| Profession | அறிஞர் |
|---|
குளித்தலையில் இராச கோபால் – சொர்ணம் ராசம்மாள் இணையருக்கு 01.01.1941 அன்று
பிறந்தார். இயற்பெயர் சுந்தரராஜன். தந்தை மிதிவண்டிக் கடையாளர். தாயார் தொடக்கப்பள்ளி
ஆசிரியர். 1947-இல் சுதந்திரத் தினத்தன்று தந்தை காலமானார்.
குளித்தலை, நாகையநல்லூர் பள்ளிகளில் பள்ளிப் படிப்பைப் படித்த இவர், 1960-இல் மாயனூர்
அரசு ஆதாரப் பயிற்சிப் பள்ளியில் இளநிலை ஆசிரியர் பயிற்சியில் சேர்ந்தார்.
அங்கேகார்முகில், அரங்க ராசன், இளந்திரையன் ஆகியோருடன் தங்கும் வாய்ப்பு கிடைத்தது.
நாடகங்கள் எழுதத் தொடங்கினார். 1961-இல் தாயார் பணிநிறைவு பெற்றதனால்1962- இல்
கரூருக்கு இடம்பெயர்ந்தனர்.
1962- இல் நன்செய்ப்புகழூர்த் தொடக்கப் பள்ளியில் பணி நியமனம் பெற்றார். 1967-இல்
குசலக்குமாரியை வாழ்க்கைத் துணைவியாக ஏற்றார். பாவேந்தன், பகுத்தறிவு, இரணியன் என
மூன்று குழந்தைகள்.
தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்றத்தின் வளர்ச்சிக்காக அரும்பாடு பட்டார். 1985-இல்
ஆசிரியர் இயக்கங்கள் ஒன்றிணைந்து கண்ட அறப்போரில் அரசாணையை எரித்து 15 நாட்கள்
சிறையிலிருந்தார். இம்மன்றம் நடத்திய அனைத்துப் போராட்டங்களிலும் பங்கேற்றார்.
சுந்தர்ராஜன் எனும் தன் இயற்பெயரை ‘அழகரசன்’ என மாற்றிக் கொண்ட பாவலர், பெருங்கவிஞர்
கருவூர் பாரியினால் பாட்டரங்கில் பாடும் வாய்ப்பின் மூலம் மிக ஆர்வமுடன் இலக்கிய
அமைப்புகளின் நிகழ்வுகளில் பங்கேற்று ஐம்பதுக்கும் மேற்பட்ட பாட்டரங்கங்களில் பல்வேறு
தலைப்புகளில் கவிதைப் பாடியுள்ளார்.
வே.ஆனைமுத்து தொகுத்த, திருச்சி சிந்தனையாளர் கழகம் வெளியிட்ட ‘பெரியாரின்
சிந்தனைகள்’ எனும் நூல் தொகுப்புப் பணி யாற்றினார்.
இவரது முதல் படைப்பு ‘வேர்ப்பலா’ எனும் குறும்பாவியம். மேலும், ‘பெண்ணுரிமை’ (சுய
மரியாதை தீர்மானங்கள்), ‘செந்தமிழே! உயிரே!’ (நாவல்), ‘கலைஞர் 81’, ‘அண்ணா நூறு’,
‘பெருந்தலைவர் காமராசர் நூறு’, ‘பெரியார் நூறு’, ‘வள்ளல் நல்லி நூறு’, ‘முத்துவிழா
வாழ்த்துப் பாமாலை’, ‘இலக்கியக் கருவூலம்’ போன்ற நூல்களையும், பாவலர் க.மீனாட்சிசுந்தரம்
பற்றி ‘இனக்காவலர்’ ‘கவிமாமணி க.மீ.பாவியம்’, ‘பாவலர் க.மீ. புகழ் நூறு’ என மூன்று
நூல்களையும் எழுதியுள்ளார்.
1998-இல் பணி நிறைவு பெற்றார். ஆசிரியர் துணைவன், முரசொலி, தினகரன், கவிக்கொண்டல்
ஆகிய ஏடுகளில் தமிழின உணர்வுப் பாடல்களை எழுதி வருகிறார். இவர் ‘குழந்தைக் கவிஞர்’,
‘புனற்கவிவேந்தன்’, ‘சிறந்த படைப் பாளர்’, ‘மொழிக்காவலர்’, ‘பாக்கொண்டல்’ போன்ற பல
விருதுகளைப் பெற்றுள்ளார். புகழுர்த் தமிழ்ச் சங்கம், கரூர்த் தமிழ்ச் சங்கம், உலகத்
திருக்குறள் பேரவை ஆகியவற்றில் பொறுப்பேற்று செயலாற்றி வருகிறார்.