ச.மெய்யப்பன்

ச.மெய்யப்பன்

Profession பேராசிரியர்

Biography

புதுக்கோட்டை திருமெய்யம் இராமச்சந்திரபுரத்தில் குங்கிலியம் பழ.சண்முகனார் -மீனாட்சி
ஆச்சி தம்பதியருக்கு 21.06.1933 அன்று பிறந்தார். இயற்பெயர்: சத்தியமூர்த்தி.

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழ் ஆனர்ஸ் படித்து, 1957-இல் முதுகலைப் பட்டம் பெற்றார்.
அதே ஆண்டில் அதே பல்கலைக் கழகத்திலேயே ஆசிரியர் வேலை கிடைத்தது. அடுத்த சில
மாதங்களில் அவருக்குத் திருமணம் நடைபெற்றது.

31.12.1957-இல் மெய்யப்பனாருக்கும் ஆத்தங்குடி ‘மீனாட்சிக்கும், மொழிஞாயிறு
தேவநேயபாவாணர் தலைமையில் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு மீனாட்சிசுந்தரம் என்றொரு
மகனும், மீனாட்சி என்றொரு மகளும் உள்ளனர்.

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் 1957-இல் தொடங்கிய ஆசிரியர் பணி 36 ஆண்டு காலம் அங்கேயே
தொடர்ந்தது. 1993-இல் பணி நிறைவு பெற்றார்.

1996-இல் தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக ஆளவையில் மூன்றாண்டுகள் பதவி வகித்தார். ஆட்சிக்
குழுவிலும் 1998 தொடங்கி ஓராண்டு பதவி வகித்தார்.

மெய்யப்பனார் 13 நூல்களை எழுதியுள்ளார். இவர் சேகரித்து வைத்திருந்த 40,000 நூல்கள்
பொதுமக்களுக்குப் பயன்படும் நோக்கத்தில் 2000-இல் சிதம்பரத்தில் ‘மெய்யப்பன் தமிழ் ஆய்வகம்’
நிறுவினார்.

1961-இல் ‘மணிவாசகர் நூலகம்’ எனும் நூல் வெளியீட்டகத்தைத் தொடங்கியவர் 22 ஆண்டு
களுக்குப்பிறகு 1983- இல்’ மணிவாசகர் பதிப்பகம்’ எனப் பெயரை மாற்றினார். தமிழ்
உணர்வையும் தமிழார்வத்தையும தூண்டி தமிழ் வளர்ச்சிக்குத் துணை செய்யும் நூல்களை குறைந்த
விலைக்கு, பிழையற்ற செம்பதிப்பு நூல்களாக வெளியிட்டு வந்தார். ஏராளமான தமிழறிஞர்களின்
ஏராளமான நூல்களை வெளியிட்டுள்ளார். 70க்கும் மேற்பட்ட நூல்கள் பரிசுகளைப் பெற்றுள்ளன.

இவர் வெளியிட்ட ‘வெற்றித் துணைவன்’ உரை நூல்கள் (3 முதல் 12ஆம் வகுப்பு வரை) அமோக
வெற்றி பெற்று மணிவாசகர் பதிப்பகத்திற்கு பொற்காலத்தை ஏற்படுத்திக் கொடுத்தது. இவரது
பதிப்புலகப் பணியைப் பாராட்டி வ.சுப.மாணிக்கனார் ‘பதிப்புச் செம்மல்’ பட்டம் வழங்கினார்.
சென்னை கம்பன் கழகம் ‘சிறந்த பதிப்பாளர்’ பட்டத்துடன் ‘மர்ரே எம்.ராஜம் விருது வழங்கி
கௌரவித்தது. தருமபுரி ஆதினம் 2011-இல் ‘செந்தமிழ் காவலர்’ விருதுடன் ரூ.5000
பரிசும் வழங்கியது. மேலும் பல விருதுகளையும் பரிசுகளையும் வழங்கப் பெற்றுள்ளார்.

வாழ்க்கையில் பல்வேறு துறைகளிலும் அரும்பணியாற்றி வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்த
மெய்யப்பனார் 28.06.2004-இல் தெய்வீக வாழ்வு பெற்றார். அவரது பதிப்புப் பணியை அவரது
மகன் திரு. மீனாட்சிசுந்தரம் தொடர்ந்து வருகிறார்.