ஆ.வே.இரா. கிருட்டிணசாமி

ஆ.வே.இரா. கிருட்டிணசாமி

Profession ஆர்வலர்

Biography

நாமக்கல் மாவட்டம், ஆலத் துடையான்பட்டியில் வசித்த ஏ.வெங்கடாசலம் – செல்லம்மாள்
தம்பதியருக்கு 11.04.1928-இல் பிறந்தார்.

1943-இல் எட்டாம் வகுப்பு வரையே படித்து, ஒன்பதாண்டு உழவுத் தொழிலுக்குப் பிறகு
பன்மொழிப் புலவர் த.சி. சகந்நாதன் தூண்டுதலில் 1953-இல் திருவையாறு அரசர் கல்லூரியில்
சேர்ந்து 1957-இல் தேர்ச்சி பெற்றார்.

அதே ஆண்டு வைரி செட்டிப்பாளையம் சுவாமி விவேகானந்தர் வித்தியாலயா உயர்நிலைப் பள்ளியில்
தமிழாசிரியர் பணியில் சேர்ந்தார். இப்பள்ளியிலேயே 32 ஆண்டுகள் பணியாற்றி 1989-இல் பணி
நிறைவுப் பெற்றார்.

10.02.1960 அன்று தனம் என்பவருடன் இல்லறம் ஏற்றார். இவர்களுக்கு திருவள்ளுவன்,
தொல்காப்பியன் என இரு மகன்கள்.

1975இல் ஆலத்துடையான் பட்டியில் சொந்த வீடு கட்டி ‘தமிழகம்’ எனப் பெயரிட்டு அதில்
குடியேறினார்.

குறள், இலக்கிய ஆய்வு, பா, நாடகம், தன்னம்பிக்கை, பயணம் ஆகிய துறை சார்ந்த பல நூல்களை
எழுதினார்.

1996-இல் சென்னை வள்ளுவர் கோட்டம் முன்பு முனைவர் தமிழண்ணல் தலைமையில் தமிழை ஆட்சிமொழிச்
சட்டத்தை நிறைவேற்றக் கோரியும், ஆங்கில ஆதிக்கதை ஒழிக்கக் கோரும் தமிழறிஞர்களும்,
தமிழார்வலர்களும் மேற் கொண்ட சாகும் வரை உண்ணாநோன்பில் பங்கேற்றார்.

அதன்பின் அதே கோரிக்கையுடன் ஆங்கில வழி மழலையர் பள்ளிகளை ஒழிக்கக் கோரியும்
கி.ஆ.பெ.விசுவநாதம் தலைமையில் சட்டமன்றத்தின் முன் நடைபெற்ற மறியலுக்கான பேரணியில்
பங்கேற்று கைது செய்யப்பட்டார்.

1994-இல் அந்தமான் தீவில் நடைபெற்ற வி.ஜி.பி. உலகத் தமிழ்ச் சங்கத்தின் இரண்டாம் மாநாட்டில்
பங்கேற்றார். அதற்கான கப்பல் பயணத்தின்போது நடைபெற்ற மாறுவேடப் போட்டியில் ‘இரத்தக் கண்ணீர்’
திரைப்படத்தில் எம்.ஆர்.இராதா மேற்கொண்ட தொழு நோயாளியாக வேடமிட்டு, அவரது பேசும்
வசனத்தையே மாற்றி தமிழனுக்குத் துரோகம் செய்ததினால் தான் இப்படி நோயாளியாகி விட்டேன்
என நீண்ட வசனம் பேசி பலரின் பாராட்டைப் பெற்றார்.

கண்ணியம், வள்ளுவர் வழி, கவிக்கோலம், முகம் போன்ற இதழ்கள் இவரது படத்தை அட்டையில்
வெளியிட்டு வாழ்க்கைக் குறிப்பை வெளியிட்டு சிறப்பித்துள்ளன.

1995 முதல் ஆண்டுதோறும் சனவரி 26 அன்று தமிழ் தியாகிகள் நினைவாக உண்ணா, உரையா
நோன்பிருந்தார். 85-ஆம் வயதில்கூட 25-க்கும் மேற்பட்ட இலக்கிய நிகழ்ச்சிகளில் கலந்து
கொண்டவர், 12.07.2014 அன்று 86-வது வயதில் இன்னுயிர் ஈந்தார்.