பேராசிரியர் இரா.சாரங்கபாணி

பேராசிரியர் இரா.சாரங்கபாணி

Profession அறிஞர்

Biography

கடலூர், தேவன்குடி கிராமம், இராசகோபால் மழவராயர் – சனமாலிகை தம்பதியருக்கு
18.9.1925 அன்று பிறந்தார்.

தலையில் குடுமியுடன் தொடக்கக் கல்வியை தேவன்குடி, குடுமிமலை, புவனகிரி ஆகிய
ஊர்களில் கற்றார்.

சிதம்பரம் மெய்கண்ட வித்தியாசாலையில் 1943 இல் புகுமுக வகுப்பில் தேர்ச்சி
பெற்றார்.அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் 1947-இல் புலவர் பட்டமும், 1949-இல் பி.ஓ.எல்.
பட்டமும் பெற்றார். அதே காலகட்டத்தில் சென்னைப் பல்கலைக்கழகத்தில் பி.ஓ.எல். (ஆனர்சு)
தேர்விலும் வெற்றி பெற்று, எம்.ஏ. பட்டம் பெற்றார். ஆய்வு செய்து 1962-இல் எம்.லிட்
பட்டமும், ‘ பின் சென்னைப் பல்கலைக் கழகத்தில் முனைவர் பட்டமும் பெற்றார்.

1949-இல் தாம் பயின்ற அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் உரையாளராகப் பணியில் சேர்ந்தார்.
அவ்வாண்டிலேயே அழகப்பா கல்லூரித் தமிழ்த் துறையில் உரையாளராகப் பணி ஏற்றார். பின்னர்
அக்கல்லூரியிலேயே விரிவுரையாளராகவும், இளங்கலைப் பேராசிரிய ராகவும் உயர்வு பெற்றார்.
1970இல் முதுகலை பேராசிரியராகவும், துறைத்தலைவராகவும் 12 ஆண்டுகள் சிறப்பாகப்
பணியாற்றினார். அக்கல்லூரியிலேயே 1979 முதல் 3 ஆண்டுகள் உயர்கல்வி மைய இயக்குநராகவும்
பணியாற்றி னார். 1982இல் விருப்ப ஓய்வு பெற்று, தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகத்தில்
நான்காண்டுகளும், அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் ஆறாண்டுகளும் சிறப்புநிலைப்
பேராசிரியராகப் பணியாற்றினார்.

15.6.1949-இல் சாரங்கபாணியார் லக்குமி அம்மையாரை கைத்தலம் பற்றினார். இவர் களுக்கு
‘அந்துவன்’ என்றொரு மகன்.

இரா.சாரங்கபாணியார் 18 நூல்களை எழுதியுள்ளார். இவற்றில் தமிழ்நாடு அரசின் சிறந்த
நூலுக்கான விருதை 1975-இல் ‘பரிபாடல் திறன்’ என்ற நூலுக்கும், 1999-இல் ‘மாணிக்கச்
செம்மல்’ என்ற நூலுக்கும் பெற்றார். ‘இயற்கை விருந்து’, ‘குறள் விருந்து’, ‘பரிபாடல்
திறன்’, ‘சித்தர் இலக்கியங்களில் திருக்குறள்’ என்னும் நூல்கள் தமிழ் நாடு மட்டுமன்றிக்
கேரளப் பல்கலைக் கழகத்திலும் பாடநூல்களாக உள்ளன.

1981இல் குன்றக்குடி ஆதினத்தின் ‘பெரும் புலவர்’ பட்டத்துடன் கூடிய ‘கபிலர் தங்கப்
பதக்கம்’, சென்னை சீராம் நிறுவனத்தின் ‘பொற் கிழி’, உலகத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின்
‘குறள் நெறிக் காவலர்’ என்ற பட்டம், 2000-இல் மதுரை காமராசர் பல்கலைக் கழகம் ‘தமிழ்ப்
பேரவைச் செம்மல்’ பட்டம் வழங்கின. தமிழக அரசின் உயரிய விருதான ‘திருவள்ளுவர் விருது’
1998-இல் வழங்கப்பெற்றார். 80-ஆவது அகவை விழாவில் தன் மகன் தனக்கு அளித்த ஒரு லட்சம்
ரூபாயை சேத்தியாதோப்பு உயர்நிலைப் பள்ளி வளர்ச்சிக்கு நன்கொடையாகக் கொடுத்தார்.
23.08.2010 அன்று திருவோண நன்னாளில் இயற்கை எய்தினார்.