| Profession | எழுத்தாளர் |
|---|
திருச்சி முசிறியில் வசித்த யக்ஞ நாராயணன் – மீனாட்சி அம்மாள் தம்பதியருக்கு 5.11.1925
அன்று இராஜம் பிறந்தார். தந்தையார் உயர்நிலைப் பள்ளி கணித ஆசிரியர். எனினும் இவருக்கு
முறையான கல்வி கிடைக்கவில்லை.
இராஜம் எனும் இயற்பெயர் கொண்ட இவர் தனது 15-ஆவது வயதில் (1940-இல்) முத்து கிருஷ்ணன்
என்ற பொறிஞரை மணந்து இராஜம் கிருஷ்ணன் ஆனார்.
சிறு வயதிலேயே புத்தகம் படிப்பதில் பேரார்வம் கொண்டிருந்த இவர், 1946-இல் ஆங்கிலத்தில்
‘போனஸ்’ என்றொரு சிறுகதையை ‘மித்ரா’ என்ற புனைபெயரில் எழுதினார். அக்கதை ‘இந்தியன்
விமன் ஆக்ஸிலரி கார்பல் ஜர்னல்’ என்ற ஆங்கில இதழில் வெளி வந்தது.
இவர் தமிழில் எழுதிய முதல் கதை ‘வெள்ளி டம்ளர்’. எழுத்தாளர் ‘சாவி’ தொடங்கிய
‘வெள்ளிமணி’ வார இதழில் வெளிவந்தது. தொடர்ந்து ‘சுதேசமித்திரன்’, ‘கலைமகள்’,
‘கல்கி’, ‘ஆனந்த விகடன்’, ‘குமுதம்’, ‘மஞ்சரி’ போன்ற பல இதழ்களில் எழுதினார்.
ஒரு புதினத்திற்கான கருப்பொருளை முன்பே திட்டமிட்டு சம்பந்தப்பட்ட இடங்களுக்குப் பயணம்
செய்து அங்கேயே தங்கி அவ்வாழ்க் கையை உள்வாங்கி புதினமாக எழுதுவார். இந்த வகையில்
இவருடைய புதினங்கள் தனித்தன்மை வாய்ந்தவையாக உள்ளன.
44 புதினங்கள், 11 குறுநாவல்கள், 5 சிறுகதைத் தொகுப்புகள், 1 சிறுவர் கதை நூல், 4
ஆய்வு நூல்கள், 5 கட்டுரைத் தொகுதிகள், 1 வாழ்க்கை வரலாற்று நூல், 1 மொழிபெயர்ப்பு நூல்,
இன்னும் 2 நூல்களையும் எழுதியுள்ளார்.
இடதுசாரி கண்ணோட்டம் கொண்ட இவரது நாவல்களில் நடுத்தரக் குடும்பம், பெண் தொழிலாளர்,
மீனவர், உப்பளத் தொழிலா ளர்கள், தஞ்சை உழவர்கள், குழந்தைத் தொழிலா ளர்கள் ஆகியோரின்
வாழ்க்கைப் பிரச்சனைகளும், தேச விடுதலையும் கருப்பொருட்களாகக் கொண்டிருந்தன.
சோவியத் ரஷ்யா, செக்கோஸ்லேவியா, இலங்கை ஆகிய நாடுகளுக்கு எழுத்தாளராகச் சென்று
நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டிருக்கிறார்.
முதுமையில் பொருளாதார நெருக்கடியிலும் ஆதரவின்மையாலும் சிக்கித் தவித்த ராஜம்
கிருஷ்ணனின் நூல்களை, உயிரோடு இருப் பவரின் நூல்களை அரசுடைமை ஆக்குவதில்லை என்பதையும்
கடந்து அரசுடைமையாக்கி ரூ. 3 லட்சம் அவருக்கு தமிழ்நாடு அரசு வழங்கியது.
அவரது எழுத்துலகச் சாதனையைப் பாராட்டி சென்னையில் 01.02.2014 அன்று ஒரு விழா
நடத்தப்பட்டது. எவ்வித சுயநினைவும் இல்லாமல் சாய்வு நாற்காலியில் உட்கார்ந்திருந்தார்.
20.10.2014-இல் காலமானார். அவர் விருப்பப்படி அவரது உடல் ராமச்சந்திரா
மருத்துவமனைக்கு தானம் செய்யப்பட்டது. இராஜம் கிருஷ்ணன் தனது எழுத்தை மட்டுமல்ல, இறந்த
உடலையும் மக்கள் சேவைக்கே அர்ப்பணித்துள்ளார்.