| Profession | பேராசிரியர் |
|---|
தஞ்சாவூர் பேராவூரணி ‘குருவிக்கரம்பை’யில் சுப்பையா தேவர்- சௌபாக்கியம் தம்பதியருக்கு
27.11.1930-ல் பிறந்தார். பரம்பரையாக நாட்டு மருத்துவத் தொழில் செய்யும் குடும்பம்.
1947-இல் இராசாமடம் உயர் நிலைப்பள்ளியில் படிக்கும் போது அங்கு வரும் ‘விடுதலை’
நாளிதழைத் தொடர்ந்து படித்தார். அதில் ‘குத்தூசி’ குருசாமி கட்டுரைகள் எழுதினார்.
இதனால் பெரியார் மீதும், ‘திராவிடர் கழகம்’ மீதும் ஈர்ப்பு உண்டானது.
வேலுவின் தாத்தா குமாரசாமித் தேவரும், ‘குத்தூசி’ குருசாமியின் தாத்தா சாமிநாத
முதலியாரும் நெருங்கிய நண்பர்கள். குடும்ப உறுப்பினர்கள் போல. குருசாமியின் தந்தைக்குப்
பெண் பார்த்து திருமணம் செய்து வைத்ததில் குமாரசாமித் தேவருக்கு முக்கியப் பங்கு உண்டு.
1948-இல் வேலு தனது உயர்நிலைப் படிப்பை பட்டுக்கோட்டையில் தொடர்ந்தார். அரைகுறை
நாத்திகரான அவரை பட்டுக்கோட்டை முழு நாத்திகராக்கியது. பள்ளிப் படிப்பை முடித்து
குத்தூசியாரின் வழிகாட்டுதலின்படி பச்சையப்பன் கல்லூரியில் ‘இண்டர்மீடியட்’ படித்தார்.
குருவிக்கரம்பைக்கு அருகிலுள்ள வீரியன் கோட்டை இராமாமிருதம் அம்மையாரை இவருக்கு
திருமணம் செய்து வைத்தனர். இவர்களுக்கு ரசியா என்றொரு மகள்; திருமாவளவன், சித்தார்த்தன்
என இரு மகன்கள்.
திருமணம் முடிந்து நான்காண்டுகள் மாமனார் வை.மாணிக்கம் மளிகைக் கடையில் வேலை செய்தார்.
பிறகு குருவிக்கரம்பையில் தனக்குச் சொந்தமான தென்னந்தோப்பையும், நிலங்களையும்
கவனிக்கலானார். பேராவூரணியில் ‘வேலு மெடிக்கல் ஹால்’ என்ற ஆங்கில மருந்துக் கடையையும்
நடத்தினார்.
தந்தை பெரியாரை தன் இல்லத்திற்கு அழைத்து விருந்து படைத்தார். அப்போது தன் மனைவிக்குக்
கட்டிய தாலியை தன் மனைவியின் விருப்பத்தோடு கழற்றித் தரச் செய்து, அதனைப் பகுத்தறிவு
இயக்கத்திற்கு நன்கொடையாகப் பெரியாரிடம் வழங்கினார். தன் பிள்ளைகளுக்கு சாதி மறுப்புத்
திருமணம் நடத்தினார்.
1963-இல் குத்தூசி குருசாமி திராவிடர் கழகத்திலிருந்து விலகி ‘சுயமரியாதை இயக்கம்’
கண்ட போது வேலுவும் வெளிவந்து அவருடன் தொடர்ந்து பணியாற்றினார்.
குத்தூசியார் மறைந்த பிறகு ‘குத்துசாமி குருசாமி’ என்ற வாழ்க்கை வரலாற்று நூலை வேலு
எழுதினார். இருபத்தேழு தமிழ் நூல் களையும், ஓர் ஆங்கில நூலையும் எழுதியுள்ளார்.
இவர் தனது எண்பதாவது வயதில் (03.03. 2010) மாரடைப்பால் காலமானார். அவரது
விருப்பப்படி உடல் ராமச்சந்திரா மருத்துவ மனை மாணவர்களின் ஆய்வுப் பணிகளுக்காக
ஒப்படைக்கப்பட்டது.