பி.எல்.சாமி

பி.எல்.சாமி

Profession எழுத்தாளர்

Biography

பி.எல்.சாமி, கோவையில் தூயமைக்கேல் பள்ளி வரலாற்று ஆசிரியராகப் பணியாற்றிய பெரிய
நாயகத்தின் மகனாக 10.02.1925-இல் பிறந்தார். இயற் பெயர்: லூர்துசாமி.

கடலூர், மஞ்சக்குப்பம் தூய வளனார் பள்ளியில் பத்தாம் வகுப்புவரை படித்தார். திருச்சி தூய
வளனார் கல்லூரியில் தாவரவியலில் இளம் அறிவியல் பட்டம் பெற்றார்.

சில ஆண்டுகள் ஆசிரியராகவும், பின்னர் அஞ்சல் துறையிலும் பணிபுரிந்தார். இந்திய ஆட்சிப்
பணியில் தேர்வு பெற்று புதுவை அரசில் கல்வி அதிகாரியாகவும், வட்டார வளர்ச்சி
அலுவலராகவும் பணியாற்றி னார்.

பி.எல்.சாமி தொடக்கத்தில் காதல் கவிதைகள் எழுதி, அக் கவிதைகளை பன்மொழிப் புலவர்
கா.அப்பாதுரையாரிடம் சென்று காட்டினார். அவர், “நீர் ஓர் அறிவியல் பட்டதாரி. அறிவியல்
பற்றி நல்ல கட்டுரைகள் எழுதும். காதல் கவிதைகள் எழுதுவதற்கு தமிழ் நாட்டில் எத்தனையோ
பேர் இருக்கிறார்கள்” என்றாராம். அவ்வழியில் சாமி 1945-46 இல் ‘செந்தமிழ்ச் செல்வி’
இதழில் அறிவியல் கட்டுரைகள் எழுதத் தொடங்கினார். ‘தினமணி’, ‘குயில்’, ‘தினமலர்’,
‘ஆராய்ச்சி’, ‘அமுதசுரபி’ இதழ்களில் இவரது கட்டுரைகள் வெளிவந்தன. உலகத்தமிழ்
மாநாடுகளில் கட்டுரைகள் வாசித்தார்.

தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் அறிவியல் களஞ்சியங்களை தொகுக்கும் தலைமைப்
பதிப்பாசிரியராக செயலாற்றினார். முதல்தொகுதியைச் சிறப்பாகப் பதிப்பித்து வெளியிட்டார்.
உடல்நலம் குன்றியதால் அப்பணியிலிருந்து விலகினார். தொடர்ந்து கட்டுரைகள் எழுதினார்.

சங்க இலக்கியங்களை அறிவியல் பார்வையில் ஆய்வு செய்து தமிழறிஞர்களை வியப்பில் ஆழ்த்தினார்.
‘சங்க இலக்கியத்தில் செடி கொடி விளக்கம்’, ‘சங்க இலக்கியத்தில் விலங்கின விளக் கம்’,
‘சங்க இலக்கியத்தில் புள்ளின விளக்கம்’, ‘தமிழிலக்கியத்தில் தாய்த் தெய்வ வழிபாடு’,
‘கம்பன் காவியத்தில் உயிரினங்கள்’, ‘சங்க நூல் களில் மீன்கள்’, ‘சங்க நூல்களில் மணிகள்’
‘இலக்கியத்தில் அறிவியல்’, ‘சங்க நூல்களில் விந்தைப் பூச்சி’, ‘இலக்கிய ஆய்வு’
(அறிவியல்), ‘தமிழ் நாட்டில் சிந்துவெளி எழுத்தோவியம்’, ‘சங்க நூல்களில் முருகன்’,
‘இலக்கியத்தில் அறிவியல் கலை’ ஆகியன இவரது நூல்கள் ஆகும்.

பி.எல்.சாமி எழுதிய நூல்கள் அனைத்தும் பெரும் மதிப்புடையவை. , ஆராய்ச்சி மாணவர்கள்
கைகளில் தவழ வேண்டியவை. கல்லூரி, பள்ளி பொது நூலகங்கள் அனைத்திலும் இடம்பெறத்தக்கவை.

உலகப் பண்பாட்டு இயக்கம் இவரது தமிழ்ப் பணியைப் பாராட்டி 1981இல் ‘சங்க நூல் பேரறிஞர்’
பட்டம் வழங்கிச் சிறப்பித்தது.