| Profession | எழுத்தாளர் |
|---|
நாமக்கல் பொன்னரிப்பட்டி பெருமாயி – குப்பணன் தம்பதியருக்கு 1935-இல் பிறந்தார்.
பள்ளிப் படிப்பை சொந்த ஊரில் முடித்து, வழக்கறிஞராகும் விருப்பத்துடன் சென்னைக்குச்
சென்றார். பேராசிரியர் மு.வ.வின் அறிவுரையின்படி ‘தமிழ் இலக்கியம்’ படித்தார்.
தோழர் ஆர்.கே.கண்ணன் தொடர்பு கிடைத்தது. அவரை குருவாக ஏற்றுக்கொண்டார். மாணவர்
இயக்கத்தில் ஈடுபட்டார். அதன் பின்னர் கவிஞர் தமிழ்ஒளி தொடர்பும் கிடைத்தது. கட்சி
வேலைகளிலும், விவசாயிகள் சங்கம், ஆலைப் பாட்டாளிகள் சங்கப் பணிகளிலும் நேரடியாக
ஈடுபட்டார். முக்கியமாக ‘சரஸ்வதி’ இதழ் விற்பனைக்குப் பாடுபட்டார். இ¢ப்படியாக
சின்னப்பபாரதியின் வாழ்க்கை என்பது இடதுசாரி இயக்கத்துடன் பின்னிப் பிணைந்து விட்டது.
தீண்டாமை, பண்ணை அடிமைத்தனம், சாதியக் கொடுமை ஆகிய அவலங்கள் எல்லாம் சிறு வயதிலேயே
சின்னப்ப பாரதியைப் பாதித்தன. இவை மார்க்சிய அறிவு பெறும் போது அழுத்தமான
எதிர்க்குரலாக இவரிடமிருந்து வெளிப்பட்டது.
பல்வேறு மக்களுடன் உழைப்புத் தளங்களில் பணியாற்றிய அனுவங்களை, அம்மக்களுக்கான போராட்ட
அனுபவங்களை உணர்வுபூர்வமாக உள்வாங்கிக் கொண்டதன் விளைவாக உழைக்கும் வர்க்கம் சார்ந்த
இலக்கியப் படைப்புகளை படைக்கத் தொடங்கினார்.
இருபதாம் நூற்றாண்டின் மிகச்சிறந்த இலக்கியப் படைப்புகளுள் ஒன்றாக கருதப்படும் இவரது
‘தாகம்’ நாவல் ஒடுக்கப்பட்ட தலித் மக்களையும், ‘சங்கம்’ நாவல் கொல்லிமலை மலைவாழ்
மக்களையும், ‘சர்க்கரை’ நாவல் சர்க்கரைத் தொழிலாளர் மற்றும் கரும்பு விவசாயிகளையும்,
‘பவளாயி’ நாவல் பவளாயி எனும் கிராமத்துப் பெண்ணையும், ‘தலைமுறை மாற்றம்’ நாவல் மூன்று
தலைமுறையினரையும், ‘சுரங்கம்’ நாவல் சுரங்கத் தொழிலாளர்களையும் மையமாகக் கொண்டு
உயிரோட்டமாக இவரால் படைக்கப்பட்டுள்ளன.
மேலும், ‘நிலவுடைமை எப்போது?’, ‘கு.சின்னப்ப பாரதி கவிதைகள்’ ஆகிய இரு கவிதை
நூல்களையும், ‘கிணற்றோரம்’, ‘தெய்வமாய் நின்றாள்’ என இரு காவியங்களையும், ‘தமிழகக்
கிராமியக் கதைகள்’, ‘அவள் எத்தனைக் குழந்தைகளுக்குத் தாயானாள்’, ‘கு.சின்னப்பபாரதியின்
சிறுகதைகள்’, ‘கௌரவம்’ ஆகிய நான்கு சிறு கதைத் தொகுதிகளையும், ‘தமிழக நாட்டுப்
பாடல்கள்’ எனும் கொங்கு நாட்டுப்புறப் பாடல் தொகுதி ஒன்றையும், ‘என் பணியும் போராட்டமும்’
எனும் தன்வரலாற்று நூலையும் எழுதியுள்ளார்.
இவரது படைப்புகள் 13 மொழிகளில் வெளிவந்துள்ளன. 11 ஆய்வாளர்கள் ஆய்வு செய்துள்ளனர்.
‘இலக்கியச் சிந்தனை’யின் வாழ்நாள் விருதைப் பெற்றுள்ளார். 13.06.2022 அன்று காலமானார்.