| Profession | எழுத்தாளர் |
|---|
திருநெல்வேலி மாவடி கிராமத்தில், டேனியல்-ஞானம் தம்பதியருக்கு 14.1.1938 அன்று
பிறந்தார்.
1959-இல் திருநெல்வேலி இந்து கல்லூரியில் இளநிலைப் பட்டப் படிப்பையும், 1962-இல் சென்னை
சட்டக் கல்லூரியில் சட்டப் படிப்பையும் முடித்து, சென்னையில் மூத்த வழக்கறிஞர் வி.
வெங்கட்ராமனிடம் இளநிலை வழக்கறிஞராகப் பணியாற்றினார். பின்னர், திண்டுக்கல் மற்றும் மதுரை
நீதிமன்றங்களில் வழக்கறிஞ ராகப் பணியாற்றினார்.
1971-இல் இவருக்கு பெரியகுளம் வழிவிட்டான் பாரத புத்ரியுடன் திருமணம் நடைபெற்றது.
இவர்களுக்கு இரு மகன்கள், இரு மகள்கள்.
கல்லூரி நாட்களிலேயே தொ.மு.சி., தி.க.சி., நா.வானமாமலை போன்ற முற்போக்கு
எழுத்தாளர்களின் தொடர்பு இவருக்குக் கிடைத்தது.
அதனால் மாபசான், டிக்கன்ஸ், தாமஸ் ஹார்டி ஆகியோரின் படைப்புகளை விரும்பிப் படித்தார்.
அத்துடன் தமிழ் எழுத்தாளர்களின் நூற்களையும் படிக்கத் தொடங்கினார். இத்தகைய வாசிப்பினால்
கதைகள் எழுதத் தொடங்கினார்.
‘ஜனசக்தி’யில் தொடங்கி, ‘சாந்தி’, ‘பிரசண்ட விகடன்’, ‘சிகரம்’, ‘நீதி,’ ‘செம்மலர்’,
‘கண்ணதாசன்’, ‘தாமரை’, ‘சரஸ்வதி’ ஆகிய இதழ்களில் எழுதினார். இவரது சிறுகதைகள்
‘நோன்பு’ (1964), ‘நிதானம்’ (1994), ‘நிழல்யுத்தம்’ (1995) ஆகிய 3 தொகுதிகளாக
வெளிவந்தன.
‘மலரும் சருகும்’ (1967) இவரது முதல் நாவல். இந்நாவலில் திருநெல்வேலி பகுதி தலித்
விவசாயிகளின் வாழ்வியல் அவலத்தையும், ‘தேநீர்’ (1973) நாவலில் தேயிலைத் தோட்டத்
தொழிலாளர்களின் வாழ்வியல் சிக்கல்களையும் ‘பொய்க்கால் குதிரை’ (1997) நாவலில் சாதிய
மேலாண்மை, மூடநம்பிக்கை, பெண்ணியக் கீழ்மை, சமூகக் கொடுமைகளையும், ‘மூலதனம்’ நாவலில்
படித்த நடுத்தரவர்க்கத்தின் கூட்டுக் குடும்பச் சிதை வையும், ‘அக்னிகுண்டம்’ நாவலில்
நீதித்துறை தொடர்பானவற்றையும், ‘தோல்’ (2009) நாவலில் தோல் தொழிலாளர் பிரச்சனைகளையும்
சமூக அக்கறையுடன் பதிவு செய்தார்.
இவரது ‘பாட்டு முடியும் முன்னே’ நாடகத்திற்கு பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாடல்
எழுதியுள்ளார். இவருடைய மற்றொரு நாவல் ‘வேட்டை’. ஜீவா, சாமி.சிதம்பரனார் இருவரின்
வாழ்க்கை வரலாற்று நூல்களையும் எழுதினார்.
இவரது ‘தோல்’ நாவல் சாகித்ய அகாதமி (2012), தமிழக அரசு, த.மு.எ.ச. ஆகியவற்றின்
விருதுகளைப் பெற்றது. ‘யுகசங்கமம்’ நாடகம் தமிழ் வளர்ச்சி சங்க விருதினைப் பெற்றதுடன்,
தில்லி பல்கலைக் கழகத்தின் தமிழியல் துறைப் பாடத் திட்டத்திலும் இடம்பெற்றது.
த.மு.எ.ச. உருவாக்கத்தில் முக்கியப் பங்காற்றினார். அச்சங்கத்தின் பல்வேறு பொறுப்புகளை
ஏற்று செயல்பட்டார். சாகித்ய அகாதமி குழு உறுப்பினராகவும் பணியாற்றினார்.
திண்டுக்கல்லில் வசித்து, வழக்குரைஞராக வும், எழுத்தாளராகவும் செவ்வனே செயல்பட்ட இவர்,
81-ஆவது வயதில் 20.12.2019 அன்று மதுரையில் காலமானார்.