மன்னர்மன்னன்

மன்னர்மன்னன்

Profession எழுத்தாளர்

Biography

புதுச்சேரியில், புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் – பழநியம்மாள் தம்பதியருக்கு 3.11. 1928
அன்று பிறந்தார். இயற்பெயர் கோபதி. பிரெஞ்சில் இளங்கலைப் பட்டம் பெற்றார்.

துணைவி: சாவித்திரி, மைந்தர்கள்: செல்வம், தென்னவன், பாரதி. மகள்: அமுதவல்லி.

மாணவப் பருவத்தில் ‘முரசு’ எனும் கையெழுத்து ஏட்டை வெளியிட்டார். இதை அக்கால பிரஞ்சு
ஆட்சி குற்றம் என்று வழக்குத் தொடுத்து தண்டித்தது. 1947-இல் அயலவர் ஆட்சி அகல வேண்டும்
என்பதற்கான போராட்டத்தில் பங்கேற்றமைக்காகப் பள்ளியிலிருந்து வெளியேற்றப்பட்டார்.

தம் தந்தையாரின் ‘குயில்’ இலக்கிய இதழ் வெளியீட்டிலும், பதிப்புத் துறையிலும், அச்சகப்
பொறுப்பிலும் முழுமையாக ஈடுபட்டார்.

பேரறிஞர் அண்ணா தொடங்கிய ‘திராவிட முன்னேற்றக் கழக’த்தில் புதுவை மாநிலக் கிளையை
முதன் முதலில் 1949-இல் தோற்று வித்த நிறுவனர்களில் ஐவரில் மன்னர் மன்னன் ஒருவர்.

1954-இல் தாயகத்துடன் புதுவை மாநிலம் இணைவதற்கான போராட்டத்தில் ஈடுபட்டுப்
புதுவையினின்று வெளியேறி, விடுதலைக்குப் பின்னர் தந்தையின் கவிதைப் பணிக்கு
உறுதுணையாக அமைந்தார்.

1964-இல் தந்தையாரின் மறைவுக்குப் பின்னர், வானம்பாடி, தமிழ்முரசு, வழிகாட்டி முதலான
இதழ்களை வெளியிட்டார். பாரதிதாசனின் ‘குயில்’ இலக்கிய இதழ் இவரின் எழுத்துத்
திறனுக்கும் தமிழுணர்வுக்கும் சான்றாகும்.

1965-இல் இந்தித் திணிப்பை எதிர்த்து நடைபெற்ற போராட்டத்தின்போது 45 நாட்கள் சிறைவாசம்
ஏற்றார். 1968-இல்அனைத்து இந்திய வானொலியின் புதுவை நிலைய எழுத்தர் பணியில் சேர்ந்தார்.

இருபதாண்டுகள் உழைத்து தமது தந்தையாரைப் பற்றிய ‘கறுப்புக் குயிலின் நெருப்புக்
குரல்’எனும் வரலாற்று ஆய்வுநூலை எழுதினார். மேலும், ‘பாவேந்தர் இலக்கியப் பாங்கு’,
‘பாவேந்தர் வாழ்க்கைப் பாங்கு’, ‘பாவேந்தர் படைப்புப் பாங்கு’ ஆகிய நூல்களையும் படைத்
துள்ளார். இவரது கவிதைகள் ‘ஒளிப்பூக்கள்’ என்ற பெயரில் பல தொகுப்புகளாக வெளி வந்துள்ன.
இவரின் சிறுகதைத் தொகுப்பு ‘நெஞ்சக் கதவுகள்’. இந்நூல் தமிழக அரசின் இரண்டாம் பரிசைப்
பெற்றது. ‘பாவேந்தரின் இலக்கியப் பாங்கு’ எனும் நூல் புதுவை அரசின் ரூ.5,000 பரிசு
பெற்றது. இவ்வறாக 41 நூல்களைப் படைத்துள்ளார். தமிழக அரசின் ‘கலைமாமணி விருது’,
‘திரு.வி.க. விருது’ புதுவை அரசின் ‘கலை மாமணி’ விருது ஆகியவற்றைப் பெற்ற
சிறப்புக் குரியவர்.

புதுவைப் பல்கலைக் கழகத்தில் தமிழியல் துறையில் கருத்துரைஞராகப் பணிபுரிந்தார்.
புதுவைத் தமிழ்ச் சங்கம் 1967-இல் தோன்றிய காலந்தொட்டு, அதன் பல்வேறு முதன்மைப்
பொறுப்புகளில் பணியாற்றினார். இவர் 6.7.2020-இல் புதுச்சேரியில் காலமானார்