வகுப்பு வரை பயின்று, 6 முதல்
11 வரை திருவெண்காடு பள்ளியில் கற்றார். மயிலாடுதுறை ஏ.வி.சி. கல்லூரியில்
பி.யூ.சி., பொருளாதாரத்தில் இளங்கலை பட்டம் பெற்றார். காரைக்கால் எம்.இ.எஸ்.
உயர்நிலைப்பள்ளியில் ஆசிரியர் பணியில் சேர்ந்தார்.

பிறகு, அறந்தாங்கியிலும், மயிலாடுதுறையிலும் புள்ளி விவரத் துறையில் பணியாற்றினார்.
இப்பணியில் விருப்பமில்லாமல் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் தமிழ் முதுகலையில் சேர்ந்து
முதல் வகுப்பில் பட்டம் பெற்றார்.

1970-இல் மேலையூரிலுள்ள கல்லூரியில் தமிழ்ப் பயிற்றுநராக வேலையில் சேர்ந்து, அதே
கல்லூரியில் விரிவுரையாளர், பேராசிரியர், துறைத் தலைவர் எனப் பணி உயர்வு பெற்று 32
ஆண்டுகள் பணியாற்றிய பின் 2005-இல் பணி நிறைவு பெற்றார்.

‘ஒரு அக்ரஹாரம் ஒளி இழக்கிறது’, ‘காதலெனும் வேள்வித்தீ’ எனும் இரு நாவல்களையும்,
‘புதிய அலைகள்’, ‘புதிய மாப்பிள்ளை’ எனும் இரு சிறுகதை நூல்களையும், 24 தலவரலாற்று
நூற் களையும், 12 சமய நூற்களையும் எழுதியுள்ளார்.

பள்ளி நாட்களில் தொடங்கிய மேடைப் பேச்சில் இன்றும் தொடர்ந்து நடைபோடுகிறார். இவரது
பேச்சைப் பதிவு செய்து அப்படியே நூலாக்கலாம். அப்படி நூலானவைதாம் ‘பாட்டிலே பண்பு’,
‘திருக்குறள் இயக்கம்’, ‘பெருமைமிகு பிள்ளையார்’, ‘அறங்காத்த அனுமன்’ போன்றவை.

‘பூஞ்சோலை’ எனும் திங்களிதழுக்கும், ‘குடந்தை இலக்கியச் சோலை’ எனும் காலாண்டு
இதழுக்கும் ஆசிரியராய் இருந்து பதிப்பித்துள்ளார். இவர் தனது புத்தகங்களை, தனது
துணைவியார் இலக்குமியைப் பதிப்பாளராகக் கொண்ட ‘பார்வதி பதிப்பகம்’ மூலமாகவே
வெளியிட்டு வரு கிறார். இப்பதிப்பகத்தின் மூலம் சமய நூல்கள் பலவற்றையும்
பதிப்பித்துள்ளார்.

இவரது பணிக்குச் சிறப்புச் சேர்க்கும் வகையில் பல்வேறு அமைப்புகள் இவருக்கு ‘சிவத் தமிழ்ச்
செல்வர்’, ‘சைவத் தமிழ்ச் செம்மல்’, ‘சமய போதனா ரத்னம்’, ‘தெய்வத்தமிழ் நாவலர்’, ‘இலக்கிய
மாமணி’, அருள்மொழிச் செல்வர்’, ‘ஆன்மிகப் பேரொளி’, ‘செந்தமிழ்க் காவலர்’, ‘ஆன்மீக
அரசு’, ‘செந்தமிழ் ஆழி’, ‘ஞானத் தமிழருவி’, ‘சிந்தனை வேந்தர்’, ‘சமய இலக்கிய
கலாநிதி’, ‘அருள்மொழிப் புலவர்’, ‘தமிழ்ச் சுரங்கம்’, ‘எழுத்துச் சித்தர்’, ‘இலக்கியச்
செம்மல்’, ‘நற்றமிழ் நாவரசு’, ‘வாழ்நாள் சாதனையாளர்’, ‘அருள் மொழி நாவலர்’ ஆகிய
விருதுகளை வழங்கிச் சிறப்பித்துள்ளன.