புலவர் வே.பதுமனார்

புலவர் வே.பதுமனார்

Profession அறிஞர்

Biography

திருப்பத்தூரில், நெசவுத் தொழிலைக் குடும்பத் தொழிலாகக் கொண்ட சாமி வேலாயுதம் –
இராசம்மாள் தம்பதியர், பஞ்சம் பிழைக்க பெங்க ளூர்க்குக் குடிபெயர்ந்தனர். அங்கு 02.04.1936
அன்று வே.பதுமனார் பிறந்தார்.

பள்ளிப் படிப்பை பெங்களூர் செட்டிப்பாளையத்திலும், (தமிழகம் திரும்பி குடியேற்றம் எனும்
அம்மா பிறந்த ஊரில் குடியேறிய பிறகு) நல்லூர் பேட்டையிலும் முடித்தார்.

வாணியம்பாடி இசுலாமியக் கல்லூரியில் கணிதத்தில் பட்டம் பெற்றார். குடும்ப வறுமை
காரணமாக ஒரு சாயப் பொருள் விற்பனைக் குழுமத்தில் எழுத்தராக அறுபது ரூபாய் மாதச்
சம்பளத்தில் வேலையில் சேர்ந்தார். தந்தை வேலாயுதம் நெசவை விட்டு சிற்றுண்டிக் கடையை
வைத்ததால் வீட்டில் வறுமை சற்று குறைந்தது. கடன் சுமையும் குறைய ஆரம்பித்தது. அதன்பின்,
ஆர்க்காடு ஆசிரியர் பயிற்சி பள்ளியில் சேர்ந்து ஆசிரியர் பயிற்சித் தேர்வு முடிவில்
ஆங்கிலத்தில் மாவட்டத்திலேயே முதல் மாணவராகத் தேர்ச்சி அடைந்தார்.

1961-இல் குடியேற்றம் திருவள்ளுவர் பள்ளியில் 3-ம் வகுப்பு ஆசிரியராகப் பணியில்
சேர்ந்தார். பின்னர் 8-ம் வகுப்பு ஆசிரியரானார்.

1964-இல் பதுமனார் தனது 28-ஆவது வயதில் உறவுக்காரப் பெண்ணான ஜெயக்கொடியைத் திருமணம்
செய்துகொண்டார். இவர்களுக்கு பொற்கொடி, பவளக்கொடி என இரு மகள்களும், விசுவநாதன்
என்றொரு மகனும் பிறந்தனர்.

குன்றக்குடி அடிகளாரை நடுவராகக் கொண்ட பட்டிமன்றத்தில் இவரும் ஒரு பேச்சாளர் ஆனார்.

குடியேற்றம் பகுதியில் ‘இலக்கிய வளர்ச்சி மன்ற’ம் தொடங்கப்பட்டது. இம்மன்றத்தின் மூலமாகவே
கவிஞர் அப்துல் ரகுமானுக்கு ‘கவிக்கோ’ பட்டம் வழங்கப்பட்டது.

1994-இல் பணி நிறைவு பெற்றார். அதன் பிறகே புதிய புலங்களில் தமிழை நிலைநிறுத்தும்
பணியை முழுமையாக ஏற்றுக்கொண்டார். ‘பைந்தமிழ் இலக்கணம்’ எனும் நூலை வினா விடை வடிவில்
எட்டாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு எளிமையும் இனிமையும்
தோன்ற வடிவமைத்துத் தந்தார். அந்நூல் ஆண்டுக்கு ஐயாயிரம் படிகள் மாணவர்களைச் சென்று
சேர்ந்தது. அதன்பிறகு ‘பதுமனார் தமிழ்த் துணைவன்’ எனும் பெயரில் 11, 12-ஆம்
வகுப்புகளுக்கு நூல்களை உருவாக்கிக் கொடுத்தார்.

வே.பதுமனார் இதுவரை கவிதை நூல்கள்-2, கட்டுரை நூல்கள்-13, அகராதி-1, ஆன்மீகம்-3,
வரலாறு-3, நாடகம்- 1, திறனாய்வு-1, தமிழ்த் துணைவன்-4 என 25 நூல்களை எழுதியுள்ளார்.

இவரது தமிழ்ப் பணியைப் பாராட்டும் வகை யில் ‘புலவர் பெருமணி’, ‘பைந்தமிழ்ச் செம்மல்’,
போன்ற ஏராளமான விருதுகள் வழங்கப் பெற்றுள்ளார்.