தமிழாய்வாளர் தி.முருகரத்தனம்

தமிழாய்வாளர் தி.முருகரத்தனம்

Profession அறிஞர்

Biography

சேலம் மாவட்டம், திருச்செங்கோடு வை.முருகேசன் -பாவாய் அம்மாளுக்கு 02.10. 1930 அன்று
பிறந்தார்.

இவரது தந்தை ஆவணக் களரியில் பணியாற்றியதால் அவரது பணி இடமாற்றத்திற்கேற்ப தருமபுரி,
எடப்பாடி, திருச்செங்கோடு போன்ற பகுதிகளில் இவர் கல்வி பயின்றார்.

சென்னை பச்சையப்பன் கல்லூரியில் 1953-இல் பி.ஏ. (ஆனர்ஸ்) பட்டம் பெற்றார். சேலம் நகராட்சி
கல்லூரியில் 1956-இல் தமிழாசிரியரானார். ஐந்து ஆண்டுகள் பணியாற்றிய பின் பணியிடை
விடுப்பு பெற்று சென்னைப் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து ‘ஆண்டாள் பாசுரங்கள் ஒரு மொழியியல்
நோக்கு’ என்ற தலைப்பில் ஆய்வு செய்து 1964-இல் எம்.லிட் பட்டம் பெற்றார். 1966-இல்
‘அகநானூற்றில் மொழிநடை’ என்ற தலைப்பில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றார். பல
பல்கலைக்கழகங்கள் நடத்திய மொழியியற் கோடைகாலப் பயிற்சிகளில் ஈடுபாட்டுடன் கலந்துகொண்டார்.
புனேவிலுள்ள தட்சிணக் கல்லூரி மொழியியல் சார்ந்த மேலாய்வுப் பயிற்சியில் பங்கேற்று
1964-இல் பட்டம் பெற்றார். பின்னர், சென்னைப் பல்கலைக்கழகத்தில் ‘மானிடவியல்’ சான்றிதழ்
படிப்பில் சிறப்புத் தகுதி பெற்றார்.

1956-66இல் சேலம், கோவை, சென்னைக் கல் லூரிகளில் பணியாற்றினார். 1969-இல் மதுரைப்
பல்கலைக்கழக திருக்குறள் ஆய்வகத் துறையில் தன் பணியைத் தொடர்ந்தார். அங்கு
பேராசிரியராகவும், திருக்குறள் ஆராய்ச்சியாளராகவும், தமிழியற்புலத் தலைவராகவும்
பணியாற்றி பணி நிறைவு பெற்றார்.

1981-இல் தொடங்கப்பட்ட தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் ‘தமிழ் வளர்ச்சித் துறை’யின் முதல்
இயக்குநராகப் பணி யாற்றினார். இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்குச் சென்று
அங்குள்ள தமிழர், தமிழ்க்கல்வி, பாடத்திட்டம், தமிழாசிரியர், எதிர்கால நிலை போன்றவற்றை
அங்குள்ள தமிழறிஞர்கள், பல்கலைக் கழகப் பேராசிரியர்கள், ஆட்சி அதிகாரத்தில்
இருப்பவர்களிடமிருந்து ஒரு மாதம் அயற் பணியாற்றி தகவல்களைத் திரட்டி வந்தார்.

மீண்டும் மதுரைப் பல்கலைக் கழகப் பணிக்குத் திரும்பினார். இடையில் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில்
5 மாத காலம் பதிவாளராகப் பணியாற்றினார்.

1984-இல் மதுரைப் பல்கலைக்கழகத்தில் திருக்குறள் ஆராய்ச்சிப் பேராசிரியராகச் சேர்ந்து,
தமிழ்ப் பேராசிரியராக, பின்னர் உயர்கல்வி ஆராய்ச்சித் தொடர்பான திட்ட ஒருங்கிணைப் பாளராக
1992 வரை பணியாற்றி பணிநிறைவு பெறும் வரை தமிழியற் புலத்தின் மேம்பாட்டுக்காகப்
பாடுபட்டார்.

இவரது நெறியாள்கையில் சிகாகோ பல்கலைக் கழக மாணவர் நார்மன் கட்லெர் உட்பட பலர் முனைவர்,
ஆய்வியல் நிறைஞர் பட்டம் பெற்றுள்ளனர்.

இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, இங்கிலாந்து, கனடா, மொரிசியல், அமெரிக்கா, ஸ்பெயின்,
ரஷ்யா, பின்லாந்து, எஸ்தோனியா, லாட்வியா ஆகிய நாடுகளுக்குப் பயணம் செய்துள்ளார்.