பேராசிரியர் இ.சுந்தரமூர்த்தி

பேராசிரியர் இ.சுந்தரமூர்த்தி

Profession அறிஞர்

Biography

கோவையிலுள்ள வெள்ளலூரில் த. இளையபெருமாள் -பழனியம்மாள் தம்பதியரின் இளைய மகனாக
05.02.1942 அன்று பிறந்தார்.

வெள்ளலூர், கோவை இராமநாதபுரம் பள்ளிகளில் கல்வியைக் கற்று, 1957-இல் தாராபுரம்
நஞ்சியம்பாளையம் ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில் இடைநிலை ஆசிரியர் பயிற்சி பெற்றார்.
ஆசிரியராக பணியாற்றிக்கொண்டே சென்னைப் பல்கலைக் கழகத்தில் வித்து வான், பி.ஏ., எம்.ஏ.
பட்டங்களைப் பெற்றார்.

1959- இல் சிங்காநல்லூரில் ஆசிரியப் பணியைத் தொடங்கிய இவர், படிப்படியாக உயர்ந்து
2001-இல் தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் ஆனார்.

தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் எம்.ஏ., முதலான பாடங்களையும் பிறவற்றையும்
அறிமுகப்படுத்தி தமிழ்ப் பல்கலைக் கழகத்தை சொந்தக் காலில் நிமிர்த்தி அமர்த்தியதை இவரது
சாதனையாகக் குறிப்பிடுகின்றனர்.

இவரது வழிகாட்டுதலில் 46 ஆய்வாளர்கள் முனைவர் பட்டமும், 55 ஆய்வாளர்கள் எம்.ஃபில் பட்டமும்
பெற்றுள்ளனர்.

இவர், 260-க்கும் மேற்பட்ட கருத்தரங்குகளில் கலந்து கொண்டிருக்கிறார். ஜெர்மனி,
சிங்கப்பூர், இலங்கை போன்ற நாடுகளுக்குச் சென்று பல்வேறு தமிழ் நிகழ்ச்சிகளில்
பங்கேற்றிருக்கிறார். ரஷ்யா, அமெரிக்கா, போலந்து, பின்லாந்து மாணவர்களுக்கு தமிழ்க்
கற்பித்திருக்கிறார்.

ஐந்தாம் உலகத் தமிழ் மாநாடு (1981), செம்மொழி தமிழ் மாநாடு (2010) உட்பட பல சிறப்பு
வாய்ந்த நிகழ்ச்சிகளில் சிறப்புச் சொற் பொழிவுகள் நிகழ்த்தியுள்ளார்.

திருக்குறள், நடையியல், பதிப்பியல், இலக் கணம், பாரதி சார்ந்த 38 நூல்களை எழுதியும்
பதிப்பித்தும் இருக்கிறார். ‘வள்ளுவம்’ இதழின் ஆசிரியராகவும் பணியாற்றியுள்ளார்.

தமிழ்நாடு அரசின் திருக்குறள் நெறித் தோன்றல் விருது, திருக்குறள் விருது (2001),
குன்றக்குடி ஆதினம் வழங்கிய புலவரேறு விருது, பபாசி கலைஞர் விருது (2012), கம்பன்
கழக விருது (2014), சேக்கிழார் விருது (2014) உள் ளிட்ட 15க்கும் மேற்பட்ட உயரிய
விருதுகளைப் பெற்றுள்ளார்.

பல்கலைக் கழகக் கல்விசார் குழு, சாகித்ய அகாதமி (புதுதில்லி), தேசிய நூலகம்
(கல்கத்தா), பிர்லா பவுண்டேஷன் பாஷா சமிதி, தமிழ் இணையப் பல்கலைக் கழகம், தமிழ்நாட்டுப்
பல்கழைக் கழக கல்லூரிகளில் பாடநூற் குழுக்கள், கல்விக்குழு ஆகியவற்றில் உறுப்பினராகப்
பணியாற்றியுள்ளார்.

பேரா. இ.சுந்தரமூர்த்தியின் துணைவியார் வசந்தா சுந்தரமூர்த்தி. அண்ணா பல்கலைக்கழகத்தில்
முதன்மை நூலகராகப் பணியாற்றி யவர். இவர்களுக்கு எழில் நம்பி, இளையநம்பி, மலர்மகள் என
மூன்று குழந்தைகள்.