| Profession | அறிஞர் |
|---|
நாகை குழையூர் தெண்டபாணி பிள்ளை – அ.தையல்நாயகி தம்பதி யருக்கு 20.09.1941 அன்று
பிறந்தார். மனைவி: புலவர் தி.மணிமேகலை. 3 ஆண் குழந்தைகள்.
குடந்தை அரசினர் கல்லூரியில் பி.ஏ. (பொருளாதாரம்), சென்னை பச்சையப்பன் கல்லூரியில்
எம்.ஏ. (தமிழ்) பயின்றார். சென்னை பல்கலைக்கழகத்தில் சமஸ்கிருதத்தில் பட்டயம் பெற்றார்.
ரா.சீனிவாசன் வழிகாட்டு தலில் ‘வைணவ உரைவளம்’ எனும் பொருளில் ஆய்ந்து முனைவர் பட்டம்
பெற்றார்.
1963-இல்சென்னைப் பச்சையப்பன் கல்லூரியில் தமிழ்ப் பயிற்றாசிரியராகப் பணியைத் தொடங்கினார்.
பின்னர் வேலூர் கந்தசாமி கவுண்டர் கல்லூரி, கந்தசாமி நாயுடு கல்லூரி ஆகியவற்றில்
பணியாற்றி, மீண்டும் பச்சையப்பன் கல்லூரிக்கு மாற்றலாகிப் பணியாற்றினார். பின்னர், தமிழ்த்
துறைத்தலைவர் ஆனார். 1992-1993ஆம் ஆண்டுகளில் அதே கல்லூரியின் முதல்வராகப் (பொறுப்பு)
பணியாற்றி ஓய்வு பெற்றார்.
பச்சையப்பன் கல்லூரியில் பணியாற்றும் போதே ஈராண்டுகள் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில்
இணைப் பேராசிரியராகப் பணிபுரிந்துள்ளார். பணி நிறைவுக்குப் பின் புதுச்சேரி மத்திய
பல்கலைக் கழக கம்பன் இருக்கையில் பேராசிரியராகப் பணிபுரிந்தார். அப்போது
கம்பராமாயணத்தையும் வால்மீகி ராமாயணத்தையும் ஒப்பிட்டு ‘முதலும் வழியும் பாலகாண்டம்’,
‘முதலும் வழியும் அயோத்தியா காண்டம்’ எனும் இரு நூல்களை உருவாக்கிப் புதுவை மத்திய
பல்கலைக் கழகத்திற்குப் பெருமை சேர்த்துள்ளார்.
‘வைணவஉரைவளம்’,’கம்பர்வால்மீகி ஒப்பீடு’, ‘காப்பிய விருந்து’, ‘குறுந்தொகைத் தெளிவு’,
‘மாணிக்கவாசகரின் திருப்பள்ளியெழுச்சி’, ‘கற்பக மலர்கள்’ (திருக்குறள் கட்டுரைகள்),
‘இராவ ணனைச் சந்திப்போம்’, ‘கம்பர் போற்றிய கவிஞர்’, ‘கம்பராமாயணத்தில் சகோதரத்துவம்’
போன்றவை இவர் எழுதிய ஆய்வு நூல்கள்.
மும்பை, கொல்கத்தா, பெங்களூரு, கொல்லம் ஆகிய இடங்களிலுள்ள பல்கலைக் கழகங்கள் மற்றும்
கல்லூரிகள் நடத்திய கருத்தரங்குகளில் கலந்துகொண்டு ஆய்வுரை நிகழ்த்தியுள்ளார். அமெரிக்கா,
இலங்கை, சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்குச் சென்று கம்பராமாயணம், திருக்குறள் குறித்து
தொடர் சொற்பொழிவுகளை நிகழ்த்தி யுள்ளார். அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் பயிலும்
அயல்நாட்டு மாணவர்களுக்கு தமிழ் எம்.ஏ., பயிற்றுவித்துள்ளார்.
இவரது வழிகாட்டுதலில் ஐவர் முனைவர் பட்டம் பெற்றுள்ளனர்.
‘நல்லாசிரியர் விருது’, ‘சிறந்த தமிழாசிரியர் விருது’, ‘தமிழ்த் தாத்தா உ.வே.சா.
விருது’, ‘தமிழறிஞர் விருது’, ‘சடையப்பர் விருது’, ‘கபிலர் விருது’, ‘நற்றமிழ்
நாவலர் விருது’, ‘டாக்டர் இராஜா சர்.முத்தையா செட்டியார் விருது’ போன்ற பல
விருதுகளை பெற்றுள்ளார்.