| Profession | அறிஞர் |
|---|
தென்னாற்காடு அரும்பராம்பட்டு கிராமத்தில் ரா. அப்பாவு – ஆதிலெட்சுமி தம்பதியருக்கு
06.09.1935-இல் பிறந்தார்.
பேரூர்த் தமிழ்க் கல்லூரியில் ‘தமிழ் வித்வான்’, கோவை இந்தி பிரசார சபாவில் இளங்கலைக்கு
நிகரான ‘விஷாரத்’, சென்னைப் பல்கலைக் கழக அஞ்சல் வழியில் ஆங்கிலத்தில் இளங்கலை, திருச்சி
ஜமால் கல்லூரியில் ஆங்கிலத்தில் முதுகலை (1967) ஆகிய பட்டங்களையும், ஹைதராபாத் ஆங்கிலம்
மற்றும் மேலைநாட்டு மொழிகளுக்கான மத்திய நிறுவனத்தில் ஆங்கில மொழி கற்பித்தலில்
முதுகலைப் பட்டயம் (1978), சென்னைப் பல்கலைக்கழக ஆங்கிலத் துறையில் ஆய்வு செய்து
1981-இல் முனைவர் பட்டம், ஏ.எம்.ஐ.இ., எனும் பொறியியல் பட்டயம், திருச்சி வெங்கடேசுவரா
பல்கலைக் கழகத்தின் வாயிலாக 1982-இல் தமிழிலும் முதுகலை பட்டம் ஆகியவற்றைப் பெற்றார்.
வினோபா திருவண்ணாமலை செவிலிமேடு கூட்டத்தில் பேசியபோது, வினோபாவின் பேச்சை
தமிழிலும், மக்கள் கருத்தை இந்தியிலும் மொழியாக்கம் செய்த சிறப்புக்குரியவர்.
இடையந்தாங்கல் ஜெனந்நாத நாயுடு மகள் சரஸ்வதியைத் திருமணம் செய்து கொண்டார்.
இத்தம்பதியருக்கு ‘பிருந்தா’ என்றொரு மகள்; சீனிவாசன், ஜெகன்மோகன் என இரு மகன்கள்.
1959-இல் கோவை, யூனியன் உயர்நிலைப் பள்ளியில் முதல்நிலைத் தமிழாசிரியராகத் தம் பணியைத்
தொடங்கினார். பழனி ஆண்டவர் கல்லூரி, கோயம்புத்தூர் பி.எஸ்.ஜி. கல்லூரி, காஞ்சிபுரம்
பச்சையப்பன் கலைக் கல்லூரி, சென்னைப் பல்கலைகக் கழகத் தமிழ் மொழித்துறை ஆகியவற்றில்
ஆசிரியப் பணியாற்றினார். 1996-இல் பணிநிறைவு பெற்றார்.
‘இருபதாம் நூற்றாண்டின் இலக்கியக் கோட்பாடுகள்’ (திறனாய்வு), , ‘இலக்கிய ஒப்பாய்வு:
காப்பியங்கள்’, ‘உலகத் தமிழிலக்கிய வரலாறு’, ‘சங்க இலக்கியம்’, ‘இராமகாதையும்
இராமாயணங்களும்’, , ‘இராமகாதைக்குக் கம்பனின் நன்கொடை’ (ஒப்பாய்வு) ஆகிய நூல்களை
எழுதியதுடன், ‘அரிஸ்டாட்டில் கவிதை இயல்’, ‘போதனர்’, ‘இரவீந்திரநாத் தாகூர்’ ஆகிய
நூல்களை தமிழாக்கம் செய்துள்ளார். ‘தமிழ் பக்தி இலக்கியம்’ எனும் தொகுப்பு நூல்களையும்
வெளி யிட்டார்.
தமிழகத்தின் பெரும்பாலான பல்கலைக் கழகங்களில் ஆய்வுரைகளை இந்தியாவின் பல்வேறு
மாநிலங்களில் உள்ள பல்கலைக் கழகங்களில் ஆங்கிலத்தில் உரை நிகழ்த்தினார். உலக அளவில்
சிகாகோ, நார்த்வெஸ்டன், சவுத் கரோலினா, அமெரிக்கக் கத்தோலிக்க, நியூயார்க் ஆகிய பல்கலைக்
கழகங்கள் இவரால் பயன் பெற்றுள்ளன.
திராவிட மொழியியல் விருது, சேக்கிழார் (2000), புலவர் மாமணி (2011), சடையப்பர்
(2011), சரஸ்வதி சம்மான் (2012), கபிலர் (2012), கம்பன் கழகம் ஆகிய விருதுகளை
வழங்கப் பெற்றார். இவர் 01.12.2018 அன்று காலமானார்.