| Profession | எழுத்தாளர் |
|---|
தூத்துக்குடி திருச்செந்தூர் மூலைப்பொழில் கிராமத்தில் கணேசன் – கமலசுந்தர தேவி
தம்பதியர்க்கு 10.07.1938-இல் பிறந்தார்.
திருச்செந்தூரிலும், பாளையங்கோட்டையிலும் பள்ளிக் கல்வியை முடித்துள்ளார். பள்ளியில்
படிக்கும்போதே 14.06. 1962-இல் திருச்செந்தூரில் பாலசந்திரனைத் திருமணம் செய்து
கொண்டார். நா.பார்த்தசாரதியின் ‘குறிஞ்சி மலர்’ நாவலின் தலைவன் (அரவிந்தன்), தலைவி
(அகிலாண்டேஸ்வரி) பெயரை தங்கள் மகன், மகளுக்குச் சூட்டினர். திருமணத்திற்குப் பிறகு
எஸ்.எஸ்.எல்.சி. முடித்து, ஆங்கில இலக்கியத்தில் பி.ஏ. பட்டமும் பெற்றார்.
ரமணி எனும் தன் பெயருடன் கணவர் பெயரின் பின் பாதியைச் சேர்த்து ‘ரமணிசந்திரன்’ எனும்
பெயரில் கதைகள் எழுதுகிறார். இவர் எழுத்தாளராவதற்குக் காரணமாக இருந்தவர் இவரது தங்கை
கணவர் அ.மா.சாமி. இவர் ‘ராணி’ இதழின் ஆசிரியராகப் பணியாற்றினார். ரமணி தன் தங்கைக்கு
எழுதிய கடிதங்களைப் படிக்கும் வாய்ப்பு அ.மா.சாமிக்குக் கிடைத்தது. கடிதத்தில்
ரமணிசந்திரனுடைய நடை, சொல்லாற்றல், செய்தியைச் சொல்கிற பாங்கு ஆகியவை ஓர் ஒழுங்குடன்
அமைந்திருப்பதைக் கண்டார். இதைக் கருத்தில் கொண்டு கதைகள் எழுதுமாறு ரமணியை
ஊக்கப்படுத்தினார். அத்துடன் ‘ராணி’ அடுத்த இதழில் அவரின் கதை வெளிவரும் என்கிற
அறிவிப்பையும் செய்துவிட்டார். அதன்படி கதையை எழுதப் பெற்று வெளியிட்டிருக்கிறார். அதன்
பிறகு தொடர்ந்து கதைகள் எழுதினார்.
அ.மா.சாமி தனது தங்கையின் கணவர் என்பதால் தான் ஒருவேளை தனது கதைக்குப் பேரும் புகழும்
கிடைத்திருக்கிறதோ என்ற குழப்பம் ஏற்பட்டதால், ஒரு போட்டிக்கு ஒரு கதையை எழுதி, வேறு
ஒரு பெயரில் அனுப்பினார். அக்கதைக்கு பரிசும் பாராட்டும் கிடைத்தன. அதன் பிறகே தன்
எழுத்தின் மீது அவருக்கு நம்பிக்கை ஏற்பட்டது. இவரது படைப்புகள் ராணி, குமுதம், அவள்
விகடன், கல்கி, தேவி, குங்குமம் போன்றவற்றில் தொடர்களாக வெளி வந்தன.
இவரின் முதல் நாவல் ‘ஜோடிப் புறாக்கள்’. இதுவரை 162 நாவல்கள் எழுதியுள்ளார். ‘மானே
மானே மானே’ என்ற நாவல் இந்தித் திரைப்பட மாக வெளிவந்துள்ளது. ‘மயங்குகிறாள் ஒரு
மாது’, ‘மதுமதி’, ‘பால்நிலா’ போன்ற நாவல்கள் தொலைக்காட்சித் தொடர்களாக ஒளிபரப்பாகின.
அமெரிக்கா, கனடா, பிரான்சு, இங்கிலாந்து, சவுதி, மலேசியா, இலங்கை போன்ற
நாடுகளிலும் இவருக்கு வாசகர்கள் உள்ளனர்.
இவரது ‘வைரமலர்’ நாவலுக்கு தமிழ்நாடு அரசு விருது, ‘நாள் நல்ல நாள்’ நாவலுக்கு
‘அனந்தாச்சியார்’ அறக்கட்டளை விருது, ‘ராணிமுத்து’ இதழின் ‘சிறந்த எழுத்தாளர்’
விருது, ‘வண்ண விழி பார்வையிலே’ நாவலுக்கு ‘தினத்தந்தி’ விருது. ழிஜிபி நிறுவன
விருது ஆகியவற்றைப் பெற்றுள்ளார். இவரது படைப்புகளை பல்வேறு பல்கலைக் கழகங்களில் பலர்
ஆய்வு செய்து எம்ஃபில், முனைவர் பட்டங்களைப் பெற்றுள்ளனர்.