கொ.ம.கோதண்டம்

கொ.ம.கோதண்டம்

Profession எழுத்தாளர்

Biography

இராஜபாளையத்தில் தனஞ்செயகொட்டு முக்கலமாட சாமிராஜா – சீதாலட்சுமியம்மா தம்பதியருக்கு
15.9.1938 அன்று பிறந்தார்.

இவரது துணைவியார் ராஜேஸ்வரி கோதண்டம். குறளமுதன், இளங்கோ என இரு மகன்கள்.

குடும்ப வறுமையினால் ஐந்தாம் வகுப்பு வரையே படித்த இவர், ஒரு பெட்டிக் கடையில் ஐந்து
ரூபாய் சம்பளத்திற்கு வேலை செய்தார். எனினும், நேரம் கிடைக்கும் போதெல்லாம் நூலகம் சென்று
சிறுவர் நூல்களைப் படித்து வந்தார். ஒரு சிறுவர் இதழில் ‘கண்டது கற்கப் பண்டிதனாவான்’,
‘பல நாள் வாசகன் ஒரு நாள் எழுத்தாளன் ஆவான்’ என்ற பொன் மொழிகளைப் படித்தார். பின்னாளில்
எழுத்தாளராவதற்கு அதுவே தூண்டுகோலாக அமைந்துள்ளது. பின்னர் பஞ்சாலையில் ஒரு ரூபாய்
தினக் கூலிக்கு வேலைக்குச் சேர்ந்தார். படிப்பின் மீது ஏற்பட்ட ஆர்வத்தினால்
பி.எஸ்.குமாரசாமி ராஜா நூலகத்திற்குச் சென்று படித்தார். அப்போது பழந்தமிழ்
இலக்கியங்களைக் கற்க வேண்டும் எனும் இவரது விருப்பத்தை உணர்ந்த நூலகர், பன்மொழிப் புலவர்
மு.கு.ஜெகநாத ராஜாவிடம் அழைத்துச் சென்று அறிமுகப்படுத்தினார். அவர் கோதண்டத்திற்கு
சங்க இலக்கியங்கள், யாப்பு இலக்கணங்கள் போன்ற வற்றைக் கற்பித்தார்.

கிராமத்துப் பெண்ணான தாயம்மாள் சொல்கிற அரசாணிமாலை, நல்ல தங்காள் கதை போன்றவற்றைக்
கேட்பார். இச்சூழல் அவரை எழுத்தாளராக்கியது.

இவரது முதல் சிறுகதை ‘மணமும் மணமும்’ 1967-இல் கடம்பூர் திருவிழா சிறப்பு மலரில்
வெளிவந்தது. இராஜபாளையம் அருகே வசிக்கும் ‘பளியர்’ எனும் மலைவாழ் மக்களைப் பற்றி இவர்
எழுதிய ‘ஒரு வாய்க் கஞ்சி’ எனும் கதை ‘தாமரை’ இதழில் வெளியானது.

இவரது முதல் சிறுகதைத் தொகுதியான ‘ஆரண்ய காண்டம்’ 1982-இல் மத்திய அரசின் குடியரசுத்
தலைவர் பரிசினைப் பெற்றது. ‘மழைத்துளிகள்’ எனும் நூலுக்கு ஏ.வி.எம். அறக் கட்டளை
‘தங்கப்பதக்கம்’ வழங்கி சிறப்பித்தது.

மக்களோடு பழகி அவர்களின் பிரச்சனை களை மனிதாபிமானத்தோடு எழுதினார். மலைவாழ் மக்களின்
வாழ்வியலை எழுதியதால் 1998-இல் ராஜபாளையம் மலைவாழ் மக்களுக்கு கலெக்டர் 19 வீடுகளைக்
கட்டிக் கொடுத்தார்.

62 சிறுகதைகள், 3 நாவல்கள், 6 சிறுவர் சிறு கதை நூல்கள், 2 சிறுவர் நாவல்கள், 3
சிறுவர் கவிதை நூல்கள், 2 கவிதை நூல்கள், 1 சிறுவர் நாடக நூல் ஆகியவற்றை
எழுதியுள்ளார்.

‘இலக்கியச் சிந்தனை’, ‘குழந்தை எழுத்தாளர் சங்கம்’ உட்பட பல மதிப்புமிக்க விருதுகளைப்
பெற்றுள்ளார். மலேசியா, இலங்கை பல்கலைக் கழகங்களின் தொலைதூரக் கல்வி இயக்கங்கள் நடத்திய
உலக மாற்றுமுறை மருத்துவர்கள் மாநாட்டில் இலக்கியத்திற்கான கௌரவ ‘டாக்டர்’ பட்டம்
ஆகியவற்றை வழங்கப் பெற்றார். இன்றும் இவர்தன் எழுத்துப் பணியைத் தொடர்கிறார்.

பேராசிரியர் அ.ஆனந்த நடராஜன்

தில்லையில் அய்யா தீட்சிதர் – சந்தான பாக்கியம் தம்பதியருக்கு 09.11.1938 அன்று
பிறந்தார்.

1958- இல் புலவர் பட்டமும், 1962- இல் பி.ஓ.எல். பட்டமும் பெற்றார். அண்ணாமலைப் பல்கலைக்
கழகத்தில் 1964-இல் எம்.ஏ. பட்டயமும், 1966-இல் வடமொழியில் பட்டயமும், ‘தமிழில் தூது
இலக்கிய வளர்ச்சி’ என்ற தலைப்பில் ஆய்வு செய்து 1985-இல் முனைவர் பட்டமும் பெற்றார்.

1964-இல் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்த் துறை உரையாளராகப் பணி ஏற்றார்.1969- இல்
தமிழ் விரிவுரையாளரானார். 1986-இல் இணைப் பேராசிரியராக அமர்ந்து மாணவர் உளங்
கொள்ளுமாறு தமிழ் நூல்களைக் கற்பித்து வந்தார். 1993-இல் தொலைதூர அஞ்சல் வழிக் கல்வித்
துறையில் தமிழ்ப் பேராசியராக நியமனம் பெற்றார். அடுத்த ஆண்டில் பதவி உயர்ந்தது.
1994-இல் அண்ணாமலைப் பல்கலைக்கழக தமிழ்த் துறைத் தலைவராகவும், இந்திய மொழிப்புல
முதன்மையராகவும் பதவி ஏற்றார்.

இவரது வழிகாட்டுதலில், அமெரிக்க நாட்டு பென்சில்வேனியா பல்கலைக் கழக மாணவர் ஜான் உட்பட
ஐவர் முனைவர் பட்டம் பெற்றுள்ளனர்.

உமாபதி சிவனார் இயற்றிய ‘கோயில் புராண’த்தை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்தார். ராஜா
அண்ணாமலை மன்றத்தின் பண் ஆராய்ச்சிக் குழு உறுப்பினராகவும், புதுவை வானொலித் துறையின்
தேர்வுக்குழு உறுப்பினராகவும் செயலாற்றுகிறார். 100-க்கும் மேற்பட்ட திருமண, மணிவிழா
வாழ்த்துகளை எழுதி வழங்கியுள்ளார்.

ஈழத்தில் பல நாட்கள் தங்கிச் சொற்பொழிவுகளை நிகழ்த்தியுள்ளார். வானொலியில் 60
சொற்பொழிவுகளும், தொலைக்காட்யில் 20 சொற்பொழிவுகளும் பல்வேறு தலைப்புகளில் நிகழ்த்தி
யுள்ளார்.

தேசிய அளவிலான 32 கருத்தரங்குகளில் பங்கேற்று ஆய்வுக் கட்டுரைகள் வழங்கியுள்ளார்.
இந்தியாவின் பல்வேறு இதழ்களில் 35-க்கும் மேற்பட்ட கட்டுரைகளை எழுதியுள்ளார்.

தமது ஆய்வுப் பணியின் மூலமாக 10-க்கும் மேற்பட்ட நூல்களை தமிழுலகுக்கு வழங்கியுள் ளார்.

அமைதியானவர், அடக்கமானவர், நல்ல உள்ளம் உடையவர். காட்சிக்கு எளியவர். யார்
வேண்டுமானாலும், எந்த நேரத்திலும் சென்று கண்டு உதவிகள் வேண்டிப் பெறத்தக்கவர்.

இவர், தருமை ஆதினத்தின் ‘செந்தமிழ்ச் செல்வர்’ (1979), தூத்துக்குடி சைவ சித்தாந்த
மகாசபையின் ‘அருந்தமிழ்ச் செம்மல்’ (1981), யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் ‘இலக்கியப்
பேரறிஞர், மலேசியாப் பல்கலைக்கழகத்தின் ‘இலக்கணச் செம்மல்’ ஆகிய விருதுகளை வழங்கப்
பெற்றுள்ளார்.

‘கண்ணதாசன்’ இதழ் நடத்திய போட்டியில் இவரது ‘காக்கைக்கூடு’ சிறுகதை, பரிசு பெற்றது.
‘காக்கைக்கூடு’, ‘மட்டைகள்’ ஆகிய இரண்டும் இவரது சிறுகதைத் தொகுப்புகள்.

ஐசக் அருமைராஜன் எழுத்தளர்

நாகர்கோவில் வே.ஐசக்-மேரித் தங்கம் தம்பதியருக்கு 18.2.1939 அன்று பிறந்தார். இவர்
மார்த்தாண்டம் கிறிஸ்தவக் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணிபுரிந்தார்.

1970-ஆம்ஆண்டில் தங்கள் வட்டார வாழ்க்கையை தங்களின் வட்டார மொழியில எழுதத் தொடங்கினார்.

இவரது கதைகள் ‘தாமரை’ இதழில் தொடர்ந்து வெளிவந்தன. ‘நம்வாழ்வு’ இதழில் ‘தவறான
தடங்கள்’ எனும் நாவல், தொடராக வெளி வந்தது.

‘அழுக்குகள்’, ‘கல்லறைகள்’, ‘கீறல்கள்’, ‘சில மாறுவேடங்கள்’, ‘தவறான தடங்கள்’, ‘வலிய
வீடு’, ‘காரணங்களுக்கு அப்பால்’ ஆகிய ஏழும் இவரது நாவல்கள்.

‘மனைமலர்’ இதழின் உதவி ஆசியராகப் பணியாற்றினார். அவ்விதழில் கவிதைகள், கதை கள்
எழுதினார். சில கிறித்தவ இதழ்களிலும் இவரது படைப் புகள் வெளிவந்தன.

நாவலுக்கு திருப்பூர் தமிழ்ச் சங்கம் பரிசு வழங்கிச் சிறப்பித்தது.

‘நெடுமான் அஞ்சி’, ‘வேங்கைகள்’, ‘முல்லை மாடம்’, ‘பாறை’ ஆகிய நான்கும் இவர் எழுதிய
கவிதை நாடகங்கள்.

‘இளம்பூரணர்’, ‘பரிதிமாற் கலைஞர்’என இரு வாழ்க்கை வரலாற்று நூல்களையும் எழுதியுள்ளார்.

எழுத்தாளராக வலிமையுடன் காலூன்றிய இவர், முற்போக்கு எண்ணங்களும், உயர்ந்த சமுதாயப்
பார்வையும் கொண்டவர் என்பதை இவரது படைப்புகளின் வழியே நாம் உணர்ந்து கொள்ளமுடியும்.

‘கிறித்துவின் தமிழ் எழுத்தாளர் ஒன்றியம்’ இவருக்குப் ‘புரட்சி இலக்கிய வித்தகர்’ என
1991 இல் பட்டமளித்து பாராட்டியது.

குமரி மாவட்டத்து தமிழ் அமைப்புகள் கூட்டமைப்பு நடத்திய ‘தமிழ் சாதனை இலக்கிய
திருவிழா’வில் ஒன்பது தமிழ் எழுத்தாளர்களுக்கு ‘தமிழ் நவமணிகள்’ என விருது வழங்கி
சிறப்பித்தது. அந்த ஒன்பது மணிகளில் இவரும் ஒருவர். தென் குமரித் தமிழ்ச் சங்கம் இவரின்
தமிழ்ச் சேவையைப் பாராட்டி 2004இல் பரிசும் கேடயமும் வழங்கிச் சிறப்பு செய்தது.

இவரது துணைவியார் லீலா. இவர்களுக்கு இராஜேஷ் என்றொரு மகன்.