| Profession | அறிஞர் |
|---|
அரியலூர் சோழபுரம் சங்குந்தபுரத்தில் வே.வைத்தியலிங்கம்- அமிர்தம்மாள் தம்பதியருக்கு
23.11.1932-இல் பிறந்தார்.
குடந்தை அரசினர் கல்லூரியில் இடைநிலை கல்வியும், சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில்
தமிழ் சிறப்பு வகுப்பில் முதல் வகுப்பில் முதல் மாணவராகவும் தேர்ச்சி பெற்றார். 1959-இல்
அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தெ.பொ. மீனாட்சி சுந்தரனார் வழி காட்டுதலில் ஆய்வு செய்து
எம்.லிட் பட்டம் பெற்றார். 1967-இல் பேரா. அகத்தியலிங்கம் வழி காட்டுதலில் முனைவர் பட்டம்
பெற்றார்.
29.04.1959 அன்று சிதம்பரம் தனலட்சுமியைத் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு
வேலாயுதன் என்றொரு மகன், உமா என்றொரு மகள்.
1955-இல் பாலக்காட்டிலுள்ள விக்டோரியா அரசினர் கல்லூரியில் துணை நிலை
விரிவுரையாளராகப் பணியில் சேர்ந்தார். பின்னர் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த் துறை
ஆசிரியர் (டியூட்டர்) ஆனார். அதன்பின் மொழியியல் உயராய்வு மையத்தில் விரிவுரையாளராக
சேர்ந்து, இணைப் பேராசிரியர், பேராசிரியர், இயக்குநர் என 33 ஆண்டுகள் அங்கேயே
பணியாற்றினார்.
இங்கிலாந்து ரெடிங் பல்கலைக் கழகத்தில் 1972-1973இல் உயராய்வை மேற்கொண்டார்.
இந்தோனேசியாவின் ஜகார்த்தா பல்கலைக்கழகத்தில் வருகை தரும் இந்தியக் கல்வியியல்
பேராசிரியராக 1976-1978இல் பணியாற்றினார். மலேசிய நாட்டுப் பல்கலைக் கழகத்தில் இந்திய
கல்வித் துறையின் வெளிநாட்டு வல்லுநராக 1982 -1985இல் பணிபுரிந்தார்.
1992-இல் ஓய்வுக்குப் பிறகு மைசூர் இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனம், புதுச்சேரி
மொழியியல் பண்பாட்டு நிறுவனம், சென்னை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் ஆகியவற்றில்
முதுநிலை ஆய்வாளராக மானியம் பெற்று ஆய்வு நூல்கள் எழுதினார். சென்னை செம் மொழித் தமிழ்
ஆய்வு நிறுவனத்தின் ஆய்வாள ராகவும் பணிபுரிந்துள்ளார்.
தமிழில் 26, ஆங்கிலத்தில் 5 என 31 நூல்களை எழுதியுள்ளார். 4 நூல்களைப்
பதிப்பித்துள்ளார். ‘மொழி வளர்ச்சியும் மொழி உணர்வும்’ என்ற நூல் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்
கழகப் பரிசைப் பெற்றுள்ளது. ‘மலையாள மொழியின் முதல் இலக்கணம்’ மற்றும் ‘இலக்கண
உருவாக்கம்’ ஆகிய இரு நூல்களும் தமிழக அரசின் சிறந்த நூல்களுக்கான பரிசினைப்
பெற்றுள்ளன. ‘மலையாள மொழியின் முதல் இலக்கணம்’ எனும் நூல் மலையாளத்துக்கு மொழியாக்கம்
செய்யப்பட்டுள்ளது.
1998-இல் நெய்வேலி புத்தகக் கண்காட்சி ‘மொழியியல் வாழ்நாள் சாதனைச் சான்றிதழ்’, 2004-இல்
சிதம்பரம் உலகத் தமிழ் எழுத்தாளர் சங்கம் ‘மொழிஞாயிறு’ விருது, 2011-இல் ‘இராஜா சர்
அண்ணாமலை செட்டியார்’ விருது, 2012-இல் ‘பரிதிமாற் கலைஞர்’ விருது உட்பட பல்வேறு
விருதுகள் வழங்கிச் சிறப்பித்துள்ளன.