பேராசிரியர் சுப.திண்ணப்பன்

பேராசிரியர் சுப.திண்ணப்பன்

Profession அறிஞர்

Biography

தேவகோட்டையில் பழ.தி.சுப்பிரமணியன் – ஆனந்தவல்லி ஆச்சி தம்பதியருக்கு 19.06.1935
அன்று பிறந்தார். இரண்டாவது வயதிலேயே தாயாரை இழந்தார். தந்தை வழி பாட்டி ஏகம்மை
இவருக்கு தாயாய் இருந்து வளர்த்து வந்தார்.

எஸ்.எஸ்.எல்.சி.யில் மாவட்டத்திலேயே தமிழில் முதல் மதிப்பெண் பெற்றார். 1959-இல் சென்னை
பச்சையப்பன் கல்லூரியில் தமிழ் பி.ஏ. ஹானர்ஸ் பட்டம் பெற்றார்.

பி.ஏ.படிக்கையில் (1959) இவருக்கும் உறவுப்பெண்ணான இந்திராளுக்கும் திருமணம்
நடைபெற்றது. இவர்களுக்கு இரண்டு மகன்கள்; ஒரு மகள்.

1959-இல் அதிராமபட்டினம் காதர் மொகைதீன் கல்லூரியில் தமிழ் பயிற்றுநராக ஆசிரியர்
பணியைத் தொடங்கினார். அடுத்த ஆண்டு அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தமிழ்த் துறையில்
விரிவுரையாளராகச் சேர்ந்தார். பகுதி நேரமாக ‘மொழியியல்’ பட்டயம் பெற்றார். 1967-இல்
மொழியியல் துறையில் இணைப் பேராசிரியராகப் பதவியுயர்வு பெற்றார். 1978-இல் பேரா.
ச.அகத்தியலிங்கனார் மேற்பார்வையில் ‘சீவக சிந்தாமணியின் மொழியமைப்பு’ எனும் தலைப்பில்
ஆய்வு மேற்கொண்டு முனைவர் பட்டம் பெற்றார். இடையில் 1969-72 இல் கோலாலம்பூரிலுள்ள
‘மலேயாப் பல்கலைக் கழக இந்திய ஆய்வுத்துறை’யில் 3 ஆண்டுகள் பணியாற்றினார். 1974-79 இல்
‘ஆய்வுக் கோவை’ப் பதிப்பாசிரியராகவும், 1969-72 இல் அனைத்திந்திய தமிழ் மொழி யியல்
கழக வெளியீடான ‘மொழியியல்’ ஆய்வு இதழின் துணையாசிரியராகவும், சில பல்கலைக்கழகப்
பாடத் திட்டக் குழு’க்களிலும், ‘தேர்வாளர் குழு’க்களிலும் உறுப்பினராக இருந்துள்ளார்.
சிங்கப்பூர் கல்விக்கழகத்தில் ஆசிய மொழித் துறையில் தமிழ்ப் பிரிவில் மூத்த
விரிவுரையாளராக 1982-இல் சேர்ந்து 1987-இல் அதன் தலைவர் ஆனார்.

1990-இல் நன்யாங் தொழில் நுட்பப் பல்கலைக் கழகத்தின் ஒரு பகுதி தேசிய கல்விக்கழகமாக
மாறியது. அதில் இணைப் பேராசிரியர் பதவி உயர்வும் கிடைத்தது.

சிங்கப்பூரின் முதல் முனைவர் பட்ட ஆய்வு மேற்பார்வையாளர் மற்றும் கல்வியியல் முதுநிலைப்
பட்ட மேற்பார்வையாளர் என்ற சிறப்புக்குரியவர். இவரது நெறியாள்கையில் நால்வர் முனைவர்
பட்டமும் இருவர் எம்.எட்., பட்டமும் பெற்றுள்ளனர். சிங்கப்பூர், கோலாலம்பூர் போன்ற நாடுகளில்
நடைபெற்ற ‘உலகத் தமிழா சிரியர் மாநாடு’களில் ஆலோசகராகவும், ஆய்வுக் குழுத்
தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.

‘தமிழ்க் கவிக்கோவை’ தொடங்கி ‘கணினியும் தமிழ் கற்பித்தலும்’ வரை ஏராளமான நூல்களை
எழுதியுள்ளார். ஏராளமான ஆய்வுக் கட்டுரைகளை உள் நாட்டு, வெளிநாட்டு இதழ்களில்,
தமிழிலும் பிற மொழிகளிலும் எழுதியுள்ளார். சிங்கப்பூரில் இவரது பவளவிழா – தமிழ்ப்பணி
பொன் விழா 09.05.2010 அன்று கொண்டாடப்பட்டது.

அருள்நெறிச் செல்வர், சைவ மாமணி, பெரியார் விருது, செம்மொழிச் செம்மல், வாழ் நாள்
நல்லாசிரியர் விருது, கணையாழி விருது, உட்பட பல விருதுகளைப் பெற்றுள்ளார்.