முனைவர் இரா.பழனிசாமி

முனைவர் இரா.பழனிசாமி

Profession அறிஞர்

Biography

இராசிபுரம் தெப்பம்பட்டியில் இராமலிங்கையா- பெத்தக்காள் தம்பதியருக்கு 15.07.1935 அன்று
பிறந்தார்.

இராசிபுரம் திருவேங்கடவிலாஸ் எலிமெண்டரி பாட சாலையில் பதினொரு வயது வரை பள்ளி
சென்றதுடன் தமிழ் மொழியைத் தனியாகக் கற்றுத் தேர்ந்தார். இவரது உறவினரான எஸ்.எஸ்.
இராஜேந்திரன் வழிகாட்டுதலில் சேலத்தில் உள்ள நாடகக் குழுவினர் நடத்தும் நாடகங்களில் பெண்
வேடமிட்டு நடித்தார். 14-ஆம் அகவையில் நாடகத்திற்குப் பாடல்கள் எழுதத் தொடங் கினார்.
1949-53 இல் ‘தேவி நாடகக் குழு’வில் இயங்கினார். 19-ஆவது வயதில் நடிகவேள்
எம்.ஆர்.ராதா நாடகக்குழுவில் இணைந்தார். எம்.ஆர்.ராதாவின் ‘சீர்திருத்த ராமாயணம்’
நாடகத்திற்குப் பாடல்கள் எழுதினார். ‘ராதாவும் ராமாயணமும்’ என்றொரு நூலை எழுதினார்.

எம்.ஜி.ஆர். வீட்டிலேயே சிறிது காலம் தங்கி, ‘நாடோடி மன்னன்’ கதை இலாகாவில்
பணியாற்றினார். ‘அரசிளங்குமரி’ திரைப்படத்தில் பாடல் எழுதும் வாய்ப்பை வழங்கினார்.
ஆர்.எஸ்.மனோகரின் ‘இலங்கேஸ்வரன்’, கலைஞரின் ‘உதயசூரியன்’, கே.ஏ.தங்கவேலு
நாடகங்களுக்கும் பாடல்கள் எழுதினார். பட்டுக்கோட்டையார் தாம் எழுத வேண்டிய படங்களுக்கு
நேரம் கிடைக்காதபோது இவரை சிபாரிசு செய்தார். அவ்வாறாக சௌபாக்கியவதி, உலகம்
சிரிக்கிறது, எல்லோரும் இந்நாட்டு மன்னர் ஆகிய படங்களில் பாடல்கள் எழுதலானார்.

ஆர்.எஸ்.மனோகருக்காக 1970-76 காலகட்டத்தில் சூரபத்மன், சேதிநாட்டரசன் சிசுபாலன்,
சுக்ராச்சாரியார், ஒட்டக்கூத்தர், சிவதாண்டவம் போன்ற புராண நாடகங்களை எழுதினார்.

‘அகத்தியர்’ திரைப்படத்திற்கு கதை, வசனம், பாடல்கள் எழுதினார். ‘காரைக்காலம்மையார்’
ராஜராஜ சோழன், திருமலை தெய்வம், ‘அஷ்ட லட்சுமி’ ஆகிய திரைப்படங்களுக்கு திரைக்கதை
வசனமும், ‘பிள்ளையார்’ திரைப்படத்திற்கு திரைக்கதை வசனத்துடன் பாடல்களும் எழுதினார்.
இவரது சிவபாலன், ஞானக்குழந்தை, பிள்ளையார் போன்ற திரைப்படங்கள் தெலுங்கில் மொழிமாற்றம்
செய்யப்பட்டன. ‘மஹா பலி’ என்ற மலையாள திரைப்படத்திற்கு திரைக்கதை எழுதினார்.
தமிழ்நாடு இயல் இசை மன்றத்திற்காக ‘பாரி பெற்ற பைங்கிளிகள்’ எனும் நகைச்சுவை நாடகத்தை
எழுதினார். நீ யார்?, குலபெண், வரவேற்பு, ராஜநடை போன்ற சமூக நாடகங்களையும்
எழுதினார். அறிஞர் அண்ணா, கலைஞர், எம்.ஜி.ஆர் ஆகியோரின் பாராட்டு களைப் பெற்றவர்.

‘கம்பர் காட்டிய வழி’, தாசியும் தபசியும்’ ஆகிய நாவல்கள் உட்பட 25 நூல்களை
எழுதியுள்ளார்.

இவரது மனைவியார் மீனாட்சி அம்மையார். பார்த்திபன், ரகுபதி என இரு மகன்கள்; கௌரி,
விஜயா என இரு மகள்கள். ‘கலைமாமணி’ உட்பட பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளார்.