க.இராசவேலு

க.இராசவேலு

Profession எழுத்தாளர்

Biography

திருவரங்கம்,கீழவாசல் அ.கந்த சாமி மேஸ்திரி – சின்னம்மை தம்பதியருக்கு 1936 கார்த்திகை
மாதம் 5-ஆம் நாள் பிறந்தார்.

திருவரங்கம் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் படிப்பை முடித்தார். திருச்சி தேசியக்
கல்லூரியிலும், தூய வளனார் கல்லூரியிலும் பயின்று 1956-இல் பொருளியலில் பி.ஏ.
(ஆனர்சு) பட்டம் பெற்றார். சென்னை சட்டக் கல்லூரியில் பி.எல். பட்டம் பெற்றார்.

7.11.1962 அன்று செண்பக வள்ளியை மணந்தார். இத்தம்பதியருக்கு வான்மதி என்றொரு மகளும்,
மணிவண்ணன், மதிவாணன், இளங்கோவன், ஆனந்த்பாபு ஆகிய மூன்று மகன்களும் உள்ளனர்.

திருவரங்கம் அருள்மிகு அரங்கநாதர் திருக்கோயிலின் அறங்காவலர் குழுத் தலைவராக ஆறு ஆண்டு
காலம் பணியாற்றினார். ‘அரங்கர் கூட்டுறவு சிறப்பு அங்காடி’யை நிறுவி, அதன் தலைவராகப்
பொறுப்புடன் செயல்பட்டார். திருச்சி மாவட்டக் கூட்டுறவு விநியோக விற்பனைச் சங்கத்தின்
துணைத் தலைவராகப் பணியாற்றினார்.

‘மதி’என்றொரு இலக்கிய இதழைத் தொடங்கி நடத்தினார். திருவரங்கத்தில் ‘தொல்காப்பியர்
நூலகம்’ ஒன்றை தொடங்கினார்.

இராசவேலு பகுத்தறிவுச் சிந்தனைகளால் கவரப்பட்டவர். தந்தை பெரியாரை தனது இல்லத்திற்கு
அழைத்து விருந்திட்டவர். 1969-இல் தி.மு.க சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று வார்டு
உறுப்பினர் ஆனார். பின்னர் அ.இ.அ.தி.மு.க.வில் இணைந்தார். 1974-இல் திருச்சி மாவட்ட
திருக்குறள் கழகத்தின் தலைவராகச் செயலாற்றினார்.

ஏழை எளிய, கல்வியறிவு பெறாதவர்களுக்காக வழக்காடக் கூடியவர்.

1989-இல் இவரது துணைவியார் எதிர்பாராத விதமாக காலமானார். அவருக்காக ஏராளமான
கவிதைகளை எழுதினார். அவை 16 நூல்களாக வெளிவந்துள்ளன. மேலும், இரண்டு நினைவு
மலர்களை வெளியிட்டுள்ளார். 1992-இல் ‘செண்பகத் தமிழரங்கு’ உருவாக்கி சனிக்கிழமை தோறும்
சான்றோர் பெருமக்களை அழைத்து சொற்பொழிவு நிகழ்த்தி வருகிறார். 1000-க்கும் மேற்பட்ட
கூட்டங்கள் நடைபெற்றுள்ளன. ஒவ்வொரு ஆண்டுவிழாவிலும் சிறந்த தமிழறிஞர் ஒருவருக்கு
‘தமிழ்மாமணி’ விருதினை அவரின் சிறிய தந்தை மகன் அமரர் து.கருணாநிதி நினை
வாகவழங்கப்படுகிறது. இவ்வமைப்பின் மூலமாக ஏராளமான நூல்கள் வெளியிடப் பட்டுள்ளன.

வழக்கறிஞர் பணி, அரசியல் ஈடுபாடு, குடும்பச் சூழல், உடல்நலக் குறைபாடு ஆகிய
வற்றிற்கிடையிலும் இடையறாது தமிழ்ப் பணி யாற்றி வரும் இராசவேலுக்கு திருத்தவத்துறை
அறநெறிக் கழகத்தின் ‘ஆசு கவியரசு’ விருது, பாவாணர் தமிழியக்கத்தின் ‘தமிழ் வளர்த்தவர்’
விருது ஆகியன வழங்கிச் சிறப்பிக்கப் பெற்றுள்ளார்.