| Profession | எழுத்தாளர் |
|---|
சென்னையில் சூரியநாராயணன் – இராஜலட்சுமி தம்பதியருக்கு 14.10.1942 அன்று பிறந்தார்.
சென்னையிலேயே பள்ளி, கல்லூரிப் படிப்பை நிறைவு செய்தார்.
தனது 21-ஆம் வயதில் 1963-இல் இவருக்குத் திருமணம் நடைபெற்றது. கணவர்: டி.எஸ்.
சந்திரசேகரன்.
திருமணத்திற்குப் பிறகு ஓர் ஆண்டு போபாலிலும், பின்னர் சென்னையிலும், விழுப்புரத்திலும்
வாழ்ந்தனர். இவரது கணவர் 1984-இல் இயற்கை எய்தினார்.
சிவசங்கரி திருமணத்திற்குப் பின் சென்னையில் ஒரு வங்கியில் பணிபுரிந்தார். இவருக்குத்
திருமணமாகி ஏழு ஆண்டுகள் கடந்தும் குழந்தைப்பேறு இல்லை. இச்சூழலில் ஒரு வளைகாப்பு
விழா வுக்குச் சென்றபோது அவரின் மனநிலை அவரைக் கதை எழுதத் தூண்டியது. ‘அவர்கள்
பேசட்டும்’ என்று அவர் எழுதிய முதல் கதை ‘கல்கி’ இதழில் 1968-இல் வெளிவந்தது.
அடுத்தடுத்து கதைகள் எழுதினார். இதுவரை 150-க்கும் மேற்பட்ட சிறுகதைகள், குறுநாவல்கள்,
35 நாவல்கள், 13 பயணக் கட்டுரைத் தொடர்கள், 7 கட்டுரைத் தொகுப்புகள், 2 வாழ்க்கை
வரலாறுகள், பிற எழுத்தாளர்களின் சிறுகதைத் தொகுப்பு ஆகியவை வெளியாகியுள்ளன.
‘அம்மா சொன்ன கதைகள்’ எனும் குழந்தைகளுக்கான கதைகளை தன் குரலில் பேசிப் பதிவு செய்து
‘பேசும் புத்தகம்’ வெளியிட்டிருக்கிறார். சில தொலைக்காட்சித் தொடர்களை எழுதி யுள்ளார்.
இவரது ‘இலக்கியம் மூலம் இந்திய இணைப்பு’ மிக முக்கியமான பணி. இந்தியர்களை இதர
இந்தியர்களுக்கு அறிமுகப்படுத்தி, ஒவ்வொரு இலக்கிய மற்றும் கலாச்சாரப் பாரம்பரியத்தை
எல்லோரும் தெரிந்து கொள்வதன் மூலமாக அவர்களை ஒருங்கிணைக்கும் முயற்சியாக இந்திய அரசியல்
சட்டத்தின் எட்டாவது பிரிவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட 18 மொழிகளைச் சார்ந்த முக்கிய
எழுத்தாளர்களைச் சந்தித்து அவர்களின் பேட்டிகள், படைப்புகள், பயணக் கதைகள், இலக்கியப்
பின்னணி ஆகியவற்றை தொகுத்து நான்கு தொகுப்புகளாக வெளியிட்டு உள்ளார்.
இவரது பல கதைகள் இலக்கியச் சிந்தனை விருதைப் பெற்றுள்ளன. மேலும் ராஜா சர் அண்ணாமலைச்
செட்டியார் பரிசு, பாரதிய பாஷா பரிஷத் பரிசு, திருப்பூர் தமிழ்ச் சங்க விருது,
பபாசி விருது, ரோட்டரி சங்க விருது, தமிழக காங்கிரசின் ராஜீவ் விருது, தஞ்சை தமிழ்ப்
பல்கலைக் கழகத்தின் தமிழன்னை விருது, அரிமா சங்கத்தினரின் மெல்வின் ஜோன்ஸ் விருது,
தெலுங்கு ஆர்ட்ஸ் அகாடமி விருது, பெண் அமைப்பினரின் விருதுகள் உட்பட பல விருதுகளைப்
பெற்றுள்ளார்.
‘அக்னி’ அமைப்பை உருவாக்கி நடத்தி வருகிறார்.
.