இரணியல் கலைத்தோழன்

இரணியல் கலைத்தோழன்

Profession அறிஞர்

Biography

குமரி இரணியல் மாங்குழியில் சா.ஆசீர்வாதம் -சாராள் தம்பதியருக்கு 03.01. 1930-இல்
பிறந்தார். இயற்பெயர் சாமுவேல். இரணியல் உயர் நிலைப் பள்ளியில் படிக்கையில் நாடகம், இசை
ஆகியவற்றில் இவரது ஈடுபாட்டை அறிந்த ஆசிரியர் கணபதி, “நீ கலைக்குத் தோழன்டா” என்று
பாராட்டினார். அன்றிலிருந்து ‘இரணியல் கலைத்தோழன்’ எனப் புனைப் பெயர் வைத்துக்கொண்டார்.

1965-இல் தாழக்குடி கிரேஸ் சுந்தரிபாய்-ஐ மணந்தார். இத்தம்பதியருக்கு இரண்டு மகள்கள்,
நான்கு மகன்கள்.

1955-இல் குறும்பனை புனித இன்னாசியார் நடுநிலைப் பள்ளி யில் ஆசிரியர் பணியில்
சேர்ந்தார். தனது நாடகக் கலைப் பணிக்கு ஆசிரியப் பணி இடையூறு அளிப்பதாக எண்ணி
1956-இல் அப் பணியிலிருந்து விலகினார். பொருளாதாரச் சிக்கலினால் 1958-இல் மீண்டும் அதே
பள்ளியில் ஆசிரியராகப் பணியேற்றார். முப்பது ஆண்டுகள் பணியாற்றி 1988-இல் பணி நிறைவு
பெற்றார். அதன் பிறகு எழுத்து, நாடகம் ஆகியப் பணிகளில் முழுமையாக ஈடுபட்டு
வருகிறார்.

இவர் எழுதிய புத்தகங்கள் ‘கன்னியாகுமரி மாவட்டமும் மலையாள நாடகக் கலையும்’, ‘குமரி
மாவட்டமும் நாடகக் கலையும்’, ‘தமிழ் நாடக வரலாற்றின் பிறப்பிடம்’, ‘கன்னியாகுமரி
மாவட்ட நாடக வரலாறு’ (இரண்டு தொகுதிகள்) , ‘குமரி மாவட்ட நாடகக் கலைஞர்கள்’ (இரண்டு
தொகுதிகள்) ஆகியனவாகும்.

முப்பத்தைந்து நாடகங்களுக்குத் திரைப்பட இசையில் பாடல்களும், ‘கிறிஸ்து பிறப்புக் கீதங்கள்’
என்ற பாடல் புத்தகத்தையும் எழுதி யுள்ளார்.

59 சமூக நாடகங்கள், 19 வரலாற்று நாடகங்கள், 22 கிறித்தவ நாடகங்கள், 10 மாணவர்
நாடகங்கள், 2 நகைச்சுவை நாடகங்கள் என 112 நாடகங்களைப் படைத்து மேடையேற்றியுள்ளார்.
மேலும், துப்பறியும் கதைகளையும், மாயாஜால, பேய்க் கதைகளையும் எழுதியுள்ளார். அவ்வப்
போது நாடகங்களில் நடித்துள்ளார்.

இவர் நடத்திய இதழ்கள் ரோஜா, நாடகக் கலை, நாடகத்திரை என்பனவாகும். சில இதழ் களின்
ஆசிரியர் குழுவில் பணியாற்றியுள்ளார்.

இவரது நாடகங்களை ஆய்வு செய்து பல ஆய்வு மாணவர்கள் முனைவர், இளமுனைவர் பட்டங்களைப்
பெற்றுள்ளனர்.

‘நாடகக் கலைவேந்தன்’, ‘அரங்கேற்றக் கலை மணி’, ‘கலைமுதுமணி’, ‘நாடகக் கலை மாமன்னன்’,
‘நாடக இயக்குநர் திலகம்’ ‘தி பெஸ்ட் டைரக்டர்’ போன்ற பல பட்டங்களைப் பெற்றுள்ள இவர்,
1997-இல் மாஸ்கோ மணி வர்மன் நினைவு விருது, 1997-இல் டெல்லி டாக்டர் அம்பேத்கர் பாரதீய
தலித் சாகித்திய அகடமி பெல்லோஷிப், 2000-இல் கவிஞர் தின விருது போன்ற பல
விருதுகளைப் பெற்றுள்ளார்.