தமிழறிஞர் முல்லைவாணன்

தமிழறிஞர் முல்லைவாணன்

Profession அறிஞர்

Biography

ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டம், சீர்காழி வட்டத்திலுள்ள கொடியம்பாளையம் கிராமத்தில்
வேலாயுதம் – குப்பாயி தம்பதி யருக்கு 30.07.1942-இல் பிறந்தார்.

கீழக்கரைதிண்ணைப் பள்ளியிலும், அரசு தொடக்கப் பள்ளியிலும் ஐந்தாம் வகுப்பு வரை படித்தபின்,
1955-இல் இவரது தந்தை இவரை சிங்கப்பூருக்கு அழைத்துச் சென்றார் (தந்தை யார் சிங்கப்பூர்
துறைமுகத்தில் சரக்கு இறக்கும் பணியாளர்). முல்லைவாணன் வெகுநாட்கள் படகுத்
தொழிலாளியாகவே இருந்துவந்தார். படகுப் பணியில் இருந்த நண்பர்களுக்காக திரு.வி.க.
படிப்பகம் தொடங்கி அதன் தலைவராக இருந்தார்.

1971-இல் சென்னை சியாமளா வானொலி பயிற்றகம், 1975-இல் மலேசியாவின் மின்னியல் பயிற்றுத்
தொழில் நுணுக்க நிறுவனம் ஆகியவற்றில் தொழில் பயிற்சி பெற்றார். 1978-இல் சிங்கப்பூர்
‘மின்னியல் தொழிற்பயிற்சி நிலையம்’ நிறுவி முதல்வராகப் பணியாற்றினார்.

25.10.1965-இல் இவருக்கும் திருமுல்லைவாசல் மாதர்தேவிக்கும் பாவலரேறு
பெருஞ்சித்திரனார் தலைமையில், மன்னர்மன்னன், மூர்த்திக்குப்பம் திருக்குறள் பெருமாள்
முன்னிலையில் திருமணம் நடைபெற்றது (‘மாதர்தேவி’ திருமணத்தின் போது
‘முத்தமிழ்ச்செல்வி’யாகி பின்னர் ‘முல்லைச் செல்வி’ ஆனார்).

மீண்டும் சிங்கப்பூர் சென்றபோது பேராசிரியர் சால இளந்திரையனார் முன்னிலையில் தமிழவேள்
தலைமையில் கவிவாணர் ஐ.உலகநாதன் ஏற்பாட்டில் நிகழ்ந்த முதல் மேடைப் பாட்டரங்கில் பாவலர்கள்
முத்தமிழன் (கா.காளிமுத்து) அமலதாசன் பொன்றோருடன் ‘தாய்மை’ என்னும் பொருள் பற்றி பாடி
பாராட்டுப் பெற்றார்.

முல்லைவாணன் ஐந்து கவிதைத் தொகுதிகள், ஒரு சிறுகதைத் தொகுப்பு, நான்கு உரைகள், ஐந்து
ஆய்வுக் கட்டுரைத் தொகுதிகள் ஆகிய நூல்களை வெளியிட்டுள்ளார். ஐந்து நூல்களைப்
பதிப்பித்துள்ளார். சிங்கப்பூர், மலேசியா பள்ளிப் பாடநூல்களில் இவரது கவிதைகள் இடம் பெற்
றுள்ளன.

‘திருக்குறளைப் போற்றும் இலக்கியங்கள்’ என்ற ஆய்வுக் கட்டுரைக்கு பொற்பதக்கம் (1962),
மலேசியத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தின் ‘தமிழ் நெறிப்புலவர்’ (2000) சான்றிதழ், தமிழக
அரசின் ‘தமிழறிஞர்’ (2007) பட்டம், சீர்காழி ஏ. பால்சாமி நாடார் கல்வி அறக்கட்டளையின்
‘தமிழறிஞர்’ பட்டம், சீர்காழி அரிமா சங்கத்தின் ‘தமிழ்ப் பேரறிஞர்’ பட்டம் ஆகியவற்றை
வழங்கப் பெற்றுள்ளார். .

1965இல் தமிழகத்தில் இந்தி எதிர்ப்புப் போராட்டம் நடந்தபோது, சிங்கப்பூரில் இந்தியத்
தூதரகம் முன்பு நடந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேற்றதுடன் இந்தியத் தூதரக
அதிகாரியிடம் முறையீட்டை ஆதர வாளர்களுடன் வழங்கினார்.

சிங்கப்பூரில் ‘மாதவி இலக்கிய மன்றம்’, ‘தமிழர் சீர்திருத்தச் சங்கம்’ போன்றவற்றின் மூலம்
தமிழ்த் தொண்டு புரிந்தார்.